அசில் கோழி

அசில் (Asil அல்லது Aseel) என்பது ஒரு கோழி இனமாகும். இது பாக்கித்தானின் சிந்து தெற்கு பஞ்சாப்பை சேர்ந்தது என்றும், குறிப்பாக அங்கு உள்ள அசாரா என்ற பகுதியைச் சேர்ந்தது என்றும் கருதப்படுகிறது. [சான்று தேவை]


மேலும் இது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் கிராமப்புறங்களில் புகழ்வாய்ந்த கோழி இனமாக உள்ளது. தென்கிழக்கு ஆசியா முழுவதும் இதை ஒத்த கோழி இனங்களாக சாக்மா மற்றும் தாய் கேம் போன்றவை காணப்படுகின்றன. இந்த இனமானது பொதுவாக தெற்காசியாவிலும், இந்தியாவிலும் தரப்படுத்தப்படாமல் உள்ளது. ஆனால் மேற்கத்திய நாடுகளில் இதன் புகழ் உயர்ந்து வருகிறது. அண்மைக்காலமாக பிரித்தானியா, ஆத்திரேலியா அமெரிக்காவில் தரப்படுத்தப்பட்டு வருகிறது.


விளக்கமும், வரலாறும்


அசில் கோழிகளானது சண்டை சேவல்களாக கருதப்படுகின்றன. இவை முதன்மையாக சேவல் சண்டைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. அசில் அதன் சண்டையிடும் இயல்புக்காக கவனிக்கப்படுகிறது. பிறந்து சில வாரங்களிலேயே இந்த கோழிகளானது அடிக்கடி சண்டையிடத் தொடங்குகின்றன, அதன்பிறகு அவை இறக்கும்வரை சண்டையிடுகின்றன.


இந்த கோழிகள் அதிக முட்டையிடுவதில்லை, என்றாலும் நல்லவிதமாக அடைகாப்பவையாக உள்ளன. அசில் வகை கோழிகளில் சிறியவகை அசில்கள் ஆண்டுக்கு ஆறு முட்டைகள் மட்டுமே இடக்கூடியன. பெரிய அசில்கள் ஆண்டுக்கு 40 முட்டைகள்வரை இடக்கூடியன.


அமெரிக்காவின் கால்நடை பாதுகாப்புக் கழகத்தால் இந்த இனக் கோழிகளானது “கவனிப்புபட்டியல்” (2012) இல் வைக்கப்பட்டுள்ளது. அசில் கோழி இனமானது இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெருமளவில் வளர்க்கப்படுகிறது.


வகைப்பாடு


வகைகள்


அசிலில் பல வகைகள் உள்ளன. இவற்றில் சில ஐக்கிய இராச்சியத்தில் ரெசா அசில் என்று தரநிலையாக்கப்பட்டுள்ளன. பாக்கித்தானில் சில வகை அசில்களுக்கு மியான்வாலி அசில் என அவை இனப்பெருக்கம் ஆன பகுதிகளைக் கொண்டும், அவற்றின் நிறத்தைக் கொண்டு அதாவது சிவப்பு/கோதுமை வண்ணம் ஆகிய நிறமுள்ள அசில்களை பொதுவாக சோனட்டல் என அழைக்கின்றனர்.


பல்வேறு நிறங்களைக் கொண்ட இறகுகளைக் கொண்ட கோழியானது “மடரூ” (Madaroo) என அழைக்கப்படுகிறது.


மெட்ராஸ் அசில்


தமிழில் இதன் உள்ளூர் பெயர் கத்திக்கால் பெறுவடையாகும். இது பழைய சென்னை மாகாணத்தில் இருந்த பெரிய சேவல் வகை ஆகும். இதில் சிலவகையின் உடல் அமைப்பானது நீண்ட வாலும், கிளிமூக்கும் கொண்ட கிளிமூக்கு அசிலைப் போன்றதாக இருந்தாலும் இவற்றின் வாலும் மூக்கும், கிளிமூக்கு அசில் போலன்றி சாதாரணமானதாகக் காணப்படும். இவை கத்திக்கட்டு சண்டைக்குப் பயன்படுகின்றன. இவை பெரும்பாலும் தமிழ்நாட்டில் காணப்படுகின்றன.


