ஊதாச்சிட்டு அல்லது ஊதாத் தேன்சிட்டு (Purple Sunbird, Cinnyris asiaticus) ஒரு சிறிய வகை தேன்சிட்டு. மற்றைய தேன்சிட்டுக்களைப் போல் இவற்றின் முக்கிய உணவு மலர்களின் தேன் ஆகும். எனினும் குஞசுகளுக்கு உணவளிக்கும் வேளையில் மட்டும் சிறு பூச்சிகளை வேட்டையாடும் பழக்கத்தைக் கொண்டுள்ளது. இவை மிகவும் வேகமாக பறக்கும் தன்மை கொண்டு, ஓரிடத்தில் நிலையாகப் பறக்கவும் இயலும். இவை பூக்களின் அடியில் அமர்ந்து தேனை உட்கொள்ளும்.
உருவமைப்பு
ஆண் பறவைகள் பார்க்க கருப்பு நிறம் கொண்டிருந்தாலும், சூரிய ஒளியில் அவை ஊதா நிறத்தை வெளிப்படுத்துகின்றன. பெண் பறவைகள் மேலே ஆலிவ் பச்சை நிறமும், வயிற்றுப்பகுதியில் மஞ்சள் நிறமும் கொண்டுள்ளன.
மற்ற தேன்சிட்டுகளை ஒப்பிடும் போது நீளம் குறைந்த அலகை உடைய ஊதாத்தேன்சிட்டு கருத்த நிறமும் சதுரமாக முடியும் வாலையும் கொண்டது. ஆண் பெண் பால் வித்தியாசம் மிகத்தெளிவாக உள்ளது.
ஆண் தோற்றம்
பொதுவாக உலோகத்தினைப்போல் தகதகவென இருக்கும் கருத்த ஊதா நிறம் கொண்டுள்ள ஆண் பறவைகள் புணராக்காலங்களில் வயிற்றுப்பகுதிகளில் மஞ்சள் நிறம் கொள்ளும். வயிற்றுப்பக்கம் சிறு கருப்பு கீற்றும் இருக்கும். புணராக்கால ஆணை தனி இனமாக (Loten’s Sunbird) குழப்பிக்கொள்ளக்கூடும். ஆனால் Loten’s Sunbird தெளிவான கருஞ்சிவப்பு கீற்றினைக்கொண்டிருக்கும்.
புணர்ச்சியை விரும்பும் ஆண்கள் சில நேரங்களில் தன் மஞ்சள் இறகுகளைக் காட்டக்கூடும். கழுத்தைச்சுற்றிய கருஞ்சிவப்பு கோடும் தெளிவாய் தெரியும்.
பெண் தோற்றம்
ஆலிவ் பச்சை நிறம் மேலே கொண்ட பெண் பறவைகள் அடியில் மஞ்சள் நிறம் கொண்டிருக்கும். புருவம் இளமஞ்சள் நிறமும், கண்களுக்கு பின் கீற்றுடன் காணப்படுகின்றது.
வாழுமிடங்கள்
இவை எப்போதும் இணைகளாகவே காணப்பெறும், எனினும் தோட்டங்களிலும் மலர்கள் மண்டிக்கிடக்கும் இடங்களிலும் 40 முதல் 50 பறவைகள் கொண்ட கூட்டங்களையும் காண இயலும். இவற்றிற்கு தேன் எப்போதும் தேவை என்பதனால் ஆண்டு முழுதும் பூக்கும் மலரும் தன்மை கொண்ட மரங்களும் செடிகளும் இருக்கும் இடங்களை நாடும்.
