பாலைவன குருவி (Desert sparrow)(பசார் சிம்ப்ளக்சு) என்பது என்பது குருவி குடும்பமான பாசெரிடேவினைச் சார்ந்த ஓர் இனமாகும். இது வடக்கு ஆப்பிரிக்காவின் சகாரா பாலைவனத்தில் காணப்படுகிறது. இதேபோன்ற பறவையான, சாருட்னியின் குருவி, நடு ஆசியாவில் காணப்படுகிறது. இது வரலாற்று ரீதியாகப் பாலைவன குருவியின் துணையினமாக அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் இது பல வழிகளில் பாலைவன குருவியுடன் வேறுபடுகிறது. எனவே தற்பொழுது இதனைத் தனி இனமாகப் பன்னாட்டுப் பறவை வாழ்க்கை அமைப்பு, ஐ.ஓ.சி. உலக பறவை பட்டியல் மற்றும் உலக உயிருள்ள பறவைகளின் கையேடு அறிவித்துள்ளது.
பாலைவன குருவியில் இரண்டு துணையினங்கள் சகாரா பாலைவனத்தில் வறண்டப் பகுதியில் காணப்படுகிறது. வாழிட இழப்பால் பாதிக்கப்படும் இந்த பாலைவன குருவி பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்க செம்பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாருட்னி குருவியும் தீவாய்புக் கவலை குறைந்த இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் 2012க்கு முன்னால் இது ஒருங்கிணைந்த ஒரே இனமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
பாலைவன குருவி மனிதர்களின் அருகில் வரப் பயப்படுவதில்லை. சேற்றுச் சுவர்களில் இவை கூடுகளை உருவாக்குகிறது. இந்த பறவைகளை வரவேற்க மொசாபைட் பெர்பர்கள் தங்கள் வீட்டுச் சுவர்களில் துளைகள் வைத்து வீடுகளைக் கட்டுகிறார்கள். இவை “பார்-ரோட்” என்று அழைக்கப்படுகின்றன. மேலும் குருவி ஒன்று வீட்டில் நாள் முழுவதும் பாடினால், நல்ல செய்தியின் அடையாளம் என்று இவர்கள் நம்புகின்றனர். துவாரக்கு மக்கள் இந்த பறவையை “மவுலா-மவுலா” என்று அழைக்கின்றார். இந்த பறவை நமது வசிப்பிடத்திற்கு அருகே தங்கும் பொழுது நல்ல செய்தியைக் கொண்டுவருவதாக நம்புகின்றனர்.