உடலமைப்பு
முசல் கின்னாத்தி
51 செ.மீ. -உருவத்தில் முன்னதைவிடச் சற்றுப் பெரியது. பருத்த தலையும் தடிமனான மூட்டுக்கள் கொண்ட நீண்ட கால்களும் கொண்டது. மஞ்சளும் கருப்புமான இரு நிறம் கொண்ட அலகு சற்று மேல் நோக்கி நிமிர்ந்திருக்கும். பறக்கும்போது வாத்துப் போலத் தோற்றம் தரும். இதன் இறக்கைகளில் இரண்டு கருப்புப் பட்டைகளைக் காணலாம்.
காணப்படும் பகுதிகள்
ஆற்றுப் படுகைகளிடையேயான கற்பாறைகள், ஆற்றைச் சார்ந்த இலையுதிர் காடுகளிடையேயான கல்லும் கரடுமான பகுதிகள், கடற்கரை சார்ந்த ஆற்றுக் கழிமுகங்கள், உப்பங்கழிகள் ஆகியவற்றில் காணலாம். கோடியக்கரை, ராமேசுவரம் பகுதிகளில் பெரும் எண்ணிக்கையில் காணப்பட்ட குறிப்பு உண்டு.
உணவு
வெயில் நேரத்தில் ஓய்வாகப் பாறைகளில் படுத்துக் கிடந்து காலை மாலை நேரங்களில் நண்டு, தவளை, நத்தை, பிற சிறு உயிர்கள் ஆகியவற்றைத் தேடித் தின்பதோடு மணற்பரப்பில் முட்டையிடும் சிறுபறவைகளின் முட்டைகளையும் தின்னும். இதன் பருத்த உறுதியான அலகு கற்களைப் புரட்டி அதன் அடியில் பதுங்கி இருக்கும். உயிர்களைத் தேடித்தின்ன உதவுகின்றது. க்ரீஇ…க்ரி என உரத்த குரலில் கத்தும்.
இனப்பெருக்கம்
பிப்ரவரி முதல் ஜூன் வரையான பருவத்தில் ஆற்றுப் படுகையில் தரையில் சிறிது குழிவு உண்டாக்கி 2 முட்டைகள் இடும்.