இரட்டைவால் குருவி அல்லது கரிக்குருவி (ஒலிப்பு (உதவி·தகவல்)) (Black Drongo, Dicrurus macrocercus) என்பது ஆசியக் கண்டத்தைத் தாயகமாகக் கொண்ட ஒரு சிறு பாடும் பறவை. இப்பறவை கரிச்சான், காரி, கருவாட்டு வாலி என்றும் அழைக்கப்படும். திவ்யப் பிரபந்தங்களில் வழங்கப்படும் ஆனைச்சாத்தன் என்ற பெயரும் இப்பறவையைக் குறிப்பதே என மா. கிருட்டிணன் குறிப்பிட்டுள்ளார். இது தெற்காசியாவின் பெரும்பாலான பகுதிகளில் அதாவது தென் மேற்கில் ஈரான் தொடங்கி இந்தியா, இலங்கையிலும் கிழக்கில் சீனா, இந்தோனேசியா வரையிலும் காணப்படுகின்றது.
இப்பறவை முழுவதும் கருப்பு நிறத்திலும் வால் பகுதி நுனியில் இரண்டாகப் பிரிந்தும் இருக்கும். வாலின் நீளம் ஏறத்தாழ 28 செ.மீ இருக்கும். பூச்சிகளை இரையாகக் கொள்ளும் இப்பறவை பொதுவாக திறந்தவெளியான வேளாண்மை நிலங்களிலும் அடர்த்தியற்ற காடுகளிலும் வசிக்கறது. இவை பயமற்ற பறவைகளாகும். இதன் கூட்டின் எல்லைக்குள் வரும் தன்னை விடப்பெரிய பறவைகளைக் கூட இப்பறவை தாக்கும் குணம் கொண்டது.