கிளிமூக்கு அசில் (கிளி மூக்கு/விசிறிவால்)


(தமிழ் உள்ளூர் பெயர் : கிளிமூக்கு விசிறிவால் பெறுவடை அசில்) கிளிமூக்கு விசிறிவால் பெறுவடை அசில் என்பவை தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் காணப்படுகின்றன. இவை அக்காலத்தில் சண்டை சேவல்களாக வளர்க்கப்பட்டன என்றாலும் தற்காலத்தில் அழகுக்காக மதிப்பு மிக்கதாக வளர்க்கப்படுகின்றன. இந்தக் கோழி இனங்கள் கிளியைப் போன்ற அலகினைக் கொண்டதால் கிளி மூக்கு சேவல் என்றும், இவற்றுக்கு மயிலைப் போல நீண்ட வால்கள் இருப்பதால் விசிறிவால் சேவல் என்றும் அழைக்கப்படுகின்றன.


இந்தப் பறவைகளானது பொதுவாக அவற்றின் உடலமைப்பு மற்றும் வண்ணக் கலவையின் அடிப்படையில் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன:


 • மயில் கருப்பு (கருப்பு மற்றும் மஞ்சள்)

 • காகம்/செங்கருப்பு (கருப்பு மற்றும் சிவப்பு )

 • செவலை (சிவப்பு)

 • கருங்கீரி/செங்கீரி (கருப்பு/சிவப்பு புள்ளி கொண்டது)

 • சாம்பல் பூதி (சாம்பல் நிறம்)

 • கொக்கு வெள்ளை (வெண்மை)

 • நூலன் (வெண்மை மற்றும் கருப்பு)

 • பொன்ரம் (தங்க பழுப்பு)

 • ஒரு வயதான கிளிமூக்கு அசிலானது ஐந்து கிலோ கிராம் எடை முதல் ஏழு கிலோகிராம் எடைவரை எட்டும். இந்த அசில்கள் ஒரு காலத்தில் சீனா மற்றும் தாய்லாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன ஆனால் இப்போது ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் இந்த கம்பீரமான பறவையின் முட்டைகளுக்காக வருகிறனர். இந்த அசில்களின் சராசரி ஆயுட்காலம் 5 முதல் 8 ஆண்டுகள் வரை ஆகும். என்றாலும் 10 வயதுவரை வாழ்வதும் உண்டு.


  அதிகரித்துவரும் தேவையின் காரணமாக இதை வளர்ப்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தப் பறவைகளின் மதிப்பும் உயர்ந்து வருகின்றது. இவற்றின் நிறம், நீளம், வால் அமைப்பு, அலகின் தடிமன் மற்றும் வளைவு, தலையின் வடிவம், ஒட்டுமொத்த உடல் அமைப்பு, அளவு, நிலைத்தன்மை ஆகியவற்றைப் பொறுத்து இவற்றின் விலையானது ரூ. 7000 முதல் ரூ.1,50000 வரை உள்ளது.


  இந்த வகை சேவல்கள் தென்தமிழக கிராமங்களில் பல நூற்றாண்டுகளாக வளர்க்கப்படுகின்றன. மதுரை, அலங்காநல்லூர், திண்டுக்கல், திருச்சி, பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, சேலம், நாமக்கல், கரூர் போன்ற பகுதிகளில் இவை குறிப்பிடத்தக்க அளவில் வளர்க்கப்படுகின்றன. பல நூற்றாண்டுகளாக தலைமுறை தலைமுறையாகத் தேர்ந்தெடுத்த கோழி இனங்களை வளர்த்து கிளி மூக்கு அசில்களை உருவாக்கினர்.


  அசில் வளர்ப்பவர்களின் பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் பின்வருமாறு:


 • அனைத்திந்திய அசில் அமைப்பு – ஏஐஏஓ

 • திண்டுக்கல் அசில் வளர்போர் சங்கம்

 • இந்திய அசில் வளர்போர் சங்கம் பழநி

 • திருச்சி அசில் வளர்போர் சங்கம்

 • தமிழ்நாடு அசில் அமைப்பு -டிஏஓ

 • இந்த சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களில் அசில் வளர்ப்பதற்காக நன்கு அறியப்பட்டவர்கள்.


  ஒவ்வோராண்டும் இந்த சங்கங்கள் அசில் கண்காட்சிகளை நடத்துகின்றன. இந்தக் கண்காட்சியில் இந்தியா முழுவதிலும் இருந்து வரும் அசில் வளர்ப்பாளர்கள் தாங்கள் வளர்க்கும் கிளிமூப்க்கு அசில் சேவல்களின் பெருமையை பறைசாற்றும் விதத்தில் காட்சிபடுத்துகின்றனர்.


  ரெசா அசில்


  இவற்றின் உயரமானது 50 செமீ வரை இருக்கும். எடையானது: கோழிகள் அதிகபட்சமாக 1.8 கிகி, சேவல்கள் அதிகபட்சமாக 2.7 முதல் 3 கிகி வரை.


