ஆற்று ஆலா (River Tern) 43 செ.மீ. நன்கு பிளவுபட்ட வாலும் நீண்ட கூரான இறக்கைகளும் கொண்டது. குட்டையான சிவந்த கால்களை கொண்டது. அலகின் நிறம் நல்ல மஞ்சள், குளிர்காலத்தில் கரும்புள்ளிகளோடும் கோடுகளோடும் காணப்படும் தலை. கோடையில் நல்ல கருப்பு நிறமாக மாறும்.
காணப்படும் பகுதிகள்
ஆறுகளில் மணற்பாங்கான திட்டுக்களைச் சார்ந்து காணலாம். பெரிய நீர்நிலைகளின் மீதும் பறந்து இரை தேடும். இறக்கைகளை மடக்கி நீரில் பாயும் இது. வெளிப்படும்போது அலகில் மீன் இருக்கக் காணலாம். இறக்கைளில் ஒட்டியிருக்கும் நீரினை உலுக்கியபடி பறந்தபடியே மீனின் தலை முதலில் உள்ளே செல்லும்படி விழுங்கும் இரை தேடி முடிந்தபின் பலவும் கூட்டமாக ஆற்று மணலில் காற்று வீசும் திசையைப் பார்த்தபடி அமர்ந்திருக்கும் இரவுப் பொழுதையும் மணல் மேடுகளிலேயே கழிக்கும்.
உணவு
பெரும்பாலும் மீன்கள். இறால் வகை உயிரினங்களையும், நீரில் உள்ள பூச்சிகளையும் உண்ணும்.
இனப்பெருக்கம்
மார்ச் முதல் மே வரை ஆற்று மணல் மேடுகளில் சிறுகுழி பறித்து பலவும் அருகருகே 3 முதல் 4 முட்டைகள் இடும். அணைக்கரை அருகே கொள்ளிடத்தில் மே மாதத்தில் இவை இனப்பெருக்கம் செய்த குறிப்பு உள்ளது.