கரிச்சான் (ஒலிப்பு (உதவி·தகவல்)) ( Drongo) என்பது சிறிய வகைப் பறவையாகும். இது பரவலாக தென் மற்றும் தென்கிழக்காசிய பிரதேசங்களில் காணப்படுகின்றது. வளர்ந்த கரிச்சான் பறவைகள் கடும் சாம்பல் நிறம் கொண்டு, ஆழமாக பிரிக்கப்பட்ட (இரட்டை வால் தோற்றம்) நீண்ட வாலைக் கொண்டது. இதனால் இதை ஊர்ப்புறங்களில் இரட்டைவால் குருவி எனவும் அழைப்பர். இவ்வினங்களில் துணையினங்கள் சாம்பல் நிற இறகு நிறத்தில் காணப்படுகின்றன. சில இனங்கள் தலையில் வெள்ளை குறியுடன் காணப்படுகின்றன. இளம் பறவைகள் மங்கலான பழுப்பு சாம்பல் நிறத்தில் காணப்படும். கரிச்சான்கள் கரையான், வெட்டுக்கிளிகள், குளவி, எறும்பு, புழுக்கள் போன்றவற்றை விரும்பி உண்ணும்.
கரிச்சான் பறவைகள் தங்கள் வாழ்விட எல்லையை இனப்பெருக்கக் காலத்தில் மிக விழிப்புடன் பாதுகாக்கும். இவற்றின் உத்தரவாதமான இந்தப் பாதுகாப்பினால் வலிமை குறைந்ந பறவைகளான புறாக்கள், தவிட்டுக்குருவிகள், கொண்டைக்குருவிகள் போன்றவை கரிச்சான்களின் கூடுகளுக்கு அருகில் தம்முடைய கூட்டை பாதுகாப்புக் கருதி அமைத்துக்கொள்ளும். தன் எல்லைக்குள் வரும் உருவில் பல மடங்கு பெரிய பறவைகளையும் தாக்கக் இவை தயங்காது.