மலை இருவாட்சி

மலை இருவாச்சி என்பது இருவாச்சி குடும்பத்தைச் சேர்ந்த பறவை. இருவாச்சி குடும்பத்தில் இதுவே மிகப்பெரிய பறவையாகும். இப்பறவை நீண்ட காலம் வாழக்கூடியது. இதன் வாழ்நாள் ஏறக்குறைய 50 ஆண்டுகள். உருவ அமைப்பில் பெரிதாக உள்ள இப்பறவைகள், நீளமான வளைந்த அலகை கொண்டுள்ளன; அலகுக்கு மேல் கொம்பு போன்ற அமைப்பும் உள்ளது. இந்தப் பறவை ஒரு பேரலகின் மேல் மற்றொரு பேரலகைத் தலைகீழாகக் கவிழ்த்து ஒட்டினாற் போல் இருப்பதால்தான் தமிழில் இருவாய்க் குருவி என்ற விந்தைப் பெயரால் அழைக்கப்படுகிறது. மரங்களில் வசிக்கும் இந்தப் பறவைகள் பழங்கள், பூச்சிகள், சிறு பிராணிகள் போன்றவை உணவாகக் கொள்கின்றன.


தோற்றக்குறிப்பு


இது ஒரு பெரிய பறவையாகும். 95-130 செ.மீ (ஏறத்தாழ 4 அடி) நீளமும் இறக்கை விரிந்த நிலையில் 152 செ.மீ (ஏறத்தாழ 5 அடி) அகலமும் 2.15 – 4 கிலோ வரை எடையும் கொண்டது. ஆசிய இருவாச்சிகளிலேயே எடை மிகுந்த பறவை இதுவாகும். பெண் பறவைகள் அளவில் சிறியன.


காணப்படும் இடங்கள்


இருவாச்சியின் பூர்வீகம் தமிழ்நாடு. இவை இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி, அருணாசலப் பிரதேசத்தில் உள்ள கீழ் இமயமலைப் பகுதிகள், வடகிழக்குப் பகுதிகளில் இவை காணப்படுகின்றன . இப்பறவை கேரள மாநிலம் மற்றும் அருணாசலப் பிரதேச மாநிலத்தின் மாநிலப்பறவையும் ஆகும்.


சூழியல்


ஆண், பெண் சேர்ந்து வாழும், பெரும்பாலும் அந்த இணை சாகும் வரை பிரிவது கிடையாது. பெண் பறவை முட்டையிடும் பருவத்தில் ஆண் பறவையுடன் சேர்ந்து பெரிய பொந்தைக் கொண்ட உயர்ந்த மரத்தை தேர்வு செய்து அங்கே தங்கும்; அந்தப் பொந்தினுள் பெண் பறவை தங்கியிருக்கும்; ஆண் பறவை அதன் வாயிலை இலை, தழைகளை கொண்டு மூடிவிடும்; பெண் பறவைக்கு உணவு கொடுக்க மேற்புறம் ஒரு துளையையும், உள்ளிருக்கும் பறவை தன் கழிவுகளை வெளியேற்ற கீழ்ப்புறம் ஒரு துளையையும், ஆண் பறவை அமைக்கும். குஞ்சுகள் பிறந்து அவை பறக்கும் வரை பெண் பறவை இரை தேடச் செல்வதில்லை. ஆண் பறவை பெண் பறவைக்கும், குஞ்சுகளுக்கும் உணவைப் கொண்டு வந்து தரும்.


விருத்தி வரலாறு


இருவாச்சி 150 கிராம் எடை கொண்ட மூன்று முதல் ஐந்து முட்டைகளை இட்டு அடைகாக்கும்; குஞ்சுகள் வளர்ந்து தாமாகப் பறக்க மூன்று மாத காலமாகும்; குஞ்சுகள் தாமாகவே பறக்கும் ஆற்றலைப் பெற்றவுடன் இந்தக் கூட்டை உடைத்துக் கொண்டு உள்ளிருந்த இருவாச்சி பறவைகளும் ஆண் இணையும் பறக்கத் துவங்கி விடுகின்றன.


வெளி இணைப்புகள்

மலை இருவாட்சி – விக்கிப்பீடியா

Great hornbill – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *