சிட்டுக்குருவி

சிட்டுக்குருவி (House sparrow, உயிரியல் பெயர்: Passer domesticus) என்பது சிட்டுக்குருவிக் குடும்பமான பேஸ்ஸரிடேவில் உள்ள ஒரு பறவை ஆகும். இது உலகின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது. சிட்டுக்குருவி ஒரு சிறிய பறவை ஆகும். பொதுவாக இதன் நீளம் 16 செ.மீ.ம், எடை 24-39.5 கிராமும் இருக்கும். பெண் சிட்டுக்குருவிகள் மற்றும் குஞ்சுகள் வெளிர் பழுப்பு மற்றும் சாம்பல் நிறத்திலும், மற்றும் ஆண் சிட்டுக்குருவிகள் பிரகாசமான கருப்பு, வெள்ளை, மற்றும் பழுப்பு அடையாளங்களுடனும் காணப்படும். பேஸ்ஸர் பேரினத்தில் உள்ள 25 இனங்களில் இதுவும் ஒன்றாகும். இதன் பூர்வீகம் பெரும்பகுதி ஐரோப்பா, மத்தியத்தரைக்கடல் பகுதிகள் மற்றும் பெரும்பகுதி ஆசியா ஆகும். இது மனிதனால் வேண்டுமென்றோ அல்லது விபத்தாகவோ ஆத்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கக் கண்டங்களின் பெரும்பகுதிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிட்டுக்குருவி உலகிலேயே அதிகபட்சமாகப் பரவிய காட்டுப் பறவையாக உள்ளது.


சிட்டுக்குருவி மனித குடியிருப்புடன் வலுவாகத் தொடர்புடையது ஆகும். இதனால் நகர்ப்புற அல்லது கிராமப்புற அமைப்புகளில் வாழ முடியும். பரவலாக மாறுபட்ட வாழ்விடங்கள் மற்றும் காலநிலைகளில் காணப்படுகின்ற போதிலும் இது பொதுவாக மனித வளர்ச்சியிலிருந்து தொலைவில் இருக்கும் விரிவான காடுகள், புல்வெளிகள் மற்றும் பாலைவனங்கள் ஆகியவற்றைத் தவிர்க்கிறது. சிட்டுக்குருவி தானியங்கள் மற்றும் களைகளின் விதைகளைப் பெரும்பாலும் உண்கிறது. ஆனால் இது ஒரு சந்தர்ப்பவாத உண்ணி ஆகும். பொதுவாக பூச்சிகள் மற்றும் பல உணவுகளையும் சாப்பிடுகின்றது. இதன் கொன்றுண்ணிகள் வீட்டுப் பூனைகள், வல்லூறுகள், ஆந்தைகள் மற்றும் பல பிற கொன்றுண்ணிப் பறவைகள் மற்றும் பாலூட்டிகள் ஆகியவை ஆகும்.


இதன் எண்ணிக்கை, எங்கும் காணப்படும் தன்மை, மனித குடியேற்றங்களுடன் இருக்கும் இணைப்பு ஆகியவை காரணமாக சிட்டுக்குருவி கலாச்சார ரீதியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது பரவலாக, பொதுவாக தோல்வியுற்ற முயற்சியாக விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தியதன் காரணமாகக் கொல்லப்படுகிறது. சிட்டுக்குருவி பெரும்பாலும் ஒரு செல்லப்பிராணியாகவும் வளர்க்கப்படுகிறது. அதேபோல் ஒரு பொதுவாகக் காணப்படும் சின்னமாகவும் உள்ளது. பரவலாகவும் ஏராளமாகவும் இருந்தாலும், இதன் எண்ணிக்கை உலகின் சில பகுதிகளில் குறைந்துவிட்டது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் இதன் பாதுகாப்பு நிலையானது ஒரு தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.


விளக்கம்


அளவீடுகள் மற்றும் வடிவம்


சிட்டுக்குருவி சராசரியாக 16 cm (6.3 in) நீளமுள்ளதாக இருக்கும். பொதுவாக 14 முதல் 18 cm (5.5 முதல் 7.1 in) வரை நீளமுள்ளதாகக் காணப்படுகின்றன. இது ஒரு முழு மார்பு மற்றும் ஒரு பெரிய, வட்டமான தலை கொண்ட ஒரு சிறிய பறவையாகும். இதன் அலகு தடித்து மற்றும் கூம்பு வடிவத்துடனும், மேல் பகுதி அலகின் நீளம் 1.1–1.5 cm (0.43–0.59 in) அளவும் இருக்கும். விதைகளை சாப்பிடுவதற்கு ஒரு தழுவலாக இதன் அலகு கடினமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் வால் 5.2–6.5 cm (2.0–2.6 in) நீளத்தில் குட்டையாக உள்ளது. இறக்கை நாண் 6.7–8.9 cm (2.6–3.5 in)ம், மற்றும் கணுக்கால் 1.6–2.5 cm (0.63–0.98 in) நீளமும் இருக்கும். இதன் எடை 24 முதல் 39.5 g (0.85 முதல் 1.39 oz) இருக்கும். பெண் குருவிகள் பொதுவாக ஆண் குருவிகளைவிடச் சற்றே சிறியவையாக இருக்கும். ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள இரண்டு பாலின உயிரினங்களின் சராசரி எடையளவு சுமார் 30 g (1.1 oz), மற்றும் தெற்குத் துணையினங்களின் எடையளவு சுமார் 26 g (0.92 oz) ஆகும். இளைய பறவைகள் சிறியவையாகவும், குளிர்காலத்தில் ஆண்கள் பெரியவையாகவும் உள்ளன. உயரமான அட்சரேகைகள், குளிர்ந்த காலநிலைகள் மற்றும் சில நேரங்களில் அதிக உயரங்களில் உள்ள பறவைகள் (பெர்க்மானின் விதிப்படி), துணையினங்களுக்கு இடையிலும், துணையினங்களுக்கு உள்ளேயும் பெரியவையாக உள்ளன.


