கல் குருவி (Indian courser — Cursorius coromandelicus) என்பது ஒரு வகைப் பறவையாகும். முக்கியமாக தென் ஆசியா, கங்கை மற்றும் சிந்து நதி அமைப்புகளால் சூழப்பட்ட சமவெளிகளிலும் காணப்படும். இது ஒரு தரைப் பறவை ஆகும்.
விளக்கம்
இது தெற்கு ஆசியா முழுவதுமே பரவலாகக் காணப்படுகிறது. சாம்பல்-பழுப்பு கலந்த மேல்பாகம் மற்றும் மஞ்சள் கலந்த சிவப்பு கீழ் பாகம் கொண்டது; மேலும் கருப்பு அடி வயிறும் செம்பழுப்பு உச்சந்தலையும் பிரதானமான வெள்ளைப்புருவக் கோடும் கருப்பு கண் பட்டையும் இக்குருவியை எளிதில் இனம் காண உதவும் களக்குறிப்புகளாகும்.
உடலமைப்பு
26 செ.மீ.-தோற்றத்தில் ஆள்காட்டியை ஒத்த இதன் உடல் மணல் பழுப்பாகவும் மார்பும் வயிறும் செம்பழுப்பும் கரும்புமாகவும் இருக்கும். நீண்ட கால்கள், சற்றே வளைந்த அலகு, கண்ணுக்கு மேலான வெண்புருவம் ஆகியன அடையாளம் காட்டுவன. தோல் குருவியைப் போலப் பறக்கும். பறக்கும் போது இறக்கைகளின் அடிப்பாகம் கரும்பழுப்பாகத் தோற்றம் தரும்.
பரவலும் வாழ்விடமும்
கல்லும் கரடுமான பகுதிகள், ஊர்ப்புறங்களை அடுத்த மேய்ச்சல் நிலங்கள், புஞ்சைக்காடுகள் ஆகியவற்றில் காணலாம். நீர்வளம் மிக்க நஞ்சைப் பகுதிகளை விரும்புவதில்லை. இது திரியும் தரைப் பகுதியும் இதன் உடல் நிறமும் ஒத்துப் போவதால் இது இருப்பதைக் கண்டு கொள்வது கடினம்.
உணவு
அடிக்கடி தலை தாழ்த்தி வண்டு, சில்வண்டு, வெட்டுக்கிளி அகியவற்றைப் பிடிக்கும்.
இனப்பெருக்கம்
மார்ச் முதல் ஆகஸ்ட் வரை சிறு குழி பறித்து 2 அல்லது 3 முட்டைகள் இடும். இந்தப் பறவைகளின் குஞ்சுகள் பொரித்த உடனேயே ஓடித்திரியும் திறன் கொண்டவை.