கரண்டிவாயன்

கரண்டிவாயன், கரண்டி வாயன் அல்லது யுரேசிய கரண்டி வாயன் (Eurasian Spoonbill, அல்லது Common Spoonbill, Platalea leucorodia) துடுப்பு வாயன் குடும்பமான Threskiornithidae-வைச் சேர்ந்த பறவையாகும்.


உருவமைப்பு


இவைகளை எளிதில் கண்டறிய இயலும். பொதுவாக உடல் முழுதும் வெண்மை நிறம் கொண்ட இப்பறவையினம் கருத்த கால்கள் மற்றும் அலகுகளைக்கொண்டிருக்கின்றன. இதுபோக இவை கூழைக்கடாவைப்போல் அலகின் நுனியில் மஞ்சள் புள்ளியும், மார்பில் மஞ்சள் நிறப்ட்டையும் கொண்டிருப்பதும் உண்டு. சப்பையான கரண்டியைப்போன்ற அலகினாலிவற்றிற்கு இப்பெயர்.


இனவிருத்தி கால அலங்காரங்கள்


இனவிருத்திக்கால பறவைகளுக்கு தலையின் மீது மஞ்சள் வண்ண இறகுகளாலான கொண்டை இருக்கும். மார்பின் மஞ்சளும் கொண்டையும் புண்ராப்பறவைகள் பெற்றிருப்பதில்லை.


வாழ்விடங்கள்


இவை ஆழம் குறைந்த களிமண் அல்லது மணல் நிறைந்த, நீர்நிலைகள் அல்லது சதுப்பு நிலங்களில் திழைக்கின்றன. இவை ஆறு, குளம், மாங்குரோவ் காடுகள் என்று நன்னீரிலோ, உப்பு நீரிலோ வசிக்கும். இவைகட்கு கோரைப்புற்கள் நிறைந்த மற்றும் சிதரியுள்ள மரங்கள் கொண்ட இடங்கள் பிடிக்கும். இவை டெல்டாக்கள், கடல் உட்புகுந்த இடங்களிலும் வாழ்கின்றன.


பரம்பல்


இவை பேலியார்க்டிக் (Palearctic) இனங்களில் ஒன்றாகுமாதலால் இங்கிலாந்து, ஸ்பெயின் முதல் வட ஆப்பிரிக்கா மற்றும் ஜப்பான் வரை பரவியுள்ளன. இவை ஐரோப்பாவில் நெதர்லாந்து, ஸ்பெயின், ஆஸ்திரியா, ஹங்கேரி மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளில் அதிக அளவில் காணப்படுகின்றன. இவை வெப்பமுள்ள இடங்களுக்கு குளிர்காலங்களில் வலசை வருகின்றன. ஐரோப்பிய பறவைகள் இனவிருத்திக்கு ஆப்பிரிக்கா செல்வதும், ருசியா பறவைகள் இந்தியாவிற்கு வலசை வருவதும் பொதுவாக ஆண்டுதோறும் காணும் இயற்கை நிகழ்வுகள். இங்கிலாந்தில், நார்ஃபொல்க் என்ற மாகாணத்தில் உள்ள ஹோல்காம் என்னும் பகுதியில் 2010 முதல் இனப்பெருக்கமும் செய்கின்றன. 2011-ல் 8 இனவிருத்தி செய்யும் ஜோடிகள் 14 குஞ்சுகளை வெற்றிகரமாக வளர்த்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


குணாதிசயங்கள்


நாரைகள் போலில்லாமல் இவை பறக்கும் தருவாயில் கழுத்தை நீட்டிக்கொண்டு பறக்கின்றன. யுரேசியக்கரண்டிவாயன்கள் தன் சகோதர இனமான ஆப்பிரிக்கக்கரண்டிவாயன்களைப்போல் இருப்பதில்லை. ஆப்பிரிக்கக்கரண்டிவாயன்கள் சிவந்த முகமும், கால்களும் இருந்தாலும் மஞ்சள் வண்ணங்களைக்கொள்வதில்லை.
பொதுவாக இவை சிறு கூட்டங்களாக இருக்கும் இயல்புடையவை, எனினும் இவற்றை தனியாகவோ 100 பறவைகள் வரையிலான கூட்டமாகவோ காண இயலும். இவை வலசை வரும் நேரம் 100 அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பறக்கின்றன. பெரும்பாலும் இவை காலையிலும், மாலையிலும் சுறுசுறுப்பாக இருக்கின்றன, எனினும் கடற்கரையில் அலையடிக்கும் இயல்பைச்சார்ந்தே இவற்றின் நடத்தையிருக்கும். தன் உண்ணும் இடத்திலிருந்து பொதுவாக 15 கி.மீ. தூரத்தில் மரக்கிளைகளில் ஓய்வெடுக்கவும் உறங்குகவும் செய்கின்றன.


