நீல முகப் பூங்குயில் (Phaenicophaeus viridirostris ), என்பது குயிற் குடும்பத்தில் பூங்குயில் பேரினத்தில் உள்ள ஒரு பறவையாகும். இவ்வினம் இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் மாத்திரமே காணப்படுகிறது.
நீல முகப் பூங்குயில்கள் அடர்த்தி குறைந்த காடுகளிலும் புதர்களிலுமே வாழ்கின்றன. இவை முட்களடர்ந்த இடங்களிலேயே தம் கூடுகளை அமைக்கும். ஒரு முறைக்குப் பொதுவாக இரண்டு முட்டைகளையே இடும் இவை, சில வேளைகளில் மூன்று முட்டைகளையும் இடுவதுண்டு.
இது 39 செமீ வரை வளர்ச்சியடையக்கூடிய பறவையினம் ஆகும். இதன் முதுகுப் புறமும் தலையும் கடும் பச்சை நிறத்திலும் வாலின் மேற்பகுதி பச்சையும் நுனிப் பகுதி வெள்ளையும் கொண்டிருக்கும். இதன் தொண்டைப் பகுதியும் வயிற்றுப் புறமும் இளம் பச்சையாக இருக்கும். இதன் கண்களைச் சுற்றிப் பெரிய நீலத் திட்டுக்கள் காணப்படும். இதன் சொண்டு பச்சை நிறமானது. இவ்வினத்தின் ஆண், பெண் பறவைகளை நிற வேறுபாடு அற்றிருக்கும். இதன் குஞ்சுகள் பெரிய பறவைகளை விட நிறம் மங்கியனவாகக் காணப்படும்.
நீல முகப் பூங்குயில்கள் பல்வேறு வகையான சிறு பூச்சிகளையும் மயிர்க்கொட்டிகளையும் சிறு முள்ளந்தண்டுளிகளையும் உணவாகக் கொள்ளும். இவை திறு பழங்களையும் சிலவேளைகளில் உண்பதுண்டு.