நாட்டுக் காடை

நாட்டுக் காடை (Common quail, Coturnix coturnix) பாசியனிடே எனும் தோகையுள்ள பறவையினத்தைச் சார்ந்த சிறிய பறவையாகும். இவை ஐரோப்பா, ஆசிய மற்றும் ஆஃப்ரிக்கக் கண்டங்களில் பரவலாகக் காணப்படுகின்றன. இவற்றின் பல சிற்றினங்களும் அறியப்பட்டுள்ளன. இவை முட்டைகளுக்காகவும், இறைச்சிக்காகவும், உலகின் பல பகுதிகளில் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன.


விவரம்


இவை சிறிய (17 செ.மீ.) உருண்டையான வடிவத்துடன் காணப்படுகின்றன. மரப்பழுப்புக் கோடுகள் கொண்ட இறகுகளுடன், கண்ணருகே வெள்ளை நிறப் பட்டையுடனும், ஆண் பறவைகள் கருத்த தாடையுடனும் காணப்படுகின்றன. இவற்றின் இடம் பெயரக்கூடிய இனப் பறவைகள் நீண்ட சிறகுடனும், வேட்டைப் பறவைகள் குறுஞ்சிறகுகளுடனும் காணப்படுகின்றன.


பழக்க வழக்கங்கள்


இது விதைகளையும், பூச்சிகளையும் உண்ணும் நிலம்வாழ் இனமாகும். இது பறப்பதற்கு விரும்பாமல், பயிர்களுக்கிடையே ஓடி ஒழிந்து கொள்வதால், காண்பதற்கு அரிதாகிறது. துரத்தி விடப்பட்டாலும், சிறிது தொலைவு கீழாகப் பறந்து, புதர்களுக்கிடையே ஒழிந்து கொள்கிறது. இவை இருப்பதை ஆண் பறவைகளின் மாறுபட்ட ஒலி எழுப்பலின் மூலமே அறிய முடியும். இவை பெரும்பாலும் காலை மாலையிலும், அரிதாக இரவிலும் ஒலி எழுப்புகின்றன. இவை மற்ற வேட்டைப் பறவைகளில் இருந்து மாறுபட்ட, இடம் பெயரும் பறவைகளாகும்.


இனப்பெருக்கவியல்


ஆறு முதல் எட்டு வார வயதடைந்த இவ்வினக் காடைகள், ஐரோப்பா மற்றும் ஆசியாவில் பெரும்பாலான இடங்களில், பயிர்நிலங்களிலும் புல்வெளிகளிலும், இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு, நிலத்தில் அமைத்த கூடுகளில், 6-18 முட்டைகள் இடுகின்றன. இம்முட்டைகள் 16–18 நாட்களில் பொரிகின்றன.


இனங்கள்


இவ்வினத்தை முதன் முதலில், லின்னேயசு தனது சிஸ்டமா நேச்சுரே எனும் புத்தகத்தில் 1758-இல் டெற்றாவோ கோட்டுர்நிக்ஸ் (Tetrao coturnix) என வழங்கியிருந்தார். யுரேசிய இனமான, சி. சி. கோட்டுர்நிக்ஸ் (C. c. coturnix) , குளிர்காலங்களில் ஆஃப்ரிக்காவின் சஹேல் பகுதிக்கும், இந்தியாவிற்கும் தெற்கு நோக்கிப் பெயர்கின்றன. ஆஃப்ரிக்க இனமான, சி. சி. ஆஃப்ரிகானா (C. c. africana) , தென் ஆஃப்ரிக்காவிலிருந்து, ஆஃப்ரிக்காவிற்குள்ளேயே வடக்கு நோக்கிப் பெயர்கின்றன. மடகாஸ்கர் மற்றும் கோமொரோஸ் நாட்டுக்குக் காடைகள் இதே ஆஃப்ரிக்க இனத்தைச் சார்ந்தவை. கேப் வெர்டே தீவுகளில் உள்ள காடைகள், சி. சி. இனோப்பினாடா (C. c. inopinata) இனத்தையும், கனரீஸ், மதேயரா மற்றும் அசாறேஸ் தீவுகளில் உள்ளவை சி. சி. கான்பிசா (C. c. confisa) இனத்தையும் சார்ந்தவை.


பயன்பாடுகள்


யாத்திராகமம் 16:1-13, இடம்பெயர்ந்த இசுரவேலர்கள் (Israelites) இடம்பெறும் காடைகளை உணவுக்காக நம்பியிருந்ததைக் குறிப்பிடுகிறது. மத்தியத்தரைக்கடல் பகுதிகளை இவை கடக்கும்போது இன்னும் வேட்டையாடப்படுகின்றன. அண்மைக்காலங்களில், பொழுதுபோக்காக வளர்ப்போரால், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இவற்றின் பெருக்கம் அதிகரித்துள்ளது.


வெளி இணைப்புகள்

நாட்டுக் காடை – விக்கிப்பீடியா

Common quail – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *