உடலமைப்பு
ஆங்கிலப்பெயர் :Ruddy Turnstone
அறிவியல் பெயர் :Arenaria interpres
22 செ.மீ. – நேரான கூம்பு வடிவிலான கருப்பு அலகும். வெள்ளை நிற மோவாயும், தொண்டையும் இதனை அடையாளம் காண உதவுபவை. கரும் பழுப்பான உடலையும் வெண்மையான பின்முதுகு, பிட்டம் ஆகியவற்றையும் பெற்றிருக்கும். பிட்டத்தில் கருப்புநிற குறுக்குப் பட்டையைக் காணலாம். முன் கழுத்தும், மார்பின் பக்கங்களும் பழுப்பு நிறத்தன. வயிறும், வாலடியும் வெண்மையானவை.
காணப்படும் பகுதிகள்
குளிர்காலத்தில் வலசை வரும் இதனைப் பாறைகள் காணப்படும் கடற்கரை சார்ந்த மணல் திட்டுக்களில் காணலாம். உள்நாட்டில் நன்னீர் நிலைகளில் காண முடியாது. கரையோரமாகவே வலசை வந்து கடல் சார்ந்த வட்டாரங்கள் வழியாகத் திரும்பும் பழக்கம் உடையதால் இதுபற்றி விவரங்கள் முழுமையாகத் தெரியவரவில்லை. கடலில் நீந்தும் பழக்கம் உடையது.
உணவு
சிறு குழுவாக மணலில் சிறு கற்களைப் புரட்டி அவற்றின் அடியே பதுங்கியிருக்கும் சிறு பூச்சிகளைப் பிடிக்கும் பழக்கம் உடையதால் இப்பெயர் பெற்றுள்ளது. கடல் நத்தை. நண்டு மணலில் காணப்படும் தத்துக்கிளி முதலியன இதன் உணவு. பறக்க எழும்போது சிறு குரல் கொடுக்கும்.