நெடுங்கால் உள்ளான் (Black-winged Stilt – Himantopus himantopus) என்பது நீண்ட கால்களைக் கொண்ட கரைப்பறவைகளுள் ஒன்றாகும். இது நீர் நிலைகளுக்கு அருகில் வாழக்கூடிய பறவை ஆகும்.
விளக்கம்
இந்தப் பறவையின் உடல் நிறமானது கறுப்பு வெள்ளை நிறத்தில் இருக்கும். ஆனால் கால்கள் மட்டும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்தப் பறவையானது தன் கால்களைப் பயன்படுத்தி தனக்கான உணவைத் தேடுகின்றன. இவை ஆபத்தான சூழலில் மட்டும் நீரில் மூழ்கி நீந்தக்கூடியது.
இயல்பு
இந்தப் பறவைகள் எப்போதும் கூட்டமாகவே காணப்படும். இவை தங்கள் கூடுகளை தண்ணீருக்கு அருகில் அருகருகே அமைத்துக் கொள்கின்றன. தன் எல்லைக்குள் வேறு பறவைகளை இவை நுழைய விடாது. அவ்வாறு நுழையும் பறவைகளை, சத்தம் எழுப்பித் துரத்தும். கோடைக் காலத்தில் இவை இனப்பெருக்கம் செய்கின்றன. கீழே உள்ள கூடுகளில் முட்டைகளை மறைவாக இட்டு வைத்திருக்கும். இவை பெரும்பாலும் இடம்பெயர்வதில்லை. தண்ணீர் வற்றிப்போனால் மட்டுமே வேறு வழியின்றி இவை இடம்பெயர்கின்றன. தமிழகத்தில், பள்ளிக்கரணை சதுப்புநிலத்திலும், வேடந்தாங்கலிலும் இந்தப் பறவை அதிகம் காணப்படுகிறது.