பசையெடுப்பான் குருவி (ஆங்கிலம்:Nuthatch) இது மரங்கொத்தி, மரமேறிக் குருவிகளைப் போல மரத்தூரிலும், கிளைகளிலும் ஏறித் திரியும் சிறு குருவி வகையாகும். 5 அங்குலம் நீளமிருக்கும். இது மரப்பட்டையிலுள்ள வெடிப்புகளிலும், இடுக்குகளிலும் பூச்சிகள், அப்பூச்சிகளின் இளம் புழுக்கள், சிலந்திகள் ஆகியவற்றைத்தேடித் தின்று வாழும் இயல்புடையது ஆகும். மற்ற பறவைகளை விட இதுவே மரமேறுவதில் மிகவும் திறமையுடையதாகும். இந்தப் பறவைகள் ‘சிட்டிடே’ (Sittidae) என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவையாகும். இவை ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய கண்டங்களில் உண்டு ஆப்பிரிக்காவில் சகாராவுக்கு வடக்கில் உண்டு. இது எங்கும் மிகுதியாக இல்லை. எனினும், பொதுவாகப் பரவி இருக்கிறது. தென்னிந்தியாவிலே இரண்டு இனங்கள் உள்ளன. ஒன்றன் அடிப்பாகம் செம்பழுப்பு நிறமாக இருக்கும். மற்றொன்றின் நெற்றியும், உச்சியும் கறுப்பு மென்பட்டுபோல இருக்கும். இவற்றின் அறிவியல் பெயர்கள் முறையே ‘சிட்டா காசுட்டனியா’ (Sitta castanea) , ‘சிட்டா பிரன்டாலிசு’ (Sitta frontalis) என்பனவாகும்.
சிறப்பியல்பு
மரங்கொத்தியிலே அதன் வாலிறகுகள், மரத்தில் ஏறும் போது, மரப்பட்டை மீது ஊன்றிக் கொண்டு, ஆதாரமாகப் பறவையைத் தாங்கிக் கொள்ளும். அவ்வித இறகுகள் இப்பறவைகளுக்கு இல்லை.இதன் வால் சிறியது. இருப்பினும், மரங்கொத்தியை விட சுருசுருப்பாகவும், விரைவாகவும், இங்குமங்கும் ஓடும். இது மரத்தில் மேல்நோக்கி ஏறுவது மட்டுமின்றி, எந்த திசையிலும் மேலும், பக்கங்களிலும், கீழ்நோக்கியும் ஓடும். அடிக்கடி கிளைகளின் கீழ்ப்பக்கங்களில் தலைகீழாக, முதுகு தரைப்பக்கமாகத் திரும்பி இருக்கும் படியும் ஓடும். சாதாரணமாகப் பறவைகள் கிளையைக் கால்விரல்களால் பற்றிக் கொண்டு உட்காருவது போல இதுவும் உட்காரக்கூடும். ஆனால், இது மிக்க முயற்சியுடனும், துடிதுடிப்பாகவும் சோம்பல் இல்லாமலும் இருக்கும் இயல்பை சிறப்பாகப் பெற்றுள்ளது. இது மரத்தின் மேலேயே வாழும்.
வளரியல்பு
தனியாக இது சிறுகூட்டங்களாக , மற்றப் பறவைகளுடன் கூடிக் கொண்டு இரை தேடும். மிக உயர்ந்த மரங்களிலும், மிக முதிர்ந்த மரங்களிலும், உச்சியிலே இது பெரும்பாலும் வாழும் இயல்புடையதாக உள்ளது. இதைப் பார்ப்பதைக் காட்டிலும், இதன் குரலைக் கேட்பதே அதிகம். இதில் குரல் ஒலியோடு, கொட்டையைக் கொத்தி உடைக்கும் சத்தமும் கேட்கும். இது கொட்டைகளையும், விதைகளையும், பட்டைப்பிளவுகளில் அழுத்திப் பொருத்தி வைத்துக் கொண்டு, அலகினால் கொத்திக் கொத்தி உடைத்துப் பருப்பைத்தின்னும். இப்பறவைக்கு இட்டிருக்கும் ஆங்கிலப்பெயரே, இந்தப் பழக்கத்தையே குறிக்கிறது.
கூடு
பசையெடுப்பான் கூடு கட்டுவது விநோதமாக இருக்கும். இது மரப்பொந்துகளில் கட்டும். பொந்தின் வாயைக் களிமண்ணாலும், சேற்றாலும், இலை முதலியவற்றை வைத்துப் பூசி, அடைத்துத் தங்களுடைய சிறிய உடல் நுழைவதற்கு வேண்டிய அளவு துளையை மட்டும் அமைத்துக் கொள்ளும். இப்படி அடைத்திருக்கும் பரப்புச் சிலநேரங்களில், மிக அகன்றதாக இருப்பதுண்டு. கூட்டின் உள்ளே உலந்த இலைகள், பட்டையின் உட்பக்கத்தில் இருக்கும் மென்மையான துணி போன்ற படலங்கள், பாசம், மயிர் ஆகியவற்றைப்போட்டு மெத்தென்று செய்திருக்கும். இவை 2-6 முட்டையிடும்.
பறவையின் உள்ளினங்கள்
இப்பறவையின் சிற்றினங்கள் பன்மயமாக, தெற்கு ஆசியாவில் காணப்படுகிறது. இது குறித்த பல்வேறு விவரங்களைக் காணும் போது, இவ்வினத்தின் தாயகம் தெற்கு ஆசியாவாக இருக்கலாம் என பறவையியலாளர்கள் எண்ணுகின்றனர். ஏறத்தாழ 15 உள்ளினங்கள் இப்பறவையில் காணப்படுகின்றன. இருப்பினும், பூமியின் வடகோளப்பகுதியில் இதன் இனங்கள் காணப்படுகின்றன.