பரம்பல்
மேற்கு ஆசியா முதலாக இந்தியா முழுவதுமாய் தென்மேற்கு ஆசியா வரை பரவி உள்ளன. இவை தன் வாழ்விடங்களிலிருந்து புலம் பெயரும் பழக்கம் இல்லதனவாகவே உள்ளன. வலசை வராத பறவையினமாக இருந்தாலும் பூக்களைத்தேடி சிறு தூரங்கள் செல்லும். இவை பெரும்பாலும் சமவெளிகளில் வாழ விருப்பப்பட்டாலும் தென்னிந்தியாவில் 2,400 மீட்டர் உயரமும் வட இந்தியாவில் (இமய மலை பிரதேசங்களில்) 1,700 2,400 மீட்டர் உயர மலைச்சாரல்களிலும் பரவி உள்ளன. சிறிய காடுகள் மட்டுமின்றி நகர்புறத்தோட்டங்களிலும் காண இயலும். வடமேற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் மாகாணங்களில் காய்ந்த பிரதேசங்களில் சிறு தூரங்கள் பயணிக்கும் தன்மை உண்டு.
இதன் கிளை இனங்கள் இந்தியா மற்றும் பாலைவனப்பகுதியின் கிழக்கேவும் தென்னிந்தியா மட்டுமல்லாது இலங்கையிலும் பரவியுள்ளன. ஊதாத்தேன்சிட்டின் கிளை இனமான brevirostris அரேபிய தீபகற்பம் நாடுகளான ஈரான், அப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற இடங்களிலும் உள்ளன. ராஜஸ்தான் மற்றும் குஜராத் பொன்ற காய்ந்த பிரதெசங்களிலும் பல்கிப் பெருகியுள்ளன. சிறு மஞ்சள் கீற்றை கொண்டுள்ள இவை தெற்கில் கோவா வரை புலம் பெயர வாய்ப்புள்ளது. ஊதாத்தேன்சிட்டு கிளை இனமான intermedius என்பது ஒரிசா மற்றும் ஆந்திர பிரதேசம் தொடங்கி வடக்கே வங்கதேசம், மியான்மார் மற்றும் இந்திய-சீனா எல்லை வரை காணப்பெறுகின்றன.
பழக்கங்கள்
அதிக குரலெழுப்பும் தன்மை கொண்ட இந்த ஊதாத்தேன்சிட்டுகள் எப்போதும் ஒலியெழுப்பிய வண்ணமே இருக்கும். இவை இணைந்து ஆந்தை, காகம், மற்றும் வேறு வேட்டையாடிகளையும் துரத்தும் இயல்பு உண்டு. இவை மிகவேகமாக பாடினாலும், பெரும்பாலும் ‘சுவீஈஈஈ”, “சுவீஈஈட்” என்று ஒலிக்கும். உணவுண்ணும் வேளைகளில் சிறகினை ஆட்டிக்கொண்டிருக்கும். இது ஒருவகை தகவல் பரிமாற்றம் எனலாம். இவை ஓரிடத்தில் வானில் பறக்கவல்ல தன்மை பெற்றிருப்பினும், அதனை அதிகம் உபயொகிக்காது. சில நேரங்களில் பூவின் அடியிலோ மேலோ அமர்ந்து தேன் உண்ணும். இது போக இவை திராட்சை பொன்ற பழங்களிலிருந்து சாற்றினை பருகவும் செய்கின்றன. .
சில நேரங்களில் பூவிதழைக்கிழித்து இவை தேனைப்பருகும். ஏனினும் பெரும்பாலும் பூக்களுக்கு உள்ளே தன் அலகை நுழைதது உண்ணும் வேளையில் செடிகளின் மகரந்தம் சேர்க்கைக்கு பங்களிக்கும். தேனீக்கள் போன்று இப்பறவைகளும் பல மரம், செடி, கொடிகள் பல்கிப்பெருக வழிவகுக்கின்றன. உதாரணமாக Butea monosperma, Acacia, Woodfordia, Dendrophthoe போன்ற பல செடிகளும் இப்பறவையின் சேவையால் பயனுறுகின்றன.
இவற்றை கூண்டுகளில் நன்கு பராமரித்தால் 22 ஆண்டுகள் வரை வாழக்கூடியன.
