நீலச்சிறகி (Garganey, Anas querquedula) என்பது சிறுவகை நீரின் மேற்பரப்பிலிருந்து உணவை உட்கொள்ளும் பறவையினம். இவ்வினம் முதன்முறையாக 1758 ஆண்டில் லினேயசுவால் விவரிக்கப்பட்டு இன்னமும் அவர் தந்த பெயரினையே கொண்டுள்ளன. இவை மற்ற கிளுவைகள் மற்றும் சிறு வாத்துக்களைப்போல் கால்களையும் இறக்கைகளையும் அடித்துக்கொண்டு தண்ணீரிலிருந்து எளிதில் எழும்ப வல்லவை.
உருவமைப்பு
ஆண் பறவை
வளர்ந்த ஆண் பறவையினை எளிதில் கண்டுகொள்ளும் வகையில் இளஞ்சிவப்பு நிற தலையும், மார்பும், கண்ணின் மேலிருந்து தலையின் பின்புறம் வரை ஒரு வெள்ளை நிற பிறையும் கொண்டுள்ளன. இது போக உடல் முழுதும் பழுப்பு நிறத்தாலான இறகுகள் போர்த்தியிருக்க, பெண்களும் உடலெங்கும் இளஞ்சிவப்பு நிறம் கொண்டுள்ளது. பழுப்பான அலகினையும் கால்களையும் கொண்ட இவை பறக்கும் போது இளம் நீல நிறம் உள்ளதால் இதற்கு நீலச்சிறகி என பெயரளித்துள்ளார்கள். நீந்தும் போது மட்டும் வெள்ளை நிற வெளிப்புறம் கொண்ட பின் சிறகுகள் தெரிகின்றன.
பெண் பறவை
பெண் பறவையை இனம் காண சிறிது குழப்பம் ஏற்படலாம், ஏனென்றால் இவை கிளுவையினைப்போல் இருக்கும். எனினும், முகத்திலுள்ள வண்ணங்கள் தெளிவாக இருப்பதனால் இவற்றை பிரித்துச்சொல்ல இயலும். மேலும் இவை அடிக்கடி தலையை ஆட்டும் பழக்கமும் நீரின் மேல்பரப்பில் உட்கொள்ளும் முறையினாலும் வேறு அமைப்புள்ள அலகினாலும் தனித்து அடையாளம் தெரியும்.
பரம்வல்
வலசை வரும் பறவையினத்தைச்சேர்ந்த இவை பொதுவாக ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவில் இனவிருத்தி செய்கின்றன. குளிர்காலங்களில் இவை மொத்தமாக தெற்கு ஆப்பிரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் (முக்கியமாக சாந்த்ராகாச்சி) மற்றும் ஆஸ்திரலேசியாவிற்கும் புலன் பெயருகின்றன. இவை சில நேரங்களில் இங்கிலாந்தின் தீவுகளிலும், அமைதியான நார்ஃபோக் (Norfolk) மற்றும் சஃபோக் (Suffolk) சதுப்பு நிலங்களில் இனப்பெருக்கம் செய்கிறது. சில இணைகள் அயர்லாந்தின் வெக்ஸ்போர்டிலும் (Wexford) இனப்பெருக்கம் செய்கின்றன.
குணாதிசயங்கள்
ஆண் இனவிருத்திக்காலத்தில் மட்டும் தனிச்சிறப்பு வாய்ந்த, இணையை அழைக்கும் விதமான ஒலியை எழுப்புகிறது. பெண் பறவைகள் அமைதியாக இருக்கும் என்றாலும், அவை சிறிய அளவிலான “குவாக்” என்ற ஒலியெழுப்ப இயலும்.
உணவு
நீலச்சிறகி போன்ற வாத்துக்கள் நீரின் மேல்மட்டத்திலிருந்து தங்கள் அலகுகளால் உணவை பிரித்தெடுக்க முடியும். இவை தலையையோ கழுத்தையோ தண்ணீருக்கடியில் ஆழ்த்துவதில்லை.
இனவிருத்தி
இவை இனப்பெருக்கத்தை ஆழமில்லா சதுப்புநிலங்களுக்கு அருகாமையிலிருக்கும் புல்வெளிகளில் செய்கின்றன.
பெயரின் வரலாறு
பதினேழாம் நூற்றாண்டு முதல் இவற்றின் பெயர் பயன்பாட்டில் உள்ளது. இது இத்தாலிய மொழியில் gargenei, அல்லது garganello-விலிருந்து வந்துள்ளது. இதற்கு ஒருவகை இரத்தநாளத்தின் பெயராகும். ஆங்கில உபயோகமானது 1555-ல் கோன்ராட் கெஸ்னர் என்பவர் தன் Historiae Animalium (விலங்குகளின் வரலாறு) என்ற புத்தகத்தில் ஆரம்பமானது எனலாம்.
பாதுகாவல்
இப்பறவையினம் ஆப்பிரிக்க-யுரேசிய வலசை வரும் நீர்ப்பறவைகள் பாதுகாவல் ஒப்பந்தத்தின் (Agreement on the Conservation of African-Eurasian Migratory Waterbirds (AEWA)) கீழ் பாதுகாக்கப்படும் சில இனங்களில் ஒன்றாகும்.