வெண்தொண்டை மீன்கொத்தி (Halcyon smyrnensis) என்பது ஒரு மர மீன்கொத்தி. இது வெண்மார்பு மீன்கொத்தி எனவும் அழைக்கப்படும். மேலும் தமிழில் விச்சிலி, சிச்சிலி, பெருமீன்கொத்தி முதலிய பெயர்களும் உண்டு. இது உலகில் மேற்கில் பல்கேரியா, துருக்கி முதல் கிழக்கில் தெற்காசியா, பிலிப்பைன்சு வரை பரவியுள்ளது. இம்மீன்கொத்திகள் இவை சிறிய ஊர்வன, நிலநீர் வாழிகள், நண்டுகள், சிறு கொறிணிகள் முதலிய பலதரப்பட்ட உணவுகளை இரையாகக் கொள்கின்றன. இனப்பெருக்க காலத்தில் கட்டிடத்தின் உச்சி, மின்கம்பிகள் உள்ளிட்ட எடுப்பான இடங்களில் இருந்து ஒலியெழுப்புகின்றன.
அறிமுகம்
இது ஒரு பெரிய மீன்கொத்தி. 28 செமீ நீளம் வரை வளரும். நன்கு வளர்ந்த நிலையில் இப்பறவையின் முதுகு, இறக்கைகள், வால் ஆகியன பளிச்சென்ற நீலநிறத்தில் இருக்கும். இதன் தலை, தோள், அடிவயிறு பழுப்பு நிறத்திலும் தொண்டையும், மார்புப்பகுதியும் வெள்ளையாக இருக்கும். பறக்கையில் இதன் இறக்கையில் வெள்ளைப் பகுதிகள் தெரியும்.
வாழிடமும் பரவலும்
இப்பறவை பல்வேறுபட்ட சூழல்களில் வாழ்கிறது. மரங்கள், கம்பிகள் உள்ள திறந்த சமநிலங்களில் பெரும்பாலும் காணப்படுகிறது. இது மரத்தில் கூடு கட்டாது. மாறாக, மண் பாங்கான இடத்தில், பொந்து போன்ற அமைப்பை ஏற்படுத்தி, அதற்குள் இவை முட்டையிடும். இது இந்தியாவிலுள்ள மேற்கு வங்காள மாநிலத்தின் மாநிலப்பறவையும் ஆகும்.