வளர்ப்புக் கின்னிக்கோழி

வளர்ப்புக் கின்னிக்கோழி (Domestic guineafowl, pintades, pearl hen, அல்லது gleanies) என்பது ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒரு கோழி ஆகும். இவை தலைக்கவசக் கின்னிக்கோழியின் கொல்லைப்படுத்தப்பட்ட வகை ஆகும். இது மற்ற பிற விளையாட்டுப் பறவைகளான பெசன்ட்கள் (pheasants), வான்கோழிகள் மற்றும் கௌதாரிகளுடன் தொடர்புடையது ஆகும். இவை எப்போது கொல்லைப்படுத்தப்பட்டன என்று தெரியவில்லை என்றாலும், கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் வளர்ப்புக் கின்னிக்கோழியானது கிரேக்கத்தில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. இவை 25-30 முட்டைகளை இடுகின்றன. இவற்றின் முட்டைகள் சிறிய, கருப்பான மற்றும் மிகவும் தடித்த ஒடுடையவையாக உள்ளன. பெண் கோழிகளுக்குத் தங்கள் கூட்டை மறைத்து வைக்கும் ஒரு பழக்கம் உள்ளது. ஒரு குறிப்பிட்ட அளவு முட்டைகள் வரும்வரை மற்ற கோழிகளுடன் அதைப் பகிர்ந்து கொள்ளும். அடைகாக்கும் காலம் 26-28 நாட்கள் ஆகும். குஞ்சுகளுக்கு ஈரம் ஒத்துக்கொள்வதில்லை. ஏனெனில் இவை ஆப்பிரிக்காவின் வறண்ட பகுதிகளிலிருந்து வந்தவை ஆகும். ஈரமான புற்களின் வழியே தாயைப் பின்தொடர்வதன் மூலம் குஞ்சுகள் இறந்துவிடலாம். முதல் இரண்டு முதல் ஆறு வார வளர்ச்சிக்குப் பிறகு, வளர்ப்புக் கோழிகளிலேயே ஒரு கடினமான வகையாக இவை உருவாகின்றன.


கின்னிக்கோழிகளில் ஆண் பெண் வேறுபாடு அறிவது சேவல்களிலிருந்து பெண் கோழிகளை வேறுபடுத்துவதுபோல் அவ்வளவு எளிதல்ல. இவை பெரியவையாக வளரும்போது, ​​ஆண்களின் தலைக்கவசம் மற்றும் தாடி போன்ற சதையானது பெண்களைக் காட்டிலும் பெரியவையாக உள்ளன. பெண் மட்டுமே இரண்டு வகைச் சத்தமான “பக்-விட்” அல்லது “பொட்-ரக்!” ஐ எழுப்புகின்றன. இதைத் தவிர ஆண் பெண் இரண்டும் பெரும்பாலும் தோற்றத்தில் ஒன்றாகவே உள்ளன.


வளர்ப்புக் கோழியாக இவை பல பூச்சிகளை உண்பதன் மூலம் மதிப்புமிக்க பூச்சி கட்டுப்படுத்திகளாக உள்ளன. இவை லைம் நோயை ஏற்படுத்தும் உண்ணிகளையும் மற்றும் குளவிகளையும் உண்கின்றன. இவை அரிதாகவே அதிக எண்ணிக்கையில் வளர்க்கப்படுகின்றன. எனினும் இவை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மற்ற கோழிகளுடன் வளர்க்கப்படும்போது கொன்றுண்ணிப் பறவைகளுக்கு எதிரான ஒரு பாதுகாப்பு முறையாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஊடுருவல்கள் ஏற்படும்போது இவை இவற்றின் உரத்த குரலில் அழைக்கின்றன. இவை மிகவும் சமூகமாக இருக்கும் பறவைகள் ஆகும். தனியாக இருக்கும் போது இவை வாடத்தொடங்கி விடுகின்றன.


வளர்க்கப்படும் இனங்களில் தலைக்கவசக் கின்னிக்கோழியின் “முத்து” அல்லது இயற்கையான வண்ணம் தவிர பல வண்ண வேறுபாடுகள் உடைய கின்னிக்கோழிகள் வளர்க்கப்பட்டுள்ளன. வெள்ளை, ஊதா, கரும்பலகை நிறம், சாக்கலேட், வெளிர் ஊதா, பவள நீலம், வெண்கலம், காரீயம், பப் டுன்ட்டோட், பொன்னிறம் மற்றும் பல்வேறு வண்ணங்கள் ஆகியவை இதில் அடங்கும்.


வெளி இணைப்புகள்

வளர்ப்புக் கின்னிக்கோழி – விக்கிப்பீடியா

Domestic guineafowl – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.