ஒலியெழுப்புதல்


பொதுவாக அமைதியான பறவையினங்களான இவை தன் அலகினை ஒன்றுடனொன்று அடித்துக்கொள்ளும் பழக்கத்தால் தட்டும் ஒலியினை எழுப்ப வல்லவை. எனினும், சில நேரங்களில் இனவிருத்தி குடியிருப்புகளில் அலகு தட்டும் ஓசையோடு கூடி பன்றி உறுமும் மற்றும் டிரம்பட் போன்ற வாத்திய ஒலியையும் கேட்க இயலும்.


துணை இனங்கள்


டி-என்-ஏ சான்றுகளைக்கொண்டு ஆராய்ந்ததில் இவ்வகை கரண்டிவாயன்கள் ராயல் மற்றும் கருமுக கரண்டிவாயன்களின் சக இனம் என்று தெளிவாகிறது.
இவற்றிற்கு மூன்று துணையினங்கள் உள்ளன:


 • P. l. leucorodia, பெரும்பாலும் காணப்படுபவை.

 • P. l. balsaci. பாங்-டியார்குயின் தீவுகள் தள்ளி, மௌரிடானியா.

 • P. l. archeri. செங்கடல் மற்றும் சோமாலியாவின் கடற்கரைகளில்.

 • உணவு


  இவை பூச்சின் புழுக்கள், நீரில் திளைக்கும் புழுக்கள், பூச்சிகள், நத்தைவகைகள், நண்டுகள், அட்டைகள், நாக்குப்பூச்சிகள், தவளைகள், தேரைகள், தலைபிரட்டைகள் மற்றும் சிறு மீன்களை (10-15 செண்டிமீட்டருக்கும் குறைவாக இருக்குமானால்) பிடித்துண்ணும். இவை பாசி மற்றும் சிறு நீர்த்தாவர உறுப்புக்களையும், சில நேரத்தில் மற்ற விலங்கினங்களில் கழிவையும் உண்ணும்.


  இனவிருத்தி


  இவை ஏப்ரல் முதல் இனவிருத்தியில் ஈடுபடும். பல பறவைகள் வலசை வந்தாலும், பெரும்பாலும் இவை வெகு தூரம் செல்வதில்லை. இதன் இனவிருத்தி மழைக்காலத்தினை ஒத்திருக்கும். இவை குடியிருக்கும் மரங்கள் கரண்டி வாயன்கள் மட்டுமோ, அல்லது வேரினங்களுடன் (செந்நாரை, கொக்கு, நீர்க்காகம், போன்றவை) சேர்ந்தோ இருக்கும்.


  கூடு


  கரண்டிவாயன்களின் கூடு முழுக்க முழுக்க குச்சிகள் மற்றும் இலைதழைகள் கொண்டு உருவாக்கப்படும் ஒரு மேடை. இவற்றின் கூட்டை நெருக்கமான கோரைப்புற்கள், புதர்கள், மற்றும் மரத்தின் கிலைகளில், தரையிலிருந்து 5 மீட்டர் உயரத்தில் அமைக்கின்றன. குடியிருப்புகளில் கூடுகள் ஒன்றோடொன்று மிகவும் அருகாமையில் இருக்கும். வெறும் ஒன்றல்லது இரண்டு மீட்டர் இடைவேளை மட்டுமே இருக்கும். இவ்வகை குடியிருப்புகள் உண்ணும் இடத்திலிருந்து 10 முதல் 15 கிலொமீட்டர்கள் தொலைவில் அமைக்கப்பட்டிருகும், எனினும் சிலவன 35-40 கி.மீ தூரம் கூட இருக்கும்.


  குஞ்சுகள்


  குஞ்சுகள் பொரிக்கும் வேளையில் உடல் முழுதும் ஒரே பழுப்பாக இருக்கின்றன. அலகும் மற்ற பறவைகளைப்போன்று உருண்டையாகவும் இருந்தாலும், இவற்றின் இளஞ்சிவப்பு அலகுகள் வளர்ந்து இளஞ்சிவப்பான தட்டைக்கரண்டி போலாகும்.


  பின்னர் பெரிய பறவைகளைப்போல் இவற்றின் அலகுகளும் கருத்த வண்ணமும் நுனியில் மஞ்சள் நிறமும் கொண்டிருக்கும்.


  பாதுகாவல்


  இவை புகலிடமாகக்கருதும் காடுகளின் அழிவாலும், சுற்றுப்புற சூழல் கேட்டாலும், கோரைப்புற்கள் வாழும் இடங்கள் அரிதாக ஆவதாலும் இவை பெரும் பாதிப்பிற்காளாகின்றன. கிரீஸ் நாட்டில் அதிக அளவில் மீன் பிடித்தலும், மனிதர்கள் இவற்றின் முட்டைகளை திருடுவதாலும் முன்னால் இவை அரிதாயின. எனினும் இவற்றை திரும்ப இங்கிலாந்து போன்ற நாடுகளிம் முயற்சியால், மீண்டும் பல்கிப்பெருகி உயிர்வாழ வாய்ப்புருவாகியிருக்கிறது.

  வெளி இணைப்புகள்

  கரண்டிவாயன் – விக்கிப்பீடியா

  Eurasian spoonbill – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published.