நாட்டு உழவாரன் என்பது ஒரு சிறிய உழவாரன் ஆகும்.இது ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் காணப்படும் ஒரு சிற்றினம் ஆகும். இது மலைப்பகுதி மற்றும் நகர்ப்புறங்களில் காணப்படும்.
பெயர்கள்
தமிழில் :நாட்டு உழவாரன்
ஆங்கிலப்பெயர் :House Swift
அறிவியல் பெயர் :Apus affinis
உடலமைப்பு
15 செ.மீ. – வெண்மையான பிட்டமும் தொண்டையும் கொண்ட புகைக் கருப்பு உடல் கொண்டது. பறக்கும் போது இறக்கைகள் வில்போல் வளைந்து தோற்றம் தரும்.
காணப்படும் பகுதிகள் ,உணவு
நகரங்கள் சிற்றூர்கள் ஆகியவற்றைச் சார்ந்து கூட்டமாகப் பறந்து சிறு பூச்சிகள், இறக்கை முறைத்த எறும்புகள் ஆகியவற்றை இரையாகத் தேடும். மாலையில் கூடுகளுக்கு திரும்பும்போது பல நூறு பறவைகள் பெருங்கூட்டமாகப் பந்து போலத் திரண்டு பறக்கும். காற்றின் வேகம் துணை செய்யும் போது இறக்கைகளைத் தொங்கவிட்டுக் காற்றின் வேகத்தால் பின்னோக்கித் தள்ளப்படுவதும் உண்டு. ச்சிக். ச்சிக். எனப் பறக்கும்போது கத்தும். கூட்டில் அடைந்தபின் ஒன்று சக். ச்சொன் எனக்குரல் கொடுத்தவுடன் ஒன்றையடுத்து ஒன்றாக எல்லாமாகப் பெருங்குரலில் கத்தக் கேட்கலாம்.
இனப்பெருக்கம்
குளிர்காலம் தவிர ஆண்டு முழுதும், பாழடைந்த மசூதிகள், கோயில்கள், பாலங்கள், இறவாரங்கள் ஆகியவற்றில் பறக்கும் தூவிகள், வைக்கோல் ஆகியவற்றை உமிழ் நீரால் பிணைத்துக் கோள வடிவமான கூடுகளை அமைத்து 2 அல்லது 3 முட்டைகள் இடும்