வெள்ளைக் கண்ணி (Oriental White-eye, Zosterops palpebrosus) ஒரு சிறிய வெள்ளைக்-கண் குடும்பப் பறவை. வெப்பமண்டல ஆசியாவில் கிழக்கிலிருந்து இந்தியத் துணைக்கண்டம் முதல் தென்கிழக்காசியா வரையிலும் இந்தோனேசிய, மலேசியா நாடுகள் வரை பரந்து காணப்படுகின்றன. சிறு கூட்டமாக உணவைத் தேடும் இவை மலர்த்தேன் மற்றும் சிறு பூச்சிகளை உணவாகக் கொள்கின்றன. இவற்றின் வேறுபட்ட கண்ணைச் சுற்றிக் காணப்படும் வெள்ளை வளையத்தைக் கொண்டும், மேற்பகுதி முழுவதும் காணப்படும் மஞ்சள் நிறத்தைக் கொண்டும் இப்பறவையினை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும். சிறகின் கீழ் காணப்படும் நிழல் போன்ற தன்மையினைக் கொண்டு இதன் துணை இனம் அழைக்கப்படுகிறது.
விவரம்
8-9 செ.மீ நீளமுடைய இச்சிறு பறவை மஞ்சள் தன்மையுள்ள ஒலிவ நிறத்தை மேற்பகுதியில் கொண்டும், கண்ணைச் சுற்றி வெள்ளை வளையமும், கீழ்ப்பகுதியும் கழுத்தும் மஞ்சளாகவும் காணப்படும். வயிற்றுப் பகுதி வெள்ளையான சாம்பல் நிறத்தையுடையது. ஆயினும் சில இனங்கள் மஞ்சள் நிறத்தையுடையன. இருபாலினங்களும் ஒத்த தோற்றத்தையுடையன.
பரம்பலும் உறைவிடமும்
இப் பறவை இனம் குறுங் காடுகளிலும் ஈரலிப்பான காடுகளிலும் வாழ்கின்றன. சில வேளைகளில் சதுப்பு நிலங்களிலும் தீவுகளிலும் பூச்சிகளை உண்டு வாழ்கின்றன.
பழக்கமுறையும் சூழலியலும்
இப் பறவைகள் சமூகப்பாங்கானவை. கூட்டமாக வாழும் இவை இனப்பெருக்கக் காலத்தில் பிரிந்து வாழும். அநேகமாக மரங்களில் காணப்படும் இவை மிகக் குறைவாகவே தரைக்கு வரும். மாசி தொடக்கம் புரட்டாதி வரை இவற்றின் இனப்பொருக்க காலம். சித்திரை உயர் இனப்பெருக்க காலமாகக் காணப்படுகிறது. மரக்கிளை பிரியுமிடத்தில் தொட்டில் போன்று நெருக்கமாக கூடு கட்டும். கூடானது சிலந்திவலை, மரப்பாசி, மரநார் முதலியவற்றால் அமைக்கப்படும். கூடு கட்ட 4 நாட்கள் எடுத்துக் கொள்ளும் இப் பறவை, இரண்டு வெளிறிய நீல நிற முட்டைகளை இரண்டு நாட்கள் இடைவெளியில் இடும். 10 நாட்களுகளில் குஞ்சு பொரிக்கும். ஆணும் பெண்ணும் குஞ்சுகள் கவனித்து, உணவூட்டும். 10 நாட்களின் பின் குஞ்சுகள் பறக்கத் தயாராகிவிடும். பூச்சிகளை பிரதான உணவாகக் கொள்ளும் இவை மலர்த்தேன் மற்றும் சில பழங்களையும் உணவாகக் கொள்ளும்.
படங்கள்
வெளி இணைப்புகள்
வெள்ளைக் கண்ணி – விக்கிப்பீடியா