இறகு


இவற்றின் சிறகு பெரும்பாலும் சாம்பல் மற்றும் பழுப்பு வண்ணங்களின் வெவ்வேறு அளவுகளாக உள்ளன. ஆண் பெண் வேறுபாடு இந்த இனத்தில் வலிமையாக வெளிப்படுகிறது: பெண்கள் பெரும்பாலும் மேலே மற்றும் கீழே மஞ்சள் பழுப்பு வண்ணத்தில் உள்ளன. அதே நேரத்தில் ஆண்கள் கண்ணில்படக்கூடிய தலை அடையாளங்களுடன் சிவப்பு முதுகு, மற்றும் சாம்பல் கீழ் பகுதிகளுடன் காணப்படுகின்றன. ஆணுக்கு அலகின் உச்சியிலிருந்து முதுகு வரை அடர் சாம்பல் வண்ணம், மற்றும் அதன் தலையின் உச்சியைச் சுற்றி பக்கவாட்டில் சிவந்த பழுப்பு வண்ணத்துடனும் காணப்படுகிறது. இதன் அலகைச் சுற்றி, தொண்டையில் மற்றும் அலகிற்கும் மற்றும் கண்களுக்கும் இடையே உள்ள இடைவெளிகளில் (லோரெஸ்) கருப்பு வண்ணத்துடன் காணப்படுகிறது. இதன் லோரெஸ் மற்றும் உச்சந்தலைக்கு இடையே ஒரு சிறிய வெள்ளைப் பட்டை உள்ளது மற்றும் கண்களின் பின்னால் உடனே (போஸ்டோகுலர்ஸ்) சிறிய வெள்ளை புள்ளிகள், அதன் மேலே மற்றும் கீழே கருப்பு திட்டுகள் உள்ளது. கீழ் பகுதிகள், கன்னங்கள், காது கவர்ட்கள் (இறகைப் பாதுகாக்கும் இறகுகள்), மற்றும் தலையின் அடிப்பகுதியில் உள்ள கோடுகள் போன்றவை வெளிர் சாம்பல் அல்லது வெள்ளை வண்ணத்தில் உள்ளன. மேல் முதுகு மற்றும் கவசமானது ஒரு சூடான பழுப்பு, பரந்த கருப்பு கோடுகளுடன் காணப்படுகிறது. அடிமுதுகு, மறைக்கப்பட்ட பின்பகுதி மற்றும் மேல் வால் கவர்ட்கள் சாம்பல் பழுப்பு வண்ணத்துடன் காணப்படுகிறது.


ஆண் புதியதான சாதாரண காலத்தோற்றத்தில் மங்கிய வண்ண இறகுகள் மற்றும் பல இறகுகள் மீது வெண்மை குறிப்புகளுடன் காணப்படுகிறது. பிரகாசமான பழுப்பு மற்றும் கருப்பு அடையாளங்கள் காலப்போக்கில் மற்றும் கோதி சுத்தப்படுத்துவதால் வெளிப்படுத்தப்படுகின்றன. இதில் பெரும்பாலான கருப்பு வண்ண தொண்டை மற்றும் மார்பு இணைப்பும் அடங்கும். இந்த இணைப்பு “பிப்” அல்லது “சின்னம்” என்றழைக்கப்படுகிறது. சின்னத்தின் அகலம் மற்றும் பொது அளவில் மாறி உள்ளது. இது சமூக நிலை அல்லது உடற்பயிற்சி அடையாளத்தைக் காட்டுவதாக இருக்கலாம். இந்த கருதுகோள் ஒரு “மெய்யான ‘குடிசைத் தொழிற்துறை’’’ ஆய்வுகளுக்கு வழிவகுத்தது. வயது அதிகமாக அதிகமாக இணைப்புகளின் அளவு அதிகரிக்கும் என்பதை மட்டும் இந்த ஆய்வு நிரூபித்துள்ளது. ஆண்களின் அலகு காலத்தில் கருப்பு வண்ணத்திலும் மற்றும் எஞ்சியிருக்கும் ஆண்டு முழுவதும் அடர் சாம்பல் வண்ணத்திலும் இருக்கும்.


பெண் குருவிக்குக் கருப்பு அடையாளங்களோ அல்லது சாம்பல் உச்சந்தலையோ கிடையாது. அதன் மேல்பகுதி மற்றும் தலை பழுப்பு வண்ணமாக இருக்கும். கவசத்தைச் சுற்றிலும் அடர் கோடுகளுடனும் மற்றும் தனித்தன்மையான வெளிர் புருவத்துடனும் காணப்படும். இதன் அடிப்பகுதிகள் வெளிர் சாம்பல்-பழுப்பு வண்ணத்தில் உள்ளன. பெண் குருவியின் அலகு பழுப்பு-சாம்பல் வண்ணத்தில் இருக்கும் மற்றும் கால இறகில் ஆண் குருவியின் அலகைப் போல் அடர் வண்ணமாக மாறுகிறது.


இளம் குருவிகள் வயது வந்த பெண் குருவியைப் போலவே இருக்கும். ஆனால் கீழ் பகுதியில் அடர் பழுப்பு வண்ணத்திலும், மேல் பகுதியில் வெளிர் வண்ணத்துடனும் காணப்படும். வெளிர்ந்த மற்றும் குறைந்த வரையரையுடைய புருவத்துடனும் காணப்படும். இளம் குருவிகள் பரந்த குண்டான சிறகு விளிம்புகளுடன் காணப்படும். இறகுதிர்க்கும் பெரிய குருவிகளைப் போலவே தளர்வான, அழுக்கான இறகுகளைக் கொண்டிருக்கும். இளம் ஆண் குருவிகள் வயதுவந்த ஆண் குருவிகளைப் போலவே அடர் வண்ணத் தொண்டை மற்றும் வெண்மையான கண்களின் பின்பகுதி ஆகியவற்றைக் கொண்டிருக்கும். அதேநேரத்தில் இளம் பெண் குருவிகள் வெண்மையான தொண்டைப் பகுதியைக் கொண்டிருக்கும். இருப்பினும், இளம் குருவிகளை இறகை வைத்து ஆண் பெண் என சரியாக வேறுபடுத்த முடியாது: சில இளம் ஆண் குருவிகள் வயதுவந்த ஆண் குருவிகளின் அடையாளங்களின்றி இருக்கலாம் மற்றும் சில இளம் பெண் குருவிகள் ஆண் குருவிகளின் அம்சங்களுடன் காணப்படலாம். இளம் குருவிகளின் அலகுகள் வெளிர் மஞ்சள் முதல் வைக்கோல் வண்ணம் வரை பெண் குருவிகளின் அலகைவிட வெளிர் வண்ணத்தில் காணப்படும். முதிர்ச்சியற்ற ஆண்கள் முதிர்ச்சியடைந்த ஆண்களின் அடையாளங்களின் வெளிர் பதிப்புகளைக் கொண்டிருக்கும். இவை புதிய இறகுகளில் தெளிவில்லாத வகையில் இருக்கலாம். அவைகளின் முதல் காலத்தில், இளம் பறவைகள் பொதுவாக மற்ற பெரிய பறவைகளிடமிருந்து வேறுபடுத்த முடியாதவையாக உள்ளன. முதல் வருடம் அவைகள் இன்னும் வெளிர்ந்தே இருக்கும் போதும் அவை இவ்வாறாக உள்ளன.


