பச்சைக் குக்குறுவான் (Brown-headed Barbet) என்பது ஒரு ஆசிய குக்குறுவான் பறவை ஆகும். குக்குறுவான் மற்றும் தூக்கான் பறவை என்பன வெப்பமண்டல நாடுகளின் காணப்படுகின்றன. குக்குறுவான் எனும் பெயர் அதன் மயிர்சிலிர்ப்பு போன்ற தோற்றத்தாலும் பெரிய அலகினாலும் ஏற்பட்டது. இது ஒரு மரம்வாழ், பழந்தின்னிப் பறவை.
கள இயல்புகள்
தடித்த செவ்வலகும் புல்லின் நிறமுங்கொண்ட இக்குக்குறுவானின் தலை, கழுத்து, மார்பு, பின்புறத்தின் மேல்பகுதி அனைத்தும் பழுப்பு நிறத்தில் வெண்கீற்றுகளுடன் காணப்படும். எஞ்சிய சிறகுப் பகுதிகள் பச்சை நிறத்தையுடையன. . வளர்ந்த குக்குறுவான் 27 செ.மீ. நீளமுடையது. கண்ணைச் சுற்றி இருக்கும் செம்மஞ்சள் வட்டம் அலகின் அடிவரை செல்லும் . குறுகிய கழுத்தையும், பெரிய தலையையும், குறுகிய வாலையும் உடையது. ஆண், பெண் இரண்டுமே ஒற்றுமையான தோற்றத்தையுடையன.
பரவல்
பச்சைக் குக்குறுவானின் மூன்று இனங்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படுகின்றன(M. z. zeylanica, M. z. caniceps, M. z. inornata). இலையுதிர் காடுகளிலும் மரங்களடர்ந்த பகுதிகளிலும் அதையொட்டிய மனிதர்-வாழ்விடங்களிலும் கிராம தோட்டங்களிலும் இவை வாழ்கின்றன.
உணவு
பச்சைக் குக்குறுவான் மா, பலா, வாழை, பப்பாளி போன்ற சதைக்கனிகளை விரும்பி உண்ணும்.
கூடு கட்டுதல்
இது அழுகிய மரங்களில் பொந்தை அமைத்து அதில் 2-4 முட்டைகளை இடுகின்றது . இப்பறவை இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் தங்கியிருந்து முட்டையிடுகின்றது. ஆணும் பெண்ணுமாக அடை காக்கும்.
கூப்பாடு
பச்சைக் குக்குறுவான்கள் தங்களுக்கிடையே பெரும் சத்தம் எழுப்பி தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன. குட்ரூ .. குட்ரூ .. குட்ரூ .. என்ற தொனியில் தொடர்ந்து கூவும் ; ஒரு பறவையைத் தொடர்ந்து மற்றவையும் கூவும். மழைக்காலத்தில் இவை அவ்வளவாகக் கூவுவதில்லை. .