செந்நாரை

செந்நாரை (Purple heron, Ardea purpurea) அல்லது செந்நீலக் கொக்கு , உயரமாக வளரக்கூடிய ஒரு நீர்நிலை அருகில் வாழும் நீரைச்சார்ந்த பறவையினம். இவற்றின் தனித்தன்மையான உயரமும், வண்ணங்களும் இவற்றை பறை சாற்றுகின்றன. தன் இனப்பெருக்க எல்லைக்கு வடபுறம் மிகவும் அரிய அளவில் செல்கின்றன.


ஜம்பு நாரை என்பது இதன் வேறு பெயராகும்.


உருவமைப்பு


உயர்ந்து வளரும் பறவையினமான செந்நாரை ஒரு மிகப்பெரிய பறவை. 78-98 செ.மீ. நீளம் கொண்ட இவை நிற்கும் வேளையில் 70-94 செ.மீ. உயரமும், 120-152 செ.மீ. இறகின் அகலமும் கொண்டுள்ளன. எனினும் இவை மிகவும் ஒல்லியாக இருப்பதனால் இது வெறும் 0.5-1.35 கிலோகிராம் அளவே உள்ளது.


இது சாம்பல் நாரையை விடவும் சிறியதாகவும் இலேசாகவும் உள்ளது. இதனை சாம்பல் நாரையிடமிருந்து வேறுபடுத்திக்கட்டுவது யாதெனின் இதன் இள்ஞ்சிவப்பு நிற உடலே. வளர்ந்த பறவைகள் கருத்த பழுப்பு நிறத்தையும் கொண்டிருக்கின்றன. இவை குறுகிய வடிவிலான மஞ்சள் அலகினை உடையது. செந்நாரைக்கு உருவத்தில் மிகவும் அருகாமையில் உள்ள நாரை இவற்றை விட உருவில் பெரிய கோலியாத்து நாரை.


பரம்பல்


இவை ஆப்பிரிக்காவிலும், மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பாவிலும், தென் மற்றும் கிழக்கு ஆசியாவிலும் வாழ்கின்றன. எனினும் ஐரோப்பிய இனங்கள் குளிர் காலங்களில் ஆப்பிரிக்காவை நோக்கி வலசை வருகின்றன. ஆசிய இனங்களோ வடக்கும் தெற்கும் ஆசியாவிற்குள்ளேயே வலசை வருகின்றன.


இயல்புகள்


இவை இறக்கைகளை வேகமாக அடித்துக்கொள்ளாமல் மெதுவாக பறக்கும் இயல்புடையவை. பறக்கும் போது ஆங்கில எழுத்தான “S” வடிவில் கழுத்தை மடித்து வைத்துக்கொண்டு பறக்கும். இந்த பழக்கம் இதனை மற்ற கொக்குகள் மற்றும் குருகுளின் பறக்கும் தன்மையிலிருந்து வேறுபடுத்திக்காட்டுகின்றது. மற்றவை கழுத்தை நீட்டிக்கொண்டு பறக்கும் தன்மையுடையன. பொதுவாக அமைதியான இவ்வினம் தவளையைப்போல் “க்ரேக்” என்ற ஒலியினை எழுப்பும்.


கிளை இனங்கள்


நான்கு துணை இனங்கள் செந்நாரைக்கு உண்டு:


 • Ardea purpurea purpurea லினேயசு. 1766, ஆப்பிரிக்கா, வடக்கில் ஐரோப்பாவின் நெதர்லாந்து முதல் கிழக்கில் கசக்ஸ்தான் வரை.

 • Ardea purpurea bournei கேப் வெர்டெ தீவுகள்.

 • Ardea purpurea madagascariensis மடகாஸ்கர்.

 • Ardea purpurea manilensis ஆசியா, மேற்கில் பாக்கித்தான் முதல் கிழக்கில் பிலிப்பீன்சு வரை, வடக்கில் பிறிமோர்சுக்கி நிலப்பரப்பு, உருசியா வரை.

 • செந்நாரையானது யுரேசிய வலசை வரும் பறவைகளைக்காத்தலுக்கான ஒப்பந்தப்படி (Agreement on the Conservation of African-Eurasian Migratory Waterbirds) காக்க வேண்டிய இனம் என்பது சிறப்பானது.


  உணவு


  பல மணி நேரங்கள் அசைவின்றி ஆழமற்ற நீரில் நின்றுகொண்டு இவை மீன், தவளை, தேரை, விலாங்கு மீன், பாம்புகள், பல்லிகள், சிறு பாலூட்டிகள், மற்றும் சிறு பறவைகளை பிடித்து உட்கொள்ளும். இரையை அலகில் பிடித்தவுடன் இவை தலையினை ஆட்டி அவற்றை செயலிழக்கச்செய்தும் அப்படியேயும் விழுங்கும். தேவைபட்டால் இவை மெதுவே இரையை பின்தொடர்ந்து செல்லவும் செய்கின்றன. எனினும் தன் சாம்பல் நாரை தோழர்கள் போலல்லாது இவை கோரைப்புற்கள் உள்ள இடங்களில் மறைவாக வாழவும் பிரியப்படுகின்றன.


  இனப்பெருக்கம்


  இவை கூட்டம் கூட்டமாக கோரைப்புற்கள் மீது கூடுகட்டுகின்றன. எனவே இவைகட்கு சதுப்பு நிலம் போன்ற பிரம்மாண்டமான நீர்நிலைகள் தேவைப்படுகின்றன. பல குச்சிகளை சேமித்து இவை கூட்டினை அமைக்கின்றன.


  பாதுகாவல்


  இப்பறவையினம் ஆப்பிரிக்க-யுரேசிய வலசை வரும் நீர்ப்பறவைகள் பாதுகாவல் ஒப்பந்தத்தின் (Agreement on the Conservation of African-Eurasian Migratory Waterbirds (AEWA)) கீழ் பாதுகாக்கப்படும் சில இனங்களில் ஒன்றாகும்.

  வெளி இணைப்புகள்

  செந்நாரை – விக்கிப்பீடியா

  Purple heron – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published.