குரல்


பெரும்பாலான குருவிகளின் குரல் அவற்றின் குறுகிய மற்றும் இடைவிடாத பாடும் அழைப்பின் மாறுபாடுகள் ஆகும். இது சிர்ரப், ட்ஸ்சில்ப், அல்லது பிலிப் என எழுத்துவடிவமாக்கப்படுகிறது. இந்த குறிப்பு பறவைகள் மொய்க்கும் அல்லது ஓய்வெடுக்கும் போது ஒரு தொடர்பு அழைப்பாக, அல்லது ஆண்கள் கூட்டின் உரிமையைப் பிரகடனப்படுத்தும்போது செய்யப்படுகிறது. காலத்தில், ஆண் இந்த அழைப்பை மீண்டும் மீண்டும் முக்கியத்துவம் மற்றும் வேகத்துடன் தாளமின்றிக் கொடுக்கிறது. இது ஒரு பாடல் அல்லது பாடலைப் போன்ற அழைப்பு என்று வர்ணிக்கப்படுகிறது. இளம் பறவைகளும் ஒரு உண்மையான பாடலைக் கொடுக்கின்றன, குறிப்பாக கூண்டில் வளர்க்கப்படும்போது. இது ஐரோப்பிய பச்சை ஃபின்ச் பறவையின் ஒலியைப் போலவே இருக்கும்.


ஆக்ரோஷமான ஆண்கள் அவற்றின் அழைப்பின் ட்ரில் பதிப்பைக் கொடுக்கின்றன. அதுபி”சுர்-சுர்-ர்-ர்-இட்-இட்-இட்-இட்” என எழுத்துவடிவமாக்கப்படுகிறது. இந்த அழைப்பு பெண் குருவிகளாலும் இளம் குருவிகளுக்கு உணவளிக்கும்போது அல்லது முட்டைகளை அடைக்காக்கும்போது ஆண்கள் மேல் ஆதிக்கம் காட்டப் பயன்படுத்தப்படுகிறது. சிட்டுக்குருவிகள் ஒரு நாசி எச்சரிக்கை அழைப்பைக் கொடுக்கின்றன. இதன் அடிப்படைச் சத்தம் குவேர் மற்றும் கிரீச்சிடுகின்ற ச்ரீ அழைப்பு என எழுத்துவடிவமாக்கப்படுகிறது. மற்றொரு குரல் “சமாதான அழைப்பு” எனப்படுகிறது. இது ஒரு மெல்லிய குயீ என எழுத்துவடிவமாக்கப்படுகிறது. ஓர் இணைப் பறவைகளிடையே ஆக்ரோஷத்தைத் தடுக்க இது உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த அனைத்துக் குரல்களுமே இவைகளுக்கு மட்டுமே உரித்தானவை அல்ல. இவை மற்ற இனச் சிட்டுக்குருவிகளாலும் சிறிய வேறுபாடுகளுடன் எழுப்பப்படுகின்றன.


வேறுபாடு


சிட்டுக்குருவியின் 12 துணையினங்களில் சில மாறுபாடுகள் காணப்படுகின்றன. இவை இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை கிழக்கத்திய ‘’பே. டொ. இன்டிகஸ்’’ (P. d. indicus) குழு, மற்றும் பாலியே ஆர்க்டிக் ‘’பே. டொ. டொமஸ்டிகஸ்’’ (P. d. domesticus) குழு. ‘’பே. டொ. டொமஸ்டிகஸ்’’ (P. d. domesticus) குழுப் பறவைகள் சாம்பல் கன்னங்களைப் பெற்றுள்ளன. அதேநேரத்தில் ‘’பே. டொ. இன்டிகஸ்’’ (P. d. indicus) குழுப் பறவைகள் வெள்ளைக் கன்னங்களையும், உச்சந்தலையில் பிரகாசமான வண்ணத்தையும், சிறிய அலகையும் மற்றும் நீளமான கருப்பு பிப்பையும் பெற்றுள்ளன. துணையினமான ‘’பே. டொ. டிங்கிடனஸ்’’ (P. d. tingitanus) சிறிதளவே குறிப்பிடப்பட்ட துணையினங்களில் இருந்து வேறுபடுகிறது. இவ்வின ஆண் குருவியின் கால இறகு வேறுபடுகிறது. அதன் தலை கருப்பாகவும், கீழ் பகுதிகள் வெளிரியும் காணப்படும். பே. டொ. பாலியிரோயிபெரிக்கஸ் இனக் குருவி குறிப்பிடப்பட்ட துணையினத்தில் இருந்து சற்றே வெளிரிக் காணப்படும். ஆனால் ‘’பே. டொ. பிபிலிகஸ்’’ (P. d. bibilicus) இனத்தைவிட அடர் வண்ணத்துடன் காணப்படும். ‘’பே. டொ. பிபிலிகஸ்’’ (P. d. bibilicus) இனக் குருவிகள் பெரும்பாலான துணையினங்களைவிட வெளிரிக் காணப்படும். ஆனால் ‘’பே. டொ. டொமஸ்டிகஸ்’’ (P. d. domesticus) குழுப் பறவைகளின் சாம்பல் வண்ணக் கன்னங்களைக் கொண்டிருக்கும். இதைப்போலவே காணப்படும் ‘’பே. டொ. பெர்சிகஸ்’’ (P. d. persicus) வெளிரிச் சிறியதாகக் காணப்படும். இதுவும் ‘’பே. டொ. நிலோடிகஸ்’’ (P. d. niloticus) இனத் துணையினங்களும் ஒன்று போலவே காணப்படும். ஆனால் ‘’பே. டொ. நிலோடிகஸ்’’ (P. d. niloticus( சிறியதாக இருக்கும். ‘’பே. டொ. இன்டிகஸ்’’ (P. d. indicus) குழுத் துணையினங்கள் குறைந்த அளவே பரவியுள்ளன. இக்குழுவின் ‘’பே. டொ. ஹைர்கனஸ்’’ (P. d. hyrcanus) பறவைகள் ‘’பே. டொ. இன்டிகஸை’’ (P. d. indicus) விடப் பெரியதாகவும், ‘’பே. டொ. ஹுஃபுஃபே’’யைவிட (P. d. hufufae) பறவைகள் வெளிரியும், ‘’பே. டொ. பாக்ட்ரியானஸ்’’ (P. d. bactrianus) பறவைகள் பெரியதாகவும் மற்றும் வெளிரியும், மற்றும் ‘’பே. டொ. பர்கினி’’ (P. d. parkini) பெரியதாகவும் மற்றும் அடர் வண்ணத்துடன் மற்ற எந்த துணையினத்தையும் விட மார்பில் அதிகக் கருப்புடன் காணப்படும்.


