விசிறிவால் உள்ளான் (common snipe; Gallinago gallinago) 27 செ.மீ. – கருப்பு. செம்பழுப்பு, வெளிர் மஞ்சள் கீற்றுக்களைக் கொண்ட செம்பழுப்பு உடலைக் கொண்டது. மார்பும் வயிறும் வெள்ளை நிறம். இது தரையில் அசையாது. படுத்திருக்கும் போது கண்டு கொள்வது கடினம்.
காணப்படும் பகுதிகள்
குளிர்காலத்தில் வலசைவரும் இது சேறும் ஈரமுமான தரையில் குளக்கரைகள், ஏரிகளிலிருந்து நீர் கசியும் குட்டைகள், அறுவடை முடிந்த நெல்வயல்கள் ஆகியவற்றினைச் சார்ந்து திரியும். ஊர்ப்புறங்களில் அமைந்த பெண்கள் குளிக்கவும் துணிகளைத் துவைக்கவும் செய்து கொண்டிருக்கும் குளங்குட்டைகளின் ஓரங்களில் கூட அச்சமின்றித் திரியக் காணலாம். தரையோடு ஒன்றியபடி கண்ணில் படாதபடி படுத்திருக்கும் இது, வேட்டைக்காரரால் மிதிபடும் அளவு அவர்கள் நெருங்கிய பின் குரல் கொடுத்தபடி எழுந்து பல கோணங்களில் திரும்பித் திரும்பிப் பறக்கும்.
உணவு
காலை மாலை நேரங்களில் புழுபூச்சிகள், நத்தை ஆகியவற்றை இரையாகத் தேடும். வெயில் நேரத்தில் புல் கொத்து, புதர் ஆகியவற்றின் ஓரமாகப் படுத்து ஓய்வு கொள்ளும். மேகமூட்டமான மழைநாட்களில் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இரை தேடும்.
வெளி இணைப்புகள்
விசிறிவால் உள்ளான் – விக்கிப்பீடியா