கோட்டான் (Whimbrel, Numenius phaeopus) 43 செ.மீ. – வெண்பட்டைக் கோடுகளைக் கொண்ட கரும் பழுப்புத் தலையும் மணல் பழுப்பு உடலும் கொண்ட இதனை நீண்டு கீழ்நோக்கி வளைந்துள்ள அலகுகொண்டு எளிதில் அடையாளம் காணலாம். கழுத்து, மார்பு, வயிறு ஆகியன வெண்மை வால் கரும் பழுப்பாகக் கருப்புப் பட்டைகள் கொண்டது.
காணப்படும் பகுதிகள் ,உணவு
குளிர்காலத்தில் வலசை வரும் இதனைக் கிழக்குக் கடற்கரை சார்ந்த பகுதிகளில் ஆங்காங்கே காணலாம்.கோடியக்கரையில் காணப்பட்ட குறிப்பு உள்ளது. கூட்டமாக அலைகளின் ஏற்ற இறக்கத்திற்கேற்ப மணல் படுக்கையில் திரியும். நீண்டு வறைந்த அலகினை நண்டு வளையினுள் செலுத்தி நண்டின் கையைப் பற்றி வெளியே இழுக்கும். நண்டின் கை முறிந்து விடும். கைமுறிந்த நண்டு கீழே விழுந்து ஓடப்பாக்கும் போது அலகில் இருக்கும் நண்டின் கையை கீழே போட்டு விட்டு ஓடும் நண்டினைப் துரத்திப் பிடித்துத் தின்னும். கடல் ஏற்றத்தின் போது கடற்கரையில் அமரர்ந்து கடல் இறக்கத்தை எதிர்பார்த்து காத்திருக்கும். நத்தைகளும் நண்டுகளுமே இதன் முக்கிய உணவு. ட்டீட்டீ, ட்டீட்டீ என ஏழெட்டு முறை தொடர்ந்து குரல் கொடுக்கும். இருளில் கூட இதன் இந்தக் குரலைக் கொண்டு தலைக்குமேல் பறந்து செல்வதைத் தெரிந்து கொள்ளலாம்.