வெண்முதுகுக் கழுகு (அல்லது வெண்முதுகுப் பிணந்தின்னி கழுகு, வெண்முதுகுப் பாறு) என்பது ஆக்சிபிட்டிரிடே என்ற பறவைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தொல்லுலகப் பாறு ஆகும். 1990-கள் வரையில் தெற்காசியா, தென்கிழக்காசியாவில் பெரும் எண்ணிக்கையில் காணப்பட்ட இவ்வினம் தற்போது பேரிடரிலுள்ள உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விலங்குகளுக்கு அளிக்கப்படும் டைக்ளோபீனாக் (diclofenac) என்ற மருந்தை உட்கொண்ட விலங்குகளின் கழியுடலை உண்பதனால் இவற்றின் எண்ணிக்கையில் மீவிரைவு வீழ்ச்சி ஏற்பட்டது என்று கூறப்படுகின்றது. இந்த இனம் மிக அருகிய இனம் என்ற அறிவிப்பை சிவப்புப் பட்டியல் அறிவித்துள்ளது.
உடலமைப்பு
வளர்ந்த பறவையின் நீளம் 75 முதல் 85 செ.மீ. வரை இருக்கும்; இறக்கை நீட்டம் 1.92 முதல் 2.6 மீ. வரையும் எடை 3.5 முதல் 7.5 கி.கி. வரை இருக்கும்.
வளர்ந்த பாறு
கருப்பு கலந்த நிறத்தில் வெள்ளைப் பின்புறம் மற்றும் முதுகுப்பகுதி கொண்டது; வெண்மையான கீழ் இறக்கை இறகுகள் கொண்டது. தலை இறகுகளற்றது; குட்டையான வால் இறகுடன் அகன்ற சிறகுகளைக் கொண்டது. உடலின் கரும்பழுப்பு நிறத்துடன் சேர்த்து காணும்போது முதுகுப் பிட்டம் மற்றும் சிறகின் அடிப்பகுதியின் வெண்மை தெளிவாகத் தெரியும். நாசித் துவாரங்கள் வெட்டியது போல இருக்கும். அலகு கூர்மையாக கிழிக்கும் தன்மையுடன வெள்ளீயம் போலக் காணப்படும்.
இளைய பறவை
கரும்பழுப்பு நிறத்தில் கோடுகளுடைய கீழ் பாகங்கள் மற்றும் மேல் இறக்கை, கருத்த பின்புறம் மற்றும் முதுகுப் பகுதி கொண்டது; வெள்ளை கலந்த தலையும் கழுத்தும் கொண்டிருக்கும். அலகு முழுவதும் கருமையாக இருக்கும்; பறக்கும்போது கீழ் உடம்பும் கீழ் இறக்கைகளும் தெளிவான கருப்பு நிறத்தில் காணப்படும்.
எண்ணிக்கையில் சரிவு
இந்தியத் துணைக்கண்டத்தில்
1939ஆம் ஆண்டில் வெளிவந்த பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் சஞ்சிகை ஒன்றில் ஆலிசு பான்சு என்பார் வெளியிட்டிருந்த குறிப்பில் தாம்பரத்தைச் சுற்றியுள்ள பகுதியில் காணப்பட்ட பறவைகளின் பட்டியலில் வெண்முதுகுப் பாறுகள் அப்பகுதியிலேயே நிரந்தரமாகத் தங்கியிருக்க வாய்ப்புள்ளதையும் அப்பறவைகளுள் எட்டு அருகிலுள்ள பகுதியில் ஒரு பனை மரத்தில் தங்கியிருந்ததாகவும் எழுதியுள்ளார்.