இந்திய சாம்பல் இருவாச்சி

இந்திய சாம்பல் இருவாச்சி (Indian Grey Hornbill)(ஓசிசெரோசு பைரொசிடிரசு) இந்தியத் துணைக்கண்டத்தில் பொதுவாகக் காணப்படும் ஓர் இருவாச்சி இனப்பறவை. இது ஒரு மரவாழ் பறவையாகும். மேலும் இணையுடனே பொதுவாகக் காணப்படும். இதன் உடல் முழுவதுமுள்ள சிறகுகள் சாம்பல் நிறத்திலும் வயிற்றுப் பகுதி சற்று வெளிர் சாம்பல் நிறத்திலோ அல்லது வெண்ணிறத்திலோ இருக்கும். இப்பறவை இரண்டு அடி நீளம் இருக்கும்.


கண்ணைச் சுற்றியிருக்கும் வரிகள் (iris) சிவப்பு வண்ணத்தில் இருக்கும். இளம் பறவைகளுக்கு நல்ல சிகப்பாகவும், வளர்ந்த பறவைகளில் பெண் பறவைக்கு சற்று வெளிர் சிகப்பிலும் ஆண் பறவைக்கு கண்ணைச் சுற்றிய பாகம் ஆழ்ந்த சாம்பல் நிறத்திலுமாக இருக்கும்.


மேலும் ஆண்பறவைகளுக்கு அலகின் மேல் அலகைப் போலவே கெட்டியான சற்றே நீண்ட (போர்வீரர்கள் அணிவது போன்ற) தலைக்கவசம் (casque) காணப்படும். பெண்பறவைகளுக்கு நீளம் குறைவான சற்றே கூர்மையான தலைக்கவசம் இருக்கும். இளம் பறவைகளின் அலகிற்கு மேல் இது காணப்படாது


இவற்றின் இனப்பெருக்கக் காலம் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலும். ஒன்றிலிருந்து ஐந்து வரையிலும் ஒரே மாதிரியான வெண்ணிற முட்டைகளை இடும். உயர்ந்த மரங்களில் காணப்படும் பொந்துகளில் கூடுகளை அமைக்கும். வசதியாகக் கிடைக்கவில்லை என்றால், சற்றே குழிந்த சிறிய பொந்துகளைக் தம் வலுவான அலகுகளால் கொத்திக் கொத்திக் கூடுகளை உருவாக்கிக் கொள்ளும்.


இவை முட்டைகளை அடைகாத்துக் குஞ்சுகளைப் பொரிக்கும் முறை ஆச்சரியமும் சுவாரஸ்யமும் நிறைந்தது.


பெண் பறவை மரப்பொந்தின் உள்ளே சென்று கொண்டு பொந்தின் வாயிலை தனது எச்சக் கழிவினாலும், ஆண் பறவை கொண்டு வந்து தரும் சிறு கழிமண் உருண்டைகளைக் கொண்டும் மூடி விடும். நீள வாக்கில் ஒரு சிறு பிளவை மட்டும் விட்டு வைக்கும். ஆண் பறவை இதன் வழியாகவே அதற்கு உணவைக் கொண்டு கொடுக்கும். இப்படியாகக் கூட்டுக்குள் தன்னை அடைத்துக் கொள்ளும் பெண்பறவை அதுகாலமும் பறக்க உதவிய தனது சிறகுகளை முட்டைகளின் மேல் உதிர்த்து அடை காத்து குஞ்சுகளைப் பொரிக்கும். குஞ்சுகள் ஓரளவுக்கு இளம்பறவையாக வளரும் அதே நேரத்தில் பெண்பறவையின் சிறகுகளும் மீண்டும் வளர்ந்து விடும். அந்த நேரத்தில் மரப் பொந்தின் வாயிலை உடைத்துக் கொண்டு அவை வெளியே வரும். இவை முற்றிலும் மரம் வாழ் (arboreal) பறவைகள். எப்போதேனும் கனிகளைக் கொத்தவும், கூடு அடைக்கும் காலத்தில் களிமண் உருண்டைகளைச் சேகரிக்கவுமே நிலத்தில் அமரும். பல விதக் கனிகளோடு, சிறு பூச்சிகள், ஓணான்கள், தேள்கள், சிறு பறவைகள் (குறிப்பாக கிளிக் குஞ்சுகள்) ஆகியவற்றையும் இரையாக்கிக் கொள்ளும். பிற முதுகெலும்பிகளுக்கு விஷமாகக் கூடிய அரளிக் கனிகள் இவை விரும்பி உண்ணும் தீனியாக இருக்கிறது.


வெளி இணைப்புகள்

இந்திய சாம்பல் இருவாச்சி – விக்கிப்பீடியா

Indian grey hornbill – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.