  இந்த வகை அசிலானது இங்கிலாந்தில் உள்ள ஆசிய ஹார்ட்பேர் சொசைட்டி மூலம் தரப்படுத்தப்படுகிறது. இவை இங்கிலாந்து முழுவதும் காட்சிகளில் காணப்பட்டாலும், மிகவும் அரிதானதாகவே உள்ளது.


  குலாங் அசில்


  இவற்றின் உயரம்: 75 செமீ வரை . எடை: 5 முதல் 7 கிகி வரை உள்ளன.


  இவற்றில் பெரிய அசில்கள் சில துணை வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன: வட இந்திய வகை, தென் இந்திய வகை, மெட்ராஸ் வகை என்பனவாகும்.


  வட இந்திய, தென்னிந்திய வகைகளுக்கு இடையில் அதிக வேறுபாடுகள் இல்லை. இவற்றுக்கு இடையில் கொண்டை, அலகு வடிவம், உடல் வடிவம் போன்ற வேறுபாடுகள் உண்டு. உதாரணமாக: வட இந்திய வகை ஒல்லியானது; தென்னிந்திய வகை கனமானது. இதில் மெட்ராஸ் அசில் குறிப்பிடத்தக்க அளவில் வேறுபட்டது; இவை மிக இறுக்கமான உடல்வாகும், உறுதியான எலும்புகளும் கொண்டவை. இந்தப் பறவைகள் பெரும்பாலும் நீல வண்ணம் கொண்டவையாக உள்ளன. இவை தமிழ்நாட்டில் காணப்படுகின்றன.


  சிந்தி அசில்


  சிந்தி அசில் (Sindhi Aseel அல்லது Sindhi Asil (சிந்தி: سنڌي اسيل, உருது: سندهي اسيل) என்பவை சிந்து பகுதியில் தோன்றிய கோழி வகை என்பதால் இப்பெயரைப் பெற்றன. இந்த கோழிகள் அல்லது சண்டை சேவல்களானது இவற்றின் உயரமான வடிவத்துக்கும், கனமான உடலமைப்புக்கும், நன்கு சண்டையிடும் பண்புக்காகவும் நன்கு அறியப்படுகின்றன. மேலே குறிப்பிட்ட இதன் பண்புக்காக இவை சேவல் சண்டைக்காக வளர்க்கப்படுகின்றன.


  மியான்வாலி


  இந்த இனமானது முதன்மையாக பாக்கித்தானின் மியான்வாலி மாவட்டத்தில் காணப்படுகிறது. என்றாலும் இது பாக்கித்தானில் புகழ்வாய்ததாக உள்ளது. தற்போது இந்த சேவல் இனமானது சேவல் சண்டை போட்டி சூதாட்டக்காரர்களால் விரும்பப்படுவதாக உள்ளது. இவை சிந்தி அசில்களை ஒப்பிடும்போது சிறியவை. இவற்றின் எடையானது வளர்ப்பு முறையைப் பொறுத்து 1.5 கிகி முதல் 3.5 கிகி வரை இருக்கின்றன. இது மிக வேகமானதாகவும், சிறப்பாக தலையை தாக்கக்கூடியதாகவும், சிறியது முதல் நடுத்தர உயரம்வரை உள்ளதாகவும் இருக்கின்றது. ஒரு நல்ல மியான்வாலி அசீலானது ஒரு சில நிமிடங்களில் அதன் எதிரியை கொல்லக்கூடியது. இவற்றின் வேகம் மற்றும் துல்லியத்தன்மையின் காரணமாக பெரிய சேவல்களையும் கொல்லும் திறன் கொண்டவை. இவற்றில் உருவான இனக்கலப்பின் காரணமாக இவற்றில் பல துணை இனங்கள் உள்ளன.


  ஜாவா அசில்


  ஜாவா ஆசிலானது பாக்கித்தான் / இந்தியாவில் மிகவும் பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த போர் சேவல் ஆகும். இது முதன்மையாக பஞ்சாப் பகுதியில் காணப்படுகிறது. இது மியான்வாலி மாவட்டத்தில் தோன்றியது ஆகும். ஜாவா அசிலானது அதன் கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களில் காணப்படுகிறது இவற்றில் சில ஆரஞ்சு நிறத்திலும் காணப்படுகிறது. இவை பொதுவாக சிறப்பான சண்டை திறமைக்காக டெசி சேவல் இனங்களுடன் கலப்பு செய்யப்படுகின்றன. இதன் பலவீனம் இதன் நீண்ட கால்கள் ஆகும். என்றாலும் இவை சண்டைகளில் மிகுதியாக வெற்றிபெறக்கூடியதாக உள்ளன. இவை கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்திலும் காணப்படுகின்றன. ஜாவா சேவல்களின் உயரமானது 50 செமீ வரையும், எடையானது 7 முதல் 8 கிலோ இருக்கும்.


