செங்கால் நாரை (Ciconia ciconia – White Stork) நாரை (சிகோனிடே) குடும்பத்தைச் சேர்ந்த ஓர் நீர் இறங்கு பறவை ஆகும். இது வெண்ணிற சிறகுத் தொகுதியையும் கருநிற இறகினையும் உடையது; நீண்ட செந்நிற கால்களும் செந்நிற அலகும் இப்பறவையை எளிதில் இனங்காண உதவும். 100-இலிருந்து 115 செ.மீ வரை இதன் உயரம் இருக்கும்.
பரவல்
செங்கால் நாரைகள் இனப்பெருக்கம் செய்யுமிடங்களின் பரவல் 80 மே.-லிருந்து 500 கி. வரையும் 320 தெ.-லிருந்து 600 வ. வரையிலான பகுதிகளாகும். இதனடிப்படையில் இவற்றை ஐரோப்பியத் தொகை, ஆப்பிரிக்கத் தொகை, ஆசியத் தொகை என வகைப்படுத்தலாம்.
சதுப்பு நிலங்கள், களிமண் நிலங்கள், நீர்நிலை கூடிய திறந்தவெளிகள் இவையே இந்நாரைகளின் விருப்பமான இருப்பிடங்களாகும். மனிதர்கள் வாழ்விடங்களுக்கருகிலும் இவை கூடு கட்டி இனப்பெருக்கம் செய்கின்றன.
ஐரோப்பியர்கள் இந்த நாரை தான் குழந்தையைக் கொண்டு வரும் பறவை என நம்புகின்றனர். அங்கே, முக்கியமாக ஆலந்து, போலந்து ஆகிய நாடுகளில் செங்கால் நாரை மக்களுக்கு நெருங்கிய பறவைகளில் ஒன்று. வீட்டு மாடியில், குறிப்பாக, புகைபோக்கியில் கூடு கட்டினால் அது நல்லது என்று கருதுகின்றனர். அதைப் பாதுகாக்க வீட்டுக்காரருக்கு அரசு ஒரு ஊக்கத்தொகை கொடுக்கின்றது. மனிதரின் அருகாமைக்கு இவை நன்கு பழகியிருக்கின்றன.
வலசை
பனிப்பொழிவில் தரை பனியால் மூடப்படும் போது இவை கூட்டம் கூட்டமாக வலசை போக ஆரம்பிக்கின்றன. சில கூட்டம் ஆப்பிரிக்காவிற்குச் செல்கின்றன. வேறு சில இந்தியா நோக்கிப் பயணிக்கின்றன. அவற்றில் பெரும்பான்மை (எண்ணிக்கையில் குறைந்த அளவே) மராட்டிய, கருநாடகப் பகுதிகளை வந்தடைகின்றன; தமிழ்நாட்டிற்கு இவை மிக அரிதாகவே வருகின்றன. (தாராபுரம் கீரனூரில் 1987-இலும் வேலூரிலும் செங்கால் நாரைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன). ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளில் உள்ள செங்கால் நாரைகள் அங்குள்ள குப்பைக் கூளங்களில் ஆண்டு முழுவதும் உணவு கிடைப்பதால் வலசை போவதை நிறுத்தி விட்டனவா என்று 2013இல் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு வினவுகிறது.
உணவு
பூச்சிகள் (வெட்டுக்கிளி, தத்துக்கிளி), தவளை/தேரை, தலைப்பிரட்டைகள், மீன், கொறி விலங்குகள், பாம்பு, ஊர்வன, மண்புழு, சிப்பிகள் ஆகியவை செங்கால் நாரைகளின் உணவுப் பட்டியலாகும்.
உண்ணும் முறை
அலகினைத் தரைநோக்கி உள்ளவாறு வைத்தபடியே கம்பீரமாக நடந்து செல்லும் இந்நாரை. இரையைக் கண்டவுடன் தன் தலையை சற்று பின்னிழுத்து பிறகு வேகமாக முன்னே அலகைச் செலுத்தி தன் இரையைப் பிடிக்கும்.