பேதை உள்ளான் (Ruff) என்பது கரைப்பறவைகள் (shore birds or waders) வகையைச் சார்ந்த ஒரு பறவை. பல உள்ளான் வகைப் பறவைகளும் இப்பிரிவில் அடங்குவன. இப்பறவையின் விலங்கியல் பெயர் Philomachus pugnax. ஆங்கிலத்தில், இப்பறவையின் ஆண் Ruff என்றும் பெண் பறவை Reeve என்றும் அழைக்கப்படுகின்றது. இது இந்தியாவில் பரவலாகக் காணப்படும் குளிர்கால-வரவி (winter visitor) ஆகும்; மேலும் இது ஒரு வழிசெல் இடம்பெயர்வி (passage migrant). பெரும்பான்மையாக ஐரோப்பாவில் இனப்பெருக்கம் செய்யும் இவற்றின் தற்போதைய எண்ணிக்கை 32.8 இலட்சம் சோடி உள்ளான்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. (பேதை உள்ளான்கள் சோடியாக இருப்பதில்லை; குடிபெயர்வதும் இல்லை — இங்கே சோடி என்று குறிப்பிடப்படுவது அவற்றின் மொத்த எண்ணிக்கையை உணர்த்துவதற்குத் தான்!)
அடையாள விளக்கம்
பேதை உள்ளான்கள் நீண்ட கழுத்து, சிறிய தலை, நுனியில் சற்று-சரிந்த சிறிய அலகு, பானை வயிறு, சற்றே-பெரிய ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறக் கால்கள் கொண்ட கரைப்பறவைகள். ஆண் பறவை பெண் பறவையை விட சற்று பெரியது. ஆண் பறவை, பவளக்காலி எனப்படும் Red shank – ஐ ஒத்த அளவு கொண்டிருக்கும்; பெண் பறவை, மர உள்ளான் எனப்படும் Wood sandpiper – ஐ ஒத்த அளவு கொண்டிருக்கும். இப்பறவை பால் ஈருருமை (sexual dimorphism) உடையது: கோடையில் (அதன் இனப்பெருக்கக் காலத்தில்) ஆணின் கழுத்தைச் சுற்றி வெண்ணிறத்திலோ பிற நிறத்திலோ சிறகுத்தொகுதி காணப்படும். இவற்றின் பழுப்பு நிற வால் மற்ற உள்ளான்களில் இருந்து இவற்றை வேறுபடுத்திக் காட்டும்.
பரவலும் இருப்பிடமும்
பேதை உள்ளான்கள் வட ஐரோப்பா, சைபீரியாவிலுள்ள ஆர்க்டிக் துந்துரா சமவெளிப் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. குளிர் மிகுந்த பனிக்காலங்களில் இவை அப்பகுதிகளை விட்டு குடிபெயர்கின்றன: பெரும்பாலும் தென் ஐரோப்பா, ஆப்பிரிக்காவின் கடற்கரை-சதுப்பு நிலங்களுக்குச் செல்கின்றன; தெற்காசியா, ஆத்திரேலியா நோக்கியும் இவை குடிபெயர்வதுண்டு. இந்தியாவில், குறிப்பாக கோடிக்கரை வனவிலங்குகள், பறவைகள் சரணாலயத்திற்கு வரும் பேதை உள்ளான்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.
இனப்பெருக்க காலமும் கலவி முறையும்
ஆண் உள்ளான்கள் லெக் என்றழைக்கப்படும் ஒருவித கோதாவில் இறங்கித் தம் வீரியத்தைக் காட்டுகின்றன; இங்கு மூன்று விதமான ஆண் உள்ளான்கள் காணப்படுகின்றன:
இனப்பெருக்கக் காலங்களில், பேதை உள்ளான் ஆண்கள் கழுத்துப்பட்டை போன்ற சிறகுத்தொகுதியுடனும் (இச்சிறகுத்தொகுதிகள் அடர் நிறத்திலோ (எல்லையரசர்கள்) வெண்ணிறத்திலோ (துணைக்கோள் ஆண்கள்) இருக்கும்; மூன்றாம் வகை விளிம்பு-நிலை ஆண்கள் பெண் உள்ளான்களை ஒத்திருக்கின்றன) கொண்டை போன்ற தலைப்பகுதியுடனும் வகை வகையான நிறங்கள் கொண்ட தாடைப்பகுதியுடனும் காட்சியளிக்கின்றன.
கோதாவிற்கு வரும் பெண் உள்ளான், திறமையான ஆணைத் தேர்ந்தெடுத்து அதனுடன் கலவியில் ஈடுபடுகிறது; பின்னர் அப்பெண் உள்ளான் லெக்கை விட்டு வெளியேறிச் சென்றுவிடும்.