  அம்ரோகா


  இந்த கோழி இனமானது இந்தியாவிலும் பாக்கித்தானிலும் பயன்படுத்தப்படும் அசிலுடன் மிக நெருக்கமான, ஒரு மிக அரிதான கோழி இனமாகும். இந்த இனக் கோழிகளானது இந்தியாவில் ஆபத்தான நிலையில் உள்ளன. பாக்கித்தானில்கூட இவை கலப்பற்று மிகக்குறைவாகவே உள்ளன. இவை பொதுவாக கறுப்பு அல்லது சிவப்பு நெஞ்சுடனோ அல்லது கரும் பழுப்பு நிறத்தில் இருக்கும். பொதுவாக இவற்றின் கால்கள் குட்டையாக இருக்கும். இவற்றின் பாதங்கள் அதிகபட்சமாக 3 செமீ கொண்டவையாக இருக்கும். இவை தடிமனான எலும்பைக் கொண்டவையாகவும், வளர்ப்பு முறையைப் பொறுத்து இரண்டு கி.கி எடை வரை எட்டக்கூடியனவாக உள்ளன. இவற்றின் வால் மற்றும் இறக்கைகளில் வெள்ளை இறகுகள் இருக்கின்றன. அம்ரோகா அசிலானது பார்க்க அழகானவையாக இருக்கும். இவை பிற அசில்களைவிட மிகவும் சத்தமிடுபவையாக உள்ளன. அம்ரோகா கோழிகள் 9 முதல் 10 முட்டைகளை மார்ச் முதல் ஏப்ரல்வரை இடுகின்றன, பொதுவாக செப்டம்பரிலும் முட்டை இடுகின்றன.


  பாந்தம் அசில்


  எடை: 0.75 கிகி வரை.


  பாந்தம் அசிலானது 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேயரான வில்லியம் பிளாமங்க் எண்ட்வில்லே என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்த இனமானது அது உருவாக்கப்பட்ட பிறகு மிக பிரபலமான ஒன்றாக இருந்தது. ஆனால் பல தசாப்தங்களுக்குப் பிறகு இது மெல்ல மெல்ல காணாமல் போனது. 1980 களின் துவக்கம் வரை இந்த சிறிய ஆசிலைப் பற்றி எதுவும் தெரியவில்லை. வில்லீ காஸ்பென்ஸ் என்ற பெயர் கொண்ட ஒரு பெல்ஜியன் இனப்பெருக்க மையமனாது மீண்டும் ஷாமா (கோழி), இந்திய கேம் மற்றும் ரசா ஆசிலைக் கொண்டு மீண்டும் இந்த இனத்தை உருவாக்கியது. இந்த இனமானது நெதர்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது பாந்தம் ஆசிலானது மிகவும் பிரபலமாக உள்ளது. மேலும் இவை பல்வேறு நிறங்களில் வளர்க்கப்படுகின்றன.


  லசானி அசில் இனம்


  பாக்கித்தான் அசில் இனங்களைக் கொண்டு பல்வேறு வகை அசில் இனங்கள் உருவாகியுள்ளன. என்றாலும் அவற்றில் அரிதான இனங்களில் ஒன்றாக லசானி அசீல் இனம் கருதப்படுகிறது. நடுத்தர அளவான இந்த சேவல்களானது, இவற்றின் ஆற்றல்மிக்க தாக்குதல் திறனால் கழுத்து முறிப்பான் என்ற பட்டத்தைப் பெற்றன. இவற்றின் அலகு கிளி போன்றமாகவும், மிகச்சிறிய கழுத்தை கொண்டதாகவும் இருக்கும். இவை மியான்வாலி போல அல்லாமல் தனியான சண்டை பாணியைக் கொண்டுள்ளன. இவை எதிரி சேவல்மீது குதிக்காமல், அதன் முன்பு நெருக்கமாக சென்று அதன் கழுத்தை தாக்கவே விரும்பும். அம்ரோக மற்றும் லசானி ஆகிய அசில் இனங்கள் நெருங்கிய தொடர்புடையவை என்றாலும், லசானிய இனமானது சிறிய கழுத்தைக் கொண்டதாக உள்ளன. நவாபின் சில குடும்பங்கள் மட்டுமே இந்த இனத்தை அதன் தூய்மையான வடிவத்தில் கொண்டுள்ளனர். இந்த வகையானது பெங்காம் வகையைச் சேர்ந்தவையாக தவறான கருத்து உள்ளது.


  வெளி இணைப்புகள்

  அசில் – விக்கிப்பீடியா

  Asil chicken – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published.