தகைவிலான் அல்லது தகைவிலாங் குருவி (Barn Swallow – Hirundo rustica) இவ்வகை பறவைகளில் அதிகம் பரவலாகக் காணப்படும் ஒன்றாகும். இதைத் தரையில்லாக் குருவி என்றும் கூறுவர். மிக அரிதாகவே தரையிறங்கும் இப்பறவை, சளைக்காமல் பறந்து கொண்டும் உயர்மின் கம்பிவடங்களில் கூடுவதுமாகவும் இருப்பதால் இதற்கு இப்பெயர் பொருந்தும்.
உடல் தோற்றம்
ஊர்க்குருவியின் அளவுடையது; 18 செ.மீ நீளமுள்ளது. மேல் சிறகுத்தொகுதி பளபளப்பான அடர்நீல நிறமும் செம்பழுப்புக் கழுத்தும் வெண்ணிற அடிப்பகுதியும் கொண்டு பிளவுண்ட வாலும் உடையது; பறக்கும் போது அடிப்பகுதியை நோக்கினால் வாலில் கொடி போன்று வெண்புள்ளிகள் தென்படும்.
உட்பிரிவுகள்
தமிழ்நாட்டில் காணப்படும் Hirundo rustica gutturalis என்ற தகைவிலான் இமயமலைத் தொடரில் இனப்பெருக்கம் செய்யும் கிழக்குத் தகைவிலான் உட்பிரிவாகும். இந்தியாவிற்கு வரும் இன்னொரு உட்பிரிவான (Hirundo rustica tytleri) என்ற டைட்லர் தகைவிலான் வங்காளம், அசாம் ஆகிய இடங்களில் காணப்படும். இந்த பறவை மதுரைப்பகுதிக்கு மழைக்காலத்திற்கு முந்தியே வரத்துவங்குகின்றன. இதன் வலசை அதிகமாக இருந்தால் அந்த ஆண்டு மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கள இயல்புகள்
ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் வரத்தொடங்கும் தகைவிலான் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தான் தம் இனப்பெருக்க உறைவிடங்களான இமயமலைத் தொடருக்கு வலசை போகும். மாலை வேளைகளில் பெருந்திரளாக இவற்றைக் காணலாம். நாணல் கதிர்கள் நிறைந்த ஏரிகள், வயல்கள் ஆகிய இடங்களில் அங்கும் இங்குமாக வேகமாகப் பறந்தபடியே பூச்சிகளைப் பிடித்து உண்ணும்.