உணவு
பத்து செண்டிமீட்டருக்கும் குறைவான கீழ் நோக்கி வளைந்துள்ள அலகினுள் நீண்ட உரிஞ்சான் பொன்ற நாக்கினால் தேன் உண்ணும். பூக்களுக்கு செல்லும் வேளையில் பூக்களின் தேனை மட்டுமின்றி தேனை நாடி வரும் மற்ற சிறு பூச்சிகளையும் உணவாய் கொள்ளும். பூச்சிகளை நாடும் இயல்பு குஞ்சு பொரித்த நேரங்களில் மிகுதியாய் உள்ளது. தேனீக்கள், சிறு சிலந்திகள், வண்டுகள், எறும்புகள் என பலவற்றை கவ்வி கொணர்ந்து குஞ்சுகளுக்கு ஊட்டும். பறக்கும் போதே பூச்சிகளை பிடிக்கும் ஆற்றல் இவைகட்கு உண்டு.
புணரும் காலம்
ஆண் பெண் இருபாலரும் ஒன்றாகவே ஆண்டு முழுதும் ஒன்றாக இருப்பினும், பிரதானமான இணை சேரும் காலம் மழைக்காலத்திற்கு முன்பே. எனவே வட இந்தியாவில் ஏப்ரல் முதல் சூன் வரையும், தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் சனவரி முதல் சூன் வரையுமாகும்.
ஆண் நன்றாக புலப்படும் ஒரு கிளையில் அமர்ந்துகொண்டு நடனமாடும். அவை தலையை தூக்கி விசிறி போல் தன் இறகுகளை விரித்தும் சுறுக்கியும் ஆடும். தன் குரலையும் பலமாக உபயோகிக்கும். பெண் பறவை ஆணின் குரல் வளம் மற்றும் தோற்றம் கொண்டு சரியான நேரத்தை தேர்ந்தெடுக்கும்.
கூடு
சிறு சுறுக்குப்பை போன்ற இதன் கூடு சிலந்தி வலைகள், பஞ்சு, பூஞ்சை (lichens) மற்றும் செடிகளின் சிறு பட்டைகள் கொண்டு உருவாக்கும். கூட்டினுள் செல்லும் வழி பக்கவாட்டில் இருக்கும். இப்பாதை நிழலில் அமையுமாறு தாய்ப்பறவை உருவாக்கும். கூடு கட்டுவதில் ஆணின் பங்கு மிகக்குறைவே. கூடுகள் சரியாகப்பிண்ணப்படுவதில்லை. மாறாக இவை சிலந்தி வலைகளின் ஒட்டும் தன்மை காரணமாகவே இணைக்கப்பெறும். சுமாராக 5 முதல் 10 நாட்களில் கூடு தயாராகும். உட்புற அறை பறவை உள்ளமர்ந்து தன் இறகை விரிப்பதனால் வட்ட வடிவம் பெறும்.
கூடுகளை பெரும்பாலும் மரத்தின் கிளைகள் மற்றும் செடிகளின் பகுதிகளில் தொங்க விட்டாலும், சில பகுதிகளில் முட்செடிகள், கம்பிகள் மற்றும் கொடிகளிலும் உருவாக்கும். மனித பொருட்களான பலகாலம் உபயோகிக்கா துணி காயவைக்கும் கம்பிகளிலும் கூடுகள் காண இயலும். ஓரிரு இடங்களில் உபயோகிக்காத காற்றோட்டமான கழிவறைகளிலும் கண்டிருக்கின்றனர்.
முட்டை மற்றும் குஞ்சு பராமரிப்பு
2 முட்டைகள் மட்டும் இடும். பெண் மட்டும் முட்டைகளை 15 முதல் 17 நாட்கள் வரை அடை காக்கும். ஆண்கள் குஞ்சுகளுக்கு உணவு கொண்டு வருவதில் பங்களிக்கும். ஏனினும் குஞ்சுகள் வளர்ந்த பின்னர் பெண்களே அதிக முறை போய் வந்து உணவு அளிக்கும்.