அடையாளப்படுத்துதல்


சிட்டுக்குருவி மற்ற பல விதை-உண்ணும் பறவைகளுடன் குழப்பிக் கொள்ளப்படலாம், குறிப்பாக ‘’பேஸ்ஸர்’’ (Passer) பேரினத்தில் உள்ள இதன் உறவினர்களுடன். இந்த உறவினர்களில் பல சிறியவையாக உள்ளன. அவற்றின் தோற்றம் சுத்தமாகவோ அல்லது சாக்கடல் சிட்டுக்குருவி போன்று அழகாகவோ இருக்கிறது. இந்த இனத்தைச் சேர்ந்த மந்தமான வண்ணப் பெண் மற்ற இனப்பெண்களில் இருந்து அதிக நேரங்களில் வேறுபடுவதில்லை, மற்றும் இது எசுப்பானிய மற்றும் இத்தாலியச் சிட்டுக்குருவிகளைப் போலவே இருக்கும். ஐரோவாசிய மரச் சிட்டுக்குருவி ஒரு சிவந்த பழுப்பு வண்ண உச்சந்தலை மற்றும் ஒவ்வொரு கன்னத்திலும் ஒரு கருப்பு இணைப்புடன் சிறியதாகவும் மென்மையாகவும் இருக்கும். ஆண் எசுப்பானிய மற்றும் இத்தாலிய சிட்டுக்குருவிகள் தங்கள் சிவந்த பழுப்பு வண்ண உச்சந்தலைகள் மூலம் வேறுபடுத்தப்படுகின்றன . சிந்து சிட்டுக்குருவி இதுப்போலவே ஆனால் சிறியதாக இருக்கும். ஆண் குருவியின் மார்பில் கருப்பு வண்ணம் சிறிது குறைவாக இருக்கும். பெண் குருவியின் புருவம் குறிப்பிடத்தகுந்தவாறு வெளிரி இருக்கும்.


வகைப்பாடு மற்றும் அமைப்புமுறை


பெயர்கள்


உயிரியல் வகைப்பாட்டின் நவீன அமைப்பில் ஒரு அறிவியல் பெயர் வழங்கப்பட்ட முதல் விலங்குகளில் சிட்டுக்குருவியும் ஒன்றாகும். கரோலஸ் லின்னேயஸால் 1758ம் ஆண்டு ‘’சிஸ்டமா நேச்சரே’’வின் 10வது பதிப்பில் இது பற்றி விளக்கப்பட்டுள்ளது. இது Fringilla domestica என்ற பெயருடன் ஸ்வீடனில் சேகரிக்கப்பட்ட வகை மாதிரியில் இருந்து விவரிக்கப்பட்டது. பின்னர், ஃபிரிங்கில்லா (Fringilla) என்ற பேரினப் பெயர் பொதுவான சாஃப்பிஞ்ச் மற்றும் அதன் உறவினர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக ஆகிவிட்டது. சிட்டுக்குருவியானது பொதுவாக பிரெஞ்சு விலங்கியலாளர் மதுரின் ஜாக்குவஸ் ப்ரிஸ்ஸனால் 1760ல் உருவாக்கப்பட்ட பேஸ்ஸர் (Passer) பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்படுகிறது.


பறவையின் அறிவியல் பெயர் மற்றும் அதன் வழக்கமான ஆங்கில பெயர் ஆகியவை ஒரே பொருளையே கொண்டுள்ளன. ஆங்கில வார்த்தையான “ஸ்பேரோ” போன்றே இலத்தீன் வார்த்தையான “பேஸ்ஸர்”, சிறிய செயலில் உள்ள பறவைகளைக் குறிக்கும் ஒரு சொல்லாகும் இது வேகத்தைக் குறிக்கும் ஒரு வேர்ச் சொல்லாகும். இலத்தீன் வார்த்தையான டொமஸ்டிகஸ் என்பதற்கு அதன் பொதுவான பெயர் மனிதர்களுடனான அதன் தொடர்பைக் குறிப்பதைப் போலவே “வீட்டிற்குச் சொந்தமானது” என்று பொருள்படுகிறது. சிட்டுக்குருவி பல மாற்று ஆங்கில பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது வட அமெரிக்காவில் பொதுவாக ஆங்கில சிட்டுக்குருவி என்று அழைக்கப்படுகிறது; இந்தியத் துணைக்கண்ட மற்றும் மத்திய ஆசியப் பறவைகள் இந்திய சிட்டுக்குருவி அல்லது இந்திய சிட்டுக்குருவி என அழைக்கப்படுகின்றன. பேச்சு வழக்கில் இவை ஸ்பேர், ஸ்பேரர், ஸ்பேட்ஜர், ஸ்பேட்ஜிக், மற்றும் பிலிப், என்ற பெயர்களால் முக்கியமாக தென் இங்கிலாந்திலும்; ஸ்பக் மற்றும் ஸ்பக்கி, என்ற பெயர்களால் முக்கியமாக வட இங்கிலாந்திலும்; ஸ்பர் மற்றும் ஸ்ப்ரிக், என்ற பெயர்களால் முக்கியமாக ஸ்காட்லாந்திலும்; மற்றும் ஸ்பட்சி அல்லது செர்மானிய ‘’ஸ்பாட்ஸ்’’ல் இருந்து எடுக்கப்பட்ட ஸ்பாட்சி, என்ற பெயர்களால் முக்கியமாக வட அமெரிக்காவிலும் அழைக்கப்படுகின்றன.


வகைப்பாடு


‘’பேஸ்ஸர்’’ பேரினத்தில் சுமார் 25 உயிரினங்கள் வகைப்பாட்டைப் பொறுத்து உள்ளன. உலகின் பறவைகள் கையேட்டின் படி 26 உயினங்கள் உள்ளன. பெரும்பாலான பேஸ்ஸர் இனங்கள் மந்தமான வண்ணப் பறவைகளாக உள்ளன. அவை குட்டையான, சதுர வால்கள் மற்றும் 11 மற்றும் 18 cm (4.3 மற்றும் 7.1 in) நீள கட்டையான, கூம்பு அலகுகளைப் பெற்றுள்ளன. மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ ஆய்வுகள் பிலெய்ஸ்டோசின் மற்றும் முந்தைய காலத்தில் இப்பேரினத்தில் இனமாதல் நிகழ்ந்ததாகக் பரிந்துரைக்கின்றன. மற்ற ஆதாரங்கள் 25,000 முதல் 15,000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாக தெரிவிக்கின்றன. ‘’பேஸ்ஸர்’’ பேரினத்தினுள், சிட்டுக்குருவி ‘’பாலியே ஆர்க்டிக் கருப்பு-பிப் சிட்டுக்குருவிகள்’’ குழுவின் ஒரு பகுதியாகும். இது மத்தியத் தரைக்கடல் ‘’வில்லோ சிட்டுக்குருவிகளின்’’ ஒரு நெருங்கிய உறவினர் ஆகும்.