கூடு கட்டுதல், பராமரித்தல்
கூடு கட்டுவதிலோ குட்டிகளை வளர்ப்பதிலோ ஆண் உள்ளான் எவ்வித பங்கும் கொள்வது இல்லை. புற்கள், சதுப்புநிலச் செடிகளுக்கு இடையில் எளிதில் தெரியாத வண்ணம், தரையில் கூடு கட்டுகிறது பெண் உள்ளான்; இதன் கூடு தரையில் ஒரு பள்ளம் எடுத்து அதைச்சுற்றி புற்களிட்டு கட்டப்படுகிறது.
முட்டைகள், குஞ்சுகள்
பெண் உள்ளான் சராசரியாக நான்கு முட்டைகளை இடுகிறது; 20-23 நாட்களுக்குப் பிறகு முட்டை பொரிந்து குஞ்சு வெளிவருகிறது. குஞ்சுகளுக்கு உணவு கொண்டு வருவதும் பெண் உள்ளானே. சுமார் ஒரு மாதத்திற்குப் பின்னர் குட்டி உள்ளான் பறக்கத் தொடங்கி விடும்.
குடிபெயர்தல்
பேதை உள்ளான்கள் குளிர்காலங்களில் மேற்கு ஐரோப்பாவிலிருந்து மேற்கு ஆப்பிரிக்கா வரையிலும் காணப்படுகின்றன; இவை கிழக்கே இந்தியா வரையிலும் குடிபெயர்கின்றன. (இந்தியாவுக்குக் கிழக்கே இவை அரிதாகவே செல்கின்றன) மிகுதியான எண்ணிக்கையில் இவை குடிபெயர்வது ஆப்பிரிக்காவுக்குத்தான். (சில பேதை உள்ளான்கள் 15,000 கி.மீ. வரை பறந்து செல்கின்றன). ஆண் உள்ளான்கள் தனியாகவும் பெண் உள்ளான்கள். சிறு உள்ளான்கள் தனியாகவும் குடிபெயர்கின்றன.
பெயர்வு
சூலை முதல் இவற்றின் பெயர்வு தொடங்கும்; முக்கிய, பெரும் பெயர்வுகள் சூலை இறுதியில் தொடங்கி நடு-செப்டம்பர் வரை நிகழ்கின்றன (நவம்பர் வரை இது நீள்வதுண்டு).
மீள்-திரும்புதல்
நடு-பெப்ருவரி யில் தொடங்குகின்றது; முக்கியப் பெயர்வுகள் மார்ச்சில் தொடங்கி ஏப்ரல் இரண்டாம் வாரம் வரையிலும் தொடர்கிறது.
உணவும் உட்கொள்ளும் காலமும்
பெரும்பாலான கரைப்பறவைகளின் உணவான பூச்சிகள், முதுகெலும்பில்லாத உயிரினங்கள் ஆகியவையே பேதை உள்ளான்களின் உணவும்; குடிபெயர்தலின் போதும் குளிர்காலத்திலும் விதைகளையும் இவை உண்கின்றன. இக்கால கட்டத்தில் அரிசி, மக்காச்சோளம் ஆகிய தானிய விதைகள் இவற்றின் உணவாகும்.
ஈக்கள், வண்டுகள் போன்ற தரை-வாழ், நீர்-வாழ் பூச்சிகளும் அவற்றின் முட்டைப்புழுக்களுமே பேதை உள்ளான்களின் இனப்பெருக்க கால முக்கிய உணவாகும்.
குடிபெயர்தலின் போதும் குளிர்காலத்திலும் பூச்சிகள் ( கேடிசு ஈக்கள், நீர்-வண்டுகள், மே ஈக்கள், வெட்டுக்கிளிகள்), வெளியோடுடைய உயிரிகள், சிலந்திகள், நத்தை போன்ற மெல்லுடலிகள், புழுக்கள், தவளைகள், சிறு மீன்கள் ஆகிய உயிரி வகை உணவுகளும் அரிசி, மக்காச்சோளம், பிற தானியங்கள், செட்சு, புல்வகைகள், நீர்த்தாவரங்கள் ஆகிய தாவர உணவு வகைகளும் இவற்றின் உணவாக அமைகின்றன.
RUFF பெயர்க்காரணம்
பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் புழங்கிய கழுத்துப்பட்டைப் பாணியை ஒத்த கழுத்துப்பட்டை போல இவற்றின் சிறகுத்தொகுதி உள்ளதால் Ruff என்ற பெயர் வந்தது.