சின்னான்

சின்னான் (செம்புழைக் கொண்டைக்குருவி; Red-vented Bulbul, Pycnonotus cafer), மரங்களில் அடையும் பறவைகளுள் ஒன்றாகும். இது கொண்டைக்குருவி, கொண்டைக்கிளாறு, போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.


பொதுவான கொண்டைக்குருவி வகைகள்


கொண்டைக்குருவிகள் பொதுவாக இருவகையானவை. ஒரு வகையின் கருங்கொண்டை நீண்டு, கொம்பு போல் முன் வளைந்திருக்கும். இது செம்மீசைக் கொண்டைக்குருவி என்றழைக்கப்படும். பொதுவாக இது மலைப்பகுதிகளில் காணப்படும்; தமிழகத்தில் உதகமண்டலத்திலும் மற்ற மலைப்பகுதிகளும் இது காணப்படும். மற்றொரு வகை, செங்குதக் கொண்டைக்குருவி என்றும் அழைக்கப்படும் சின்னான். இதன் கொண்டை சற்றுச் சிறியது. இதை சமவெளிகளிலும் வீடுகளுக்கருகிலும் சிறு குன்றங்களிலும் காணலாம். இவ்விருவகைக் குருவிகளுக்கும் கொண்டை கருத்து, உடல் கபில நிறத்தில் இருக்கும்; வாலடி இரத்தச் சிவப்பாக இருக்கும். உற்சாகமான குரலில் பரபரப்புடன் இவை கூவும்.


மலைப்பகுதிகளில் முழுக்கருப்பான ஒரு கொண்டைக்குருவி உண்டு. வேறு வகைக் கொண்டைக்குருவிகளும் உள்ளன. கொண்டைக்குருவிகளில் வமிசத்தைச் சேர்ந்த கொண்டை இல்லாக் குருவிகளும் உண்டு. இவற்றுள் முக்கியமானது மரகதத்தின் பசுமையும் இனிய குரலையும் உடைய மரம்வாழ் பச்சைக்குருவி (Chloropsis) வகையே.


செங்குதக் கொண்டைக்குருவி


அடையாளங்கள்


 • மைனாவை விடச் சிறிய (20 செ.மீ அல்லது 8 இன்ச்சு) பறவை.

 • தலையும் தொண்டையும் நல்ல கருப்பாகவும் உடலும் மூடிய இறகுகளும் பழுப்பு நிறமாகவும் இருக்கும். சிறகுகளின் ஓரங்கள் வெண்மையுள்ளதால் செதிலுற்றது போன்ற தோற்றமுடைய இறகுகள் கொண்டது; வயிற்றுப்பகுதியும் மேல்-வாலின் மறைவுப்பகுதியும் வெண்ணிறமாகக் காட்சியளிக்கும். வாலின் அடிப்பகுதி கரும்பழுப்பு நிறமுடையது.

 • வாலின் அடியிலுள்ள செக்கர் சிவப்புத் திட்டு இதன் முக்கிய அடையாளம். எண்ணெய்க்கறுப்பு நிறக் கருவிழி, கருநிற அலகு, கால்கள் கொண்டது.

 • பரம்பல்


  இந்தியா முழுவதிலும் காணப்படும் பறவை. தெற்காசியாவில் இந்தியாவில் தொடங்கி இலங்கை, கிழக்கில் மியான்மர், தென்மேற்கு சீனா வரையில் இதன் பரவல் நெடுந்துள்ளது; இப்பகுதிகளில் இது உள்ளூர்ப் பறவையாகக் கருதப்படுகிறது. மேலும், பிஜி, சமோவா, டோங்கா, ஹவாய், துபாய், ஐக்கிய அரபு அமீரகம், நியூசிலாந்து ஆகிய நாடுகளிலும் (தீவுகளிலும்) சின்னான் அறிமுகப்படுத்தப்பட்டு இப்போது நன்கு வேரூன்றி விட்டது.


  இந்தியாவில் காணப்படும் பலவிதச் சின்னான்கள்


 • முதன்மை வகை (Pycnonotus cafer) தென்னிந்தியாவில் காணப்படுவது.

 • மேற்குப்பகுதியில் (காஷ்மீர் தொடங்கி பாகிஸ்தானின் கோகாட் மாவட்டம் வழியாக உப்பு மலைத்தொடர் ஊடாக, உத்தராகண்டின் குமவோன் வரை) காணப்படுவது P. C. intermedius வகையாகும்.

 • இமயமலைப் பகுதியான கிழக்கு நேப்பாளம் தொடங்கி அசாம் வரை காணப்படுவது P. C. bengalensis வகை.

 • இப்பகுதிகளுக்குத் தெற்கே அகமதுநகர் வரை காணப்படுவது P. C. pallidus வகை; கிழக்குப் பகுதியில் காணப்படுவது P. C. saturatus வகை.

 • வெளி இணைப்புகள்

  சின்னான் – விக்கிப்பீடியா

  Red-vented bulbul – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published.