சிட்டுக்குருவி மற்றும் அதன் மத்தியதரைக் கடல் உறவினர்களின் வகைப்பாடு மிகவும் சிக்கலானது ஆகும். “வில்லோ குருவியின்” பொதுவான வகை எசுப்பானிய குருவி ஆகும். இது பல வகைகளில் சிட்டுக்குருவியை ஒத்திருக்கிறது. இது சிட்டுக்குருவியை விட ஈரப்பதமான வாழ்விடங்களை விரும்புகிறது. இது பெரும்பாலும் காலனித்துவ மற்றும் நாடோடிப் பறவை ஆகும். பெரும்பாலான மத்தியதரைக் கடல் பகுதிகளில், சில அளவிலான கலப்பினத்துடன் ஒன்று அல்லது இரண்டு இனங்களுமே வாழ்கின்றன. வட ஆப்பிரிக்காவில், இரண்டு இனங்கள் பரவலாக கலப்பினமாகின்றன. தூய சிட்டுக்குருவிகளில் இருந்து தூய எசுப்பானிய சிட்டுக்குருவிகள் வரை மிகவும் வேறுபடும் கலப்புக் குருவிகளை உருவாக்குகின்றன.


இத்தாலி முழுவதும் வீட்டு மற்றும் எசுப்பானிய சிட்டுக்குருவிகளுக்கு இடைப்பட்ட வடிவத்தில் உள்ள ஒரு சிட்டுக்குருவி காணப்படுகிறது. இது இத்தாலிய சிட்டுக்குருவி என அழைக்கப்படுகிறது. இது இரு இனங்களுக்கு இடைப்பட்ட ஒரு கலப்பினம் போல் உள்ளது. மற்ற பண்புகளில் இது ஒரு இடைப்பட்ட இனமாக உள்ளது. இதன் குறிப்பிடத்தகுந்த நிலை மற்றும் தோற்றம் என்பது மிகுந்த விவாதத்திற்கு உட்படுத்தப்பட்ட ஒரு பொருள் ஆகும். ஆல்ப்ஸ் மலைப்பகுதிகளில் இத்தாலியச் சிட்டுக்குருவி சுமார் 20 km (12 mi) பரப்பளவை சிட்டுக்குருவியுடன் பகிர்ந்து கொள்கிறது, ஆனால் தெற்கில் தென் பாதி இத்தாலி மற்றும் சில மத்தியத்தரைக் கடல் தீவுகளில் இது வாழ்விடத்தை எசுப்பானிய சிட்டுக்குருவியுடன் பகிர்ந்து கொள்கிறது. மால்டா, கோசோ, க்ரீட், ரோட்ஸ் மற்றும் கர்பதோஸ் ஆகிய மத்தியத்தரைக் கடல் தீவுகளில் இந்தப் பறவைகளின் நிலை தெரியவில்லை.


துணையினங்கள்


ஒரு பெரிய எண்ணிக்கையிலான துணையினங்கள் பெயரிடப்பட்டுள்ளன. அதில் 12 இனங்கள் உலகின் பறவைகளின் கையேட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த துணையினங்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பாலியே ஆர்க்டிக் ‘’பே. டொ. டொமஸ்டிகஸ்’’ குழு மற்றும் கிழக்கத்திய ‘’பே. டொ. இன்டிகஸ்’’ குழு. பே. டொ. பிப்லிகஸ் உட்பட பல மத்திய கிழக்கு துணையினங்கள் மூன்றாவது, இடைப்பட்ட இனமாகச் சிலநேரங்களில் கருதப்படுகின்றன. துணையினமான பே. டொ. இன்டிகஸ் ஒரு தனி இனமாக வரையறுக்கப்பட்டது. இது 19ம் நூற்றாண்டில் ஒரு தனி இனமாக பல பறவை ஆராய்ச்சியாளர்களால் வரையறுக்கப்பட்டது.


‘’பே. டொ. இன்டிகஸ்’’ குழுவில் உள்ள துணையினமான ‘’பே. டொ. பாக்ட்ரியானஸின்’’ இடம்பெயர்ந்து செல்லும் பறவைகள் தங்கள் வாழ்விடத்தை ‘’பே. டொ. டொமஸ்டிகஸ்’’ பறவைகளுடன் கலக்காமல் 1970களில் பகிர்ந்து கொண்டதாகப் பதியப்பட்டுள்ளது. இதன் காரணமாக அறிவியலாளர்கள் எட்வர்ட் ஐ. கவ்ரிலோவ் மற்றும் எம். என். கோரேலோவ் ஆகியோர் ‘’பே. டொ. இன்டிகஸை’’ தனியினமாகப் பிரிக்கப் பரிந்துரைத்தனர். இருப்பினும், பே. டொ. இன்டிகஸ்-குழு மற்றும் பே. டொ. டொமஸ்டிகஸ்-குழுப் பறவைகள் ஈரானின் பெரும் பகுதியில் ஒன்றோடொன்று வாழ்விடத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. எனவே இந்தப் பிரிப்பு அரிதாகவே அங்கீகரிக்கப்படுகிறது.


வட அமெரிக்காவில், சிட்டுக்குருவிகள் ஐரோப்பாவில் உள்ளதை விட மிகவும் வேறுபடுத்திப் பார்க்கப்படுகின்றன. இந்த வேறுபாடு கணிக்கப்படும் முறைகளைப் பின்பற்றுகிறது. உயரமான அட்சரேகைகளில் உள்ள பறவைகள் பெரியதாகவும், வறண்ட பகுதிகளில் உள்ள பறவைகள் வெளிரியும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், பரிணாமத்தால் அல்லது சுற்றுச்சூழலால் இது எந்த அளவிற்கு ஏற்படுகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இதே போன்ற கணிப்புகள் செய்யப்பட்டுள்ளன. அறிமுகப்படுத்தப்பட்ட வீட்டுச் சிட்டுக் குருவிகள் குறிப்பாக வட அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் துணையினங்களாகப் பிரிக்கப்படும் நிலைக்கு தகுதியுடையதாக இருக்கலாம். அமெரிக்க பறவையியல் வல்லுநரான ஹாரி சர்ச் ஒபெர்ஹோல்சர் பே. டொ. பிலெக்டிகஸ் என்ற துணையினப் பெயரை கூட மேற்கு வட அமெரிக்காவின் வெளிரிய பறவைகளுக்கு வழங்கினார்.


 • பே. டொ. டொமஸ்டிகஸ், நியமிக்கப்பட்ட துணையினம், பெரும்பகுதி ஐரோப்பா முழுவதும், பெரும்பகுதி வட ஆசியாவில் இருந்து சகலின் மற்றும் கம்சட்கா வரை காணப்படுகிறது. இது மிகவும் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்ட துணையினம் ஆகும்.

 • பே. டொ. பலேயரோயிபெரிகஸ்’’, வான் ஜோர்டான்ஸ், 1923. இது மஜோர்காவில் இருந்து விவரிக்கப்பட்டுள்ளது. இது பலேயரிக் தீவுகள், தெற்கு பிரான்ஸ், பால்கன் மற்றும் அனடோலியா ஆகியவற்றில் காணப்படுகிறது.

