ஆக் அல்லது அல்சித் என்பது சரத்ரீபார்மசு வரிசையில் அல்சிடே குடும்பத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ள ஒரு பறவை ஆகும். இதன் குடும்பத்தில் முர்ரேக்கள், கில்லேமோட்டுகள், ஆக்லெட்டுகள், பபின்கள் மற்றும் முர்ரேலெட்டுகள் ஆகியவை உள்ளன.
அற்றுவிட்ட இனமான பெரிய ஆக் தவிர, மற்ற அனைத்து ஆக்குகளும் நீருக்கு அடியில் மற்றும் காற்றில் அவற்றின் “பறக்கும்” திறனுக்காக அறியப்படுகின்றன. இவை சிறந்த நீச்சலடிப்பவையாகவும், முக்குளிப்பவையாகவும் இருந்தபோதிலும் இவற்றின் நடை விகாரமாக உள்ளது.
விளக்கம்
தற்போது உயிர்வாழக்கூடிய ஆக்குகள் சிறிய ஆக்குலெட்டில் (எடை 85 கிராம், நீளம் 15செ.மீ.) இருந்து தடித்த அலகு முர்ரே (எடை 1 கி.கி., நீளம் 45 செ.மீ.) வரை வேறுபட்ட அளவுகளில் காணப்படுகின்றன. குட்டையான இறக்கைகள் காரணமாக, ஆக்குகள் பறப்பதற்கு வேகமாகச் சிறகடிக்க வேண்டியுள்ளது.