மலபார் சாம்பல் இருவாச்சி

மலபார் சாம்பல் இருவாச்சி என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் அதனையொட்டிய தென்னிந்திய மலைப்பகுதிகளிலும் மட்டுமே காணப்படும் இருவாச்சி இனத்தைச் சேர்ந்த ஒரு பறவை. இப்பறவைகள் நீண்ட அலகினைக் கொண்டிருந்தாலும் மற்ற இருவாச்சிகளில் காணப்பபடும் அலகிற்கு மேலுள்ள புடைப்பு காணப்படுவதில்லை. இவை அடர்ந்த காடுகளிலும் அதனைச்சுற்றியுள்ள இரப்பர், பாக்குத் தோட்டங்களிலும் காணப்படுகின்றன. இப்பறவைகள் சிறு கூட்டமாக வாழும். பழங்கள், மற்றும் பூச்சிகளே இவற்றின் முதன்மையான உணவு. எளிதில் அடையாளங்கண்டுகொள்ளத் தக்கவகையில் இவை ஒலி எழுப்புகின்றன.


இனப்பெருக்கத்திற்காக தனியாக கூடுகள் கட்டும் பழக்கம் இப்பறவைக்கு கிடையாது. மரத்தின் பொந்துகளில் பெண்பறவை முட்டையிடச் சென்றவுடன் அதன் பாதையை எச்சில் கொண்டு மூடிவிடும். குஞ்சு பொரிக்கும் வரை பெண்பறவை வெளியில் வராது. பெண் பறவைக்கான உணவை ஆண்பறவை மரப்பொந்தில் காணப்படும் சிறு துளையின் வழியாகவே கொடுத்துச்செல்லும்.


வட்டாரப் பெயர்கள்


சோலைக் காகா (solai kaka, தமிழ், காட்டுகாகம்); சராட்டான் (sarattaan, காடர் மொழி); செரியன் ஓங்கல் (seriyan oongal, முத்துவன் மொழி, பொருள்-சிறு இருவாச்சி); ಕಲ್ದಲ್ ಹಕ್ಕಿ கல்டால் கக்கி (kaldal hakki, கன்னடம்), കോഴിവേഴാമ്പൽ கோழி வேழம்பாள் (kozhi vezhambal, மலையாளம்), chotta peelu, dhanesh சோட்டா பீலூ, தன்னேசு மராத்தி,”Gobre Vaayre” கோப்ரே வாயரி கொங்கணி


தோற்றக்குறிப்பு


இப்பறவைகள் அளவில் பெரியன எனினும் இருவாச்சிகளில் இவை நடுத்தர அளவுடையன. இவை 18 முதல் 23 அங்குல நீளம் வரையானவையாக சாம்பல் நிறத்தவையாக இருக்கும். இதன் வால் பகுதியானது கறுப்பு வெள்ளை நிறத்தவையாக 23 செ.மீ நீளம் கொண்டிருக்கும். இதன் அடிவயிறானது கம்பளி போர்த்தியது போன்றும், அடிப்பகுதியானது இலவங்கப் பட்டை நிறத்திலும் இருக்கும். இதன் அலகு வெளிர் மஞ்சள் நிறத்திலோ அல்லது இளஞ்சிவப்பு நிறத்திலோ இருக்கும்.


வெளி இணைப்புகள்

மலபார் சாம்பல் இருவாச்சி – விக்கிப்பீடியா

Malabar grey hornbill – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.