 • பே. டொ. டிங்கிடனஸ் (விக்டர் லொக்கே, 1867). இது அல்ஜீரியாவில் இருந்து விவரிக்கப்பட்டுள்ளது. இது மக்ரேப், அஜ்டபியா, லிபியாவிலிருந்து அல்ஜீரியாவில் பெனி அப்பேஸ் வரையிலும் மொரோக்கோவின் அட்லாண்டிக் கடலோரம் வரையிலும் காணப்படுகிறது. இது எசுப்பானிய குருவியுடன் பரவலாக கலப்பினங்களை உருவாக்குகிறது. குறிப்பாக இதன் பரவலில் கிழக்குப் பகுதியில்.

 • பே. டொ. நிலோடிகஸ், நிகோல் மற்றும் போன்ஹோட், 1909. ஃபையும், எகிப்தில் இருந்து விவரிக்கப்பட்டுள்ளது. சூடானின் வடி ஹல்ஃபாவின் வடக்கில் நைல் நதியோரங்களில் இது காணப்படுகிறது. இது சினாயில் ‘’பிபிலிகஸுடனும்’’, வடி ஹல்ஃபாவைச் சுற்றிய குறுகிய பகுதியில் ‘’ருஃபிடோர்சலிஸுடனும்’’ தன் வாழ்விடத்தைப் பகிர்ந்து கொள்கிறது. இது சோமாலிலாந்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 • பே. டொ. பெர்சிகஸ், நிகோலாய் சருட்னி மற்றும் குடசேவ், 1916. இது ஈரானில் உள்ள குசேஸ்தானிலுள்ள கருன் ஆற்றில் இருந்து விவரிக்கப்பட்டுள்ளது. இது அல்போர்ஸ் மலைகளுக்குத் தெற்கில் மேற்கு மற்றும் மத்திய ஈரானில் காணப்படுகிறது. இது ‘’இன்டிகஸ்’’ துணையினத்துடன் கிழக்கு ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தன் வாழ்விடத்தைப் பகிர்ந்து கொள்கிறது.

 • பே. டொ. பிப்லிகஸ், எர்ன்ஸ்ட் ஹார்டெர்ட், 1910. இது பாலஸ்தீனத்திலிருந்து விவரிக்கப்பட்டுள்ளது. இது சைப்ரஸ் மற்றும் தென்கிழக்கு துருக்கியிலிருந்து மேற்கில் சினாய் வரை மற்றும் கிழக்கில் அஜர்பைஜானிலிருந்து குவைத் வரை மத்திய கிழக்கில் காணப்படுகிறது.

 • பே. டொ. ஹைர்கனஸ், சருட்னி மற்றும் குடசேவ், 1916. இது ஈரானின், கோர்கனில் இருந்து விவரிக்கப்பட்டுள்ளது. இது கோர்கனில் இருந்து தென்கிழக்கு அஜர்பைஜான் வரை காஸ்பியன் கடலின் தென் கரையோரத்தில் காணப்படுகிறது. இது ‘’பே. டொ. பெர்சிகஸுடன்’’ அல்போர்ஸ் மலைகளிலும், ‘’பே. டொ. பிப்லிகஸுடன்’’ மேற்கிலும் தன் வாழ்விடத்தைப் பகிர்ந்து கொள்கிறது. துணையினங்களில் இதுவே மிகச்சிறிய வரம்பில் காணப்படுகிறது.

 • பே. டொ. பாக்ட்ரியானஸ், சருட்னி மற்றும் குடசேவ், 1916. இது தாஷ்கென்டில் இருந்து விவரிக்கப்பட்டுள்ளது. இது தெற்கு கசகஸ்தானில் இருந்து தியான் ஷான் மற்றும் வடக்கு ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் வரை காணப்படுகிறது. இது ‘’பே. டொ. பெர்சிகஸுடன்’’ பலுசிஸ்தானிலும், ‘’பே. டொ. இன்டிகஸுடன்’’ மத்திய ஆப்கானிஸ்தான் முழுவதும் தன் வாழ்விடத்தைப் பகிர்ந்து கொள்கிறது. பெரும்பாலான சிட்டுக்குருவி துணையினங்களைப் போலல்லாமல் இது கிட்டத்தட்ட முற்றிலும் இடம்பெயரக்கூடியதாகும். இது வடக்கு இந்திய துணைக்கண்டத்தின் சமவெளிகளில் குளிர் காலத்தைக் கழிக்கிறது. இது குடியேற்றங்களைவிட திறந்த பகுதிகளில் காணப்படுகிறது. இதன் பரவலில் குடியேற்றங்களை ஐரோவாசிய மர சிட்டுக்குருவி ஆக்கிரமித்துள்ளது. சூடானில் இருந்து ஒரு விதிவிலக்கான பதிவு உள்ளது.

 • பே. டொ. பர்கினி, ஹியூக் விஸ்ட்லெர், 1920. இது ஸ்ரீநகர், காஷ்மீரில் இருந்து விவரிக்கப்பட்டுள்ளது. பாமிர் மலைகளில் இருந்து தென்கிழக்கு நேபாளம் வரை மேற்கு இமயமலையில் இது காணப்படுகிறது. பே. டொ. பாக்ட்ரியானஸ் போலவே இதுவும் இடம்பெயரக்கூடியதாகும்.

 • பே. டொ. இன்டிகஸ், சர் வில்லியம் ஜார்டைன், 7வது பாரோனெட் மற்றும் ப்ரிடியூக்ஸ் ஜான் செல்பை, 1831. இது பெங்களூரில் இருந்து விவரிக்கப்பட்டுள்ளது. இது இமயமலையின் தெற்கில் இந்தியத் துணைக்கண்டத்தில், இலங்கையில், மேற்கு தென்கிழக்கு ஆசியா, கிழக்கு ஈரான், தென்மேற்கு அரேபியா மற்றும் தெற்கு இஸ்ரேலில் காணப்படுகிறது.

 • பே. டொ. ஹுஃபுஃபயே, கிளவுட் புச்சானன் டிசேஹர்ஸ்ட் மற்றும் தாமஸ் ஃபிரடெரிக் சீஸ்மென், 1924. இது சவுதி அரேபியாவில் ஹோஃபுஃபிலிருந்து விவரிக்கப்படுகிறது. இது வடகிழக்கு அரேபியாவில் காணப்படுகிறது.

