நீலமஞ்சள் ஐவண்ணக் கிளி அல்லது நீலமஞ்சள் பெருங்கிளி என்பது கிளிக் குடும்பத்தைச் சேர்ந்த மக்காவ் என்னும் பெருங்கிளி வகையைச் சேர்ந்த ஒரு பறவை. இப்பறவைகள் தென்னமெரிக்கக் காடுகளில் காணப்படுகின்றன.
இயல்பு
இப்பெருங்கிளி 76 முதல் 83 செ.மீ நீளமும் 900 முதல் 1300 கிராம் எடை வரையும் வளரக்கூடியது. இப்பறவை பார்ப்பதற்கு அழகாக நீல இறக்கை, வாலுடனும் கருநீல கன்னமும், உடலின் அடிப்பகுதி பொன்மஞ்சளாகவும் இருக்கும். இதன் நெற்றி பச்சைநிறத்திலும் அலகு கருப்பாகவும் இருக்கும். கடினமான கொட்டைகளை உடைத்துத் தின்ன ஏதுவாக இப்பறவை உறுதியான அலகினைப் பெற்றுள்ளது.
இனப்பெருக்கம்
இப்பறவைகள் பொதுவாக வாழ்நாள் முழுவதும் ஓரிணையுடன் வாழ்கின்றன. மரப்பொந்துகளில் கூடுகட்டி வாழ்கின்றன. பெண் கிளியானது இரண்டிலிருந்து மூன்று முட்டைகள் வரை இடும். 28 நாட்கள் அம்முட்டைகளை அடைகாக்கும்.
இப்பறவைகள் இவற்றின் அழகான தோற்றத்திற்காகவும் இவற்றின் பேசும் திறனுக்காகவும் மக்களால் விரும்பி வளர்க்கப்படுகின்றன.