சிறிய பச்சைக் கொக்கு [Striated heron அல்லது Little heron (Butorides striata)] குருட்டுக் கொக்கையொத்த, அதைவிட சற்று சிறியதான கொக்கு. இது தோசிக்கொக்கு என்றும் அழைக்கப்படுகிறது. இக்கொக்கு தென் அமெரிக்காவின் தெற்குப்பகுதியைத் தவிர்த்து பிற பகுதிகள், ஆப்பிரிக்காவின் சில பகுதிகள், ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா உள்ளிட்ட சில ஆசியப் பகுதிகள், ஆஸ்திரேலியாவின் கடற்கரையை ஒட்டிய பகுதிகளிலும் பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் தீவுகளிலும் பரவலாகக் காணப்படுகின்றது.
உடல் தோற்ற விளக்கம்
வளர்ந்த பறவை
ஒளிரும் பசுமை கலந்த கருப்பு நிறத்தில் முன்னந்தலை, உச்சந்தலை, கொண்டை கொண்டது; கழுத்து சாம்பல் நிறத்திலும் கன்னம் வெண்மையாகவும் இருக்கும். நீளமான தோள்பட்டையும் கருஞ்சாம்பல் பகுதியுடன் கூடிய ஒளிரும் அடர் பச்சை நிறத்தில் இதன் மேற்பாகம் இருக்கும். இறக்கையின் சிறகுகள் கரும் பச்சை நிறத்திலும் அவற்றின் முனைகள் வெண்மையாகவும் இருக்கும். முகவாய்ப் பகுதியும் தொண்டையும் வெள்ளை; பறவையின் அடிப்பாகம் சாம்பல் நிறமுடையது.
40 முதல் 44 செ.மீ. வரை வளரும்; கிட்டத்தட்ட 5 செ.மீ.க்கு மேல் உள்ள அலகின் மேற்பகுதி கருப்பாகவும் அடிப்பாகம் வெளிர்மஞ்சளாகவும் இருக்கும். விழித்திரை அடர் மஞ்சள் நிறத்திலும் கண்ணைச் சுற்றிய பகுதி பசும் மஞ்சளாகவும் காணப்படும். கால்கள் மஞ்சள் கலந்த பச்சை நிறம்.
இருபால் பறவைகளும் ஒரே தோற்றம் கொண்டவை.
இளைய பறவை
மேற்பாகம் பழுப்பு நிறம் கொண்டது; வளர்ந்த பறவைக்கு உள்ள அளவிற்கு தோள்பட்டை நீளமாக இருக்காது. உச்சந்தலையில் பழுப்பு கலந்த மஞ்சள் கீற்றுகள் காணப்படும். இறக்கை சிறகுகள் பழுப்பு மஞ்சள் ஓரங்களுடன் முனையில் வெண்புள்ளிகளுடன் இருக்கும்.
கீழ்ப்பாகம். பழுப்பு மஞ்சள் கலந்த வெண்ணிறம்; பழுப்பு நிற கீற்றுகள் அடர்ந்து காணப்படும்.
வாழ்விடமும் பரவலும்
புதர் நிறைந்த ஓடை, ஆறு, ஏரி, குளங்களின் கரைகளிலும் அலையாத்திக் காடுகள், கடல் கழிமுகப் பகுதிளிலும் இக்கொக்கைக் காணலாம்.
பரவல் (இந்தியாவில்)
இந்தியத் துணைக்கண்டத்தில் இக்கொக்கு உள்ளுறையும் பறவையாக உள்ளது. பாகிஸ்தானை ஒட்டிய இந்தியாவின் வடமேற்குப் பகுதியிலும் உள்நாட்டுப் பகுதிகள் சிலவற்றையும் தவிர்த்து அனைத்துப் பகுதிகளிலும் காணப்பட்டாலும் எண்ணிக்கையில் குறைவாகவே உள்ளது.
தமிழ்நாட்டில். கடற்கரையை ஒட்டிய பகுதிகளிலும் கோயம்புத்தூர், சேலம், நெல்லை, சென்னை மாவட்டங்களில் ஏரிகளிலும் சிறிய பச்சைக் கொக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, கேளம்பாக்கம் உப்பங்கழியில் இவை பலமுறை பதிவு செய்யப்பட்டுள்ளன.
பொதுவான இயல்புகள்
அமைதியாகவும், தனியாகவும் காணப்படும் கூச்ச இயல்பு கொண்டது. பெரும்பாலும் மரத்தில் இருக்கும் இப்பறவை ஒரு இரவாடி; இருப்பினும், மேகம் சூழ்ந்த பகல் பொழுதுகளிலும் இயங்கும். கரைப்பகுதியில் நீரினையொட்டிய தாழ்வான மரக்கிளைகளில் அமர்ந்து இரை தேடுவது இதன் வழக்கம். குறிப்பிட்ட ஒரே இடத்தையே மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கும் தன்மையுடையது. தொந்தரவு ஏற்படும்போது, தடிமனான அதன் கழுத்தை முன்னோக்கி நீட்டியவாறு நிதானமாக இறக்கைகளை அடித்து சற்று தொலைவிலுள்ள மரத்தில் சென்று அமரும்.
உணவு
மீன், கூனிறால், தவளை, நண்டு, நீர் வண்டுகள் உள்ளிட்டவை. பூச்சிகளை இரையாகப் போட்டு மீனை வேட்டையாடும் இயல்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இனப்பெருக்கம்
ஓர் ஆண்டில் இரு முறை இனப்பெருக்கம் செய்யும் இயல்புடையது. இந்தியாவில் இனப்பெருக்கக் காலம் மார்ச்சிலிருந்து செப்டம்பர் வரை; இலங்கையில் மார்ச்சிலிருந்து சூலை வரை.
கூடு. குச்சிகளைக் கொண்டு, முட்டைகளுக்காக சிறிய பள்ளம் வைக்கப்பட்டு கட்டப்படும்; கூடுகள் பெரும்பாலான நீர்ப்பறவைகளைப் போல் குழுவாக அல்லாமல் ஆங்காங்கே தனியாகக் கட்டப்படுகின்றன. சதுப்பு நிலங்களில் அலையாத்தி மரங்களில் தரையிலிருந்து 3 முதல் 4.5 மீட்டர் உயரத்தில் புதர்களுக்கிடையில் மறைவாக இருக்கும். அரிதாக, மனித நடமாட்டமுள்ள பகுதியில் கூடு வைக்கப்பட்டாலும் இப்பறவையின் அமைதியான, மறைமுகமாக இருக்கும் இயல்பினால் கூடு இருப்பதை மனிதரால் அறிய இயல்வதில்லை.
முட்டைகள். மூன்றிலிருந்து ஐந்து முட்டைகள் வரை ஒரு கூட்டில் காணப்படும்; அவை வெளிர், நீலப்பச்சை நிறத்தில் வழுவழுப்பாக இருக்கும். இவற்றின் முட்டைகள் குருட்டுக் கொக்கின் முட்டைகளைப் போன்றே இருந்தாலும் அவற்றை விடவும் சற்றே பெரியதாக உள்ளன.
ஆண், பெண் இரு கொக்குகளும் அடை காக்கும்; உண்ட உணவை வாய்க்குக் கொணர்வதன் மூலம் அவை தம் குட்டிகளுக்கு உணவளிக்கின்றன. செந்நாரையின் குஞ்சுகளைப் போன்றே இவற்றின் குஞ்சுகளும் வளர்ந்த பறவைகளின் அலகைப் பிடித்து ஆட்டுவதன் மூலம் உணவை எதிர்க்களிக்க வைக்கின்றன.