கம்புள் கோழி, சம்புக்கோழி அல்லது வெள்ளை நெஞ்சு நீர்க்கோழி (white-breasted waterhen, Amaurornis phoenicurus) என்பது நீர்க்கோழி இனப்பறவை ஆகும். இப்பறவை இந்தியத் துணைக்கண்டத்திலும், தெற்காசியா முழுக்கப் பரவலாகவும் காணப்படுகிறது. இப்பறவையின் உடல் சாம்பல் நிறத்தில் இருக்கும். ஆனால் முகமும், நெஞ்சும் வெண்மையாக இருக்கும். இப்பறவைகள் சதுப்பு நிலங்களில் கோரைகளை ஒட்டி குளம், குட்டைகளில் காணப்படும்.
வாழ்விடம்
இதன் இனப்பெருக்க வசிப்பிடங்கள் தென்இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் பாக்கிஸ்தான், மாலைதீவுகள், இந்தியா, பங்களாதேஷ், மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து தெற்காசியா முழுவதும் உள்ளது. இவை சமவெளிப்பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. ஆனால் கேரளாவில் நைனிடால் (1300 மீ) மற்றும் உயர் ரேஞ்ச் (1500 மீ) போன்ற உயர் மலைகளிலும் அறியப்படுகின்றன. இப்பறவைகள் குறுகிய தூரம் மட்டுமே பயணித்து புதிய இடங்களில் குடியேறுகின்றன. ராகடா என்னும் எரிமலை தீவில் முதன் முதலில் இப்பறவைகள் குடியேறி புதிய இடங்களை தோற்றுவித்தன. இவை பெரும்பாலும் நன்னீர் அருகே காணப்பட்டாலும், நன்னீர் கிடைக்காத போது உவர்ப்பான நீரிலும் காணப்படுகிறது.
இயல்பு மற்றும் சூழலியல்
இந்த பறவைகள் நீர்நிலைகளின் விளிம்பில் முக்கியமாக நிலத்தில் தன் மேய்ச்சல் தேடும் பணியை மேற்கொள்வதால் பொதுவாக தனியாகவோ அல்லது ஜோடியாகவோ காணப்படுகின்றன. குறைந்த நிலத்தினை வளர்ச்சி உள்ள நிலங்களில் சில சமயங்களில் ஏறுகின்ற வழக்கம் உடையது. இதன் வால் நடக்கும் போது மேல்நோக்கி நிற்கும் மற்றும் மெதுவாக குலுங்கும். இவை தங்கள் அலகினால் மண் மற்றும் நீரினை தோண்டி ஆராய்ந்து தனக்கு வேண்டிய உணவினை தேடும். மேலும் இவை உணவினை பார்வையால் தேடி எடுத்துக்கொள்ளும். இவை சில சமயங்களில் ஆழமான நீரில் காட்டுக்கோழி பறவை போல் இரை தேடி உண்ணும்.
இனப்பெருக்கக்காலம்
இவற்றின் இனப்பெருக்கக் காலம் பெரும்பாலும் சூன் முதல் அக்டோபர் வரை இருக்கும் ஆனால் உள்நாட்டில் மாறுபடும். தரையில் உள்ள சதுப்பு தாழ்நிலத்தில் ஒரு உலர்ந்த இடத்தில் கூடு கட்டும். ஆறு முதல் ஏழு முட்டைகளை அதில் இடும். வளைந்த தன் வாய்ப்பகுதியை வைத்து உணவினை சிறிது சிறிதாக கடிக்கும். முட்டைகள் 19 நாட்களில் குஞ்சு பொரித்து விடும். ஆண் நீர்க்கோழி மற்றும் பெண் நீர்க்கோழி இரண்டும் சேர்ந்து முட்டைகளை அடைகாத்து குஞ்சுகளைப் பராமரிக்கும். எதிரிகளிடம் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக அடிக்கடி குஞ்சுகள் நீரில் மூழ்கி எழும். முழுவளர்ச்சி அடைந்த கோழி, அடைகாக்க ஓர் பறவைக்கூண்டு அமைத்துக்கொண்டு அதில் இளைப்பாறும்.