 • பே. டொ. ருஃபிடோர்சலிஸ், சி. எல். ப்ரெஹ்ம், 1855. இது சூடானின் கர்டூம் பகுதியில் இருந்து விவரிக்கப்பட்டுள்ளது. இது தெற்கு வடி ஹல்ஃபா முதல் தெற்கு சூடானின் வட பகுதியில் உள்ள ரென்க், வரையிலும் மற்றும் கிழக்கு சூடான், வட எத்தியோப்பியா முதல் எரிட்ரியாவில் செங்கடல் கடற்கரை வரையிலும் காணப்படுகிறது. இது கொமோரோஸில் உள்ள மோஹேலியிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 • பரவல் மற்றும் வாழ்விடம்


  இது மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து உருவானது. வேளாண்மையுடன் சேர்ந்து, ஐரோவாசியா மற்றும் வட ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளுக்கும் பரவியது. 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து, இது உலகின் பெரும்பாலான பகுதிகளை அடைந்தது. முக்கியமாக வேண்டுமென்றே அறிமுகப்படுத்தப்படுவதால், இயற்கை மற்றும் கப்பல் பரவல் மூலம் பரவுகிறது. இதன் அறிமுகப்படுத்தப்பட்ட வரம்பு வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, தெற்கு தென் அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மேற்கு ஆப்பிரிக்காவின் பகுதி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் உலகெங்கிலும் உள்ள தீவுகளை உள்ளடக்கியுள்ளது. இது 1850 ஆம் ஆண்டுகளில் இருந்து வடக்கு ஐரோவாசியாவில் அதன் எல்லைகளை பெரிதும் விரிவுபடுத்தியுள்ளது. 1990களின் ஐஸ்லாந்து மற்றும் ரிஷிரி தீவு, ஜப்பான் ஆகியவற்றில் இவற்றின் காலனித்துவங்கள் தொடர்ந்து இவை அவ்வாறு செய்வதை காட்டுகிறது. இதன் பரவலின் அளவு இதனை இந்த கிரகத்திலேயே மிகவும் பரவலாகக் காணப்படும் காட்டுப் பறவையாக்குகிறது.


  அறிமுகங்கள்


  அறிமுகம் செய்யப்பட்ட உலகின் பெரும்பாலான பகுதிகளில் இது மிகவும் வெற்றிகரமாகிவிட்டது. மனிதர்களுடன் வாழ ஆரம்பத்திலேயே தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மை மற்றும் ஒரு பரந்த அளவிலான நிலைமைகளுக்கு தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மை ஆகியவற்றின் காரணமாக இது சாத்தியமாகியிருக்கிறது. ஐரோவாசிய மரச் சிட்டுக்குருவியுடன் ஒப்பிடும்போது இதன் வலுவான நோயெதிர்ப்பு சக்தி உட்பட மற்ற காரணிகள் ஆகியவற்றையும் காரணமாகக் கூறலாம். அறிமுகம் செய்யப்படும் இடங்களில் இதனால் விரைவாக அதன் பரவல் வரம்பை நீட்டிக்க முடியும். சில நேரங்களில் ஆண்டுக்கு 230 km (140 mi) அளவுக்கு மேல். உலகின் பல பகுதிகளில், இது ஒரு பூச்சி (pest) என வகைப்படுத்தப்பட்டுள்ளது, மற்றும் அவ்விடத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பறவைகளுக்கு அச்சுறுத்தலை காட்டுகிறது. கிரீன்லாந்து மற்றும் கேப் வெர்டே போன்ற ஒரு சில அறிமுகப்படுத்தப்பட்ட இடங்களில் இவை இறந்துவிட்டன அல்லது குறைந்த அளவே வெற்றியடைந்துள்ளன.


  இங்கிலாந்தில் இருந்து இப்பறவைகள் நியூயார்க் நகரத்தில் 1852 ஆம் ஆண்டில் லிண்டென் அந்துப்பூச்சியின் அழிவுகுணங்களைக் கட்டுப்படுத்த வெளியிடப்பட்டன, இவ்வாறே வட அமெரிக்காவிற்கு இவற்றின் பல வெற்றிகரமான அறிமுகங்களில் முதல் அறிமுகம் ஏற்பட்டது. இக்குருவி இப்போது வடமேற்கு பிரதேசங்களில் இருந்து தெற்கு பனாமா வரை காணப்படுகிறது, இது வட அமெரிக்காவில் மிகுதியாகக் காணப்படும் பறவைகளில் ஒன்றாகும். இக்குருவி ஆஸ்திரேலியாவில் முதலில் மெல்போர்னில் 1863 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது கண்டத்தின் கிழக்கு பகுதி முழுவதும் பொதுவானதாக வடக்கில் கேப் யார்க் வரை காணப்படுகிறது. ஆனால் மேற்கு ஆஸ்திரேலியாவில் தன்னை நிறுவுவதில் இருந்து தடுக்கப்பட்டுள்ளது. அங்கு மாநிலத்தில் காணப்படும் ஒவ்வொரு சிட்டுக்குருவியும் கொல்லப்படுகிறது. 1859 இல் நியூசிலாந்தில் இவை அறிமுகப்படுத்தப்பட்டன. அங்கிருந்து இது ஹவாய் உட்பட பல பசிபிக் தீவுகளை அடைந்தது.


  தென் ஆப்பிரிக்காவில், ஐரோப்பிய (‘’பே. டொ. டொமஸ்டிகஸ்’’) மற்றும் இந்திய (‘’பே. டொ. இன்டிகஸ்’’) துணையினப் பறவைகள் 1900 ஆம் ஆண்டுவாக்கில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஐரோப்பியப் பறவைகளை மூதாதையராகக் கொண்ட பறவைகள் ஒரு சில நகரங்களுக்குள் அடங்கிவிட்டன. அதேநேரத்தில் இந்தியப் பறவைகள் வேகமாக பரவின. அவை 1980களில் தான்சானியாவை அடைந்தன. இந்த வெற்றியின் அதேநேரத்தில் கேப் குருவி போன்ற தென் ஆப்பிரிக்க உறவினர் பறவைகளும் கூட நகரங்களில் காணப்படுகின்றன. இதனுடன் வெற்றிகரமாகப் போட்டியிடுகின்றன. தென் அமெரிக்காவில், இது 1870 ஆம் ஆண்டில் பியூனஸ் அயர்ஸ் அருகே முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. கண்டத்தின் பெரும்பாலான தெற்கு பகுதிகளில் விரைவிலேயே பொதுவானதாக மாறியது. இது இப்போது தியேரா டெல் ஃபியூகோவில் இருந்து அமேசான் பேசின் எல்லைப்புறங்கள் வரை கிட்டத்தட்டத் தொடர்ச்சியாகக் காணப்படுகிறது. இது வடக்கில் கரையோர வெனிசுலா வரை தனிமைப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலும் காணப்படுகிறது.


  வாழ்விடம்


  சிட்டுக்குருவி மனித வாழ்விடத்துடனும், சாகுபடியுடனும் நெருக்கமாக தொடர்புடையது. ஒரு சிலர் கூறுவதைப் போல் இது எல்லா இடங்களிலும் மனிதர்களுடன் நெருங்கி வாழ்வது கிடையாது. மத்திய ஆசிய சிட்டுக்குருவிகள் பொதுவாக மனிதர்களிடம் இருந்து விலகி திறந்த வெளிகளில் வாழ்கிறது. வேறு இடங்களில் பறவைகள் சில நேரங்களில் மனிதர்களிடமிருந்து விலகி இருக்கின்றன. சிட்டுக்குருவி இல்லாத நிலப்பரப்பு வாழ்விடங்கள் அடர்த்தியான காடு மற்றும் தூந்திரப் பகுதிகள் மட்டுமே ஆகும். இது மனிதர்களைச் சுற்றி வாழ நன்கு கற்றுக்கொண்டுள்ளது. இது அடிக்கடி கட்டடங்களின் உட்பகுதியிலும் வாழ்கிறது. குறிப்பாக தொழிற்சாலைகள், கிடங்குகள் மற்றும் மிருகக்காட்சி சாலைகள் ஆகிய இடங்களில். இது பூமிக்குக் கீழே ஒரு நிலக்கரி சுரங்கத்தில் 640 m (2,100 ft) ஆழத்தில் வாழ்ந்ததாகவும் மற்றும் இரவு நேரத்தில் எம்பயர் ஸ்டேட் பில்டிங்கின் கவனிப்பு டெக் மீது உணவு உண்டதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது நகர்ப்புற மையங்களில் மிகப்பெரிய அடர்த்தியில் வாழ்கிறது. ஆனால் இதன் பெருக்க வெற்றி புறநகர்ப்பகுதிகளில் அதிகமாக உள்ளது. ஏனெனில் அங்கேதான் பூச்சிகள் அதிகமாக உள்ளன . பெரிய அளவில், இது மத்தியமேற்கு அமெரிக்கா போன்ற கோதுமை வளரும் பகுதிகளில் மிக அதிகமாக உள்ளது.


  இது பல்வேறு காலநிலைகளை பொறுத்துக்கொள்கிறது. ஆனால் உலர் நிலைகளை விரும்புகிறது. குறிப்பாக ஈரமான வெப்பமண்டல காலநிலைகளில். இது உலர்ந்த பகுதிகளில் வாழ உயர் உப்பு சகிப்புத்தன்மை உட்பட பல வகைகளில் தகவமைந்துள்ளது. தண்ணீர் குடிக்காமல் பெர்ரி பழங்களை விழுங்குவதன் மட்டும் மூலம் உயிர்வாழும் திறன் பெற்றுள்ளது. கிழக்கு ஆசியாவின் பெரும்பாலான பகுதிகளில், சிட்டுக்குருவி முற்றிலும் இல்லாமல் உள்ளது. அதற்குப் பதிலாக ஐரோவாசிய மரச் சிட்டுக்குருவி அங்கு காணப்படுகிறது. எங்கே இந்த இரண்டு இனங்கள் ஒன்றுடன் ஒன்று வாழ்விடத்தைப் பகிர்ந்து கொள்கின்றனவோ, ஐரோவாசிய மரச் சிட்டுக்குருவிக்குப் பதிலாக சிட்டுக்குருவி மிகவும் பொதுவானதாக உள்ளது. ஆனால் பறவையியலாளர் மவுட் டோரியா ஹாவிலாண்டின் இவற்றின் வாழ்விடப் பகிர்வை ‘’தோராயமாக, அல்லது ஏன், கணிக்கமுடியாதது’’ என்று கூடக் கூறுகிறார். சில குறைபாடுகள் இருந்த போதிலும் அதன் வரம்பில், சிட்டுக்குருவி மிகவும் பொதுவானதாக உள்ளது. ஆனால் மழைக்காடுகள் அல்லது மலைத்தொடர்கள் போன்ற குறுகலான வாழ்விடங்களில், இதன் பரவல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கலாம்.


  நடத்தை


  சமூக நடத்தை


  சிட்டுக்குருவி மிகவும் சமூக பறவை ஆகும். உண்ணும் போது அனைத்து பருவங்களிலும் இது கூடிவாழும். அடிக்கடி மற்ற வகை பறவைகளுடன் மந்தைகளை உருவாக்குகிறது. இது கூட்டமாக அடைகிறது. இதன் கூடுகள் பொதுவாக ஒன்றாக குழுவாக ஒன்றோடொன்று இணைந்த மரங்கள் அல்லது தாவரங்களில் கட்டப்படுகிறது. இது புழுதி அல்லது தண்ணீர் குளியல் போன்ற சமூக நடவடிக்கைகள் மற்றும் ‘’சமூக பாடுதலில்’’ ஈடுபடுகிறது. சமூக பாடலில், பறவைகள் புதர்களில் ஒன்றாகக் கூடிப் பாடுகின்றன. சிட்டுக்குருவி பெரும்பாலும் தரையிலேயே உண்கிறது. ஆனால் இது மரங்களிலும் மற்றும் புதர்களிலும் ஒன்றாகக் கூடுகிறது. பெண் சிட்டுக்குருவிகள் சிறிய அளவாக இருக்கும்போதிலும் உணவு உண்ணுமிடம் மற்றும் கூடுகள் ஆகிய இடங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன.


  தூக்கம் மற்றும் அடைதல்


  சிட்டுக்குருவிகள் ஸ்கேபுலர் இறகுகளுக்குக் கீழே அலகை வைத்துக் கொண்டு தூங்குகின்றன. பெரும்பாலான கூட்டப் பாடல்கள் மாலை வேளையில் பறவைகள் அடையும் முன்பும் பின்பும் மற்றும் காலையில் பறவைகள் கூட்டைவிட்டுப் புறப்படும் முன்னும் ஏற்படுகிறது. அடையும் இடம் தவிர மற்ற இடங்களுக்கு பறவைகள் இரவில் அடையும் முன்னர் கூட்டமாக விஜயம் செய்யலாம்.


  உடல் பராமரிப்பு


  புழுதி அல்லது தண்ணீர் குளியல் பொதுவானது மற்றும் அடிக்கடி கூட்டமாக இருக்கும்போது ஏற்படுகிறது. எறும்புகள் அல்லது பூச்சிகளை இறகு அல்லது தோலில் அப்பிக் கொள்ளுதல் அரிதாகவே நடக்கும். தலை அரிப்பு ஏற்படும் போது இறக்கையைத் தொங்கவிட்டவாறு இது காலால் சொரிந்து கொள்கிறது.


  உண்ணுதல்


  பெரிய குருவியானவுடன், சிட்டுக்குருவி பெரும்பாலும் தானியங்கள் மற்றும் களைகளின் விதைகளை உணவாக உண்ணுகிறது, ஆனால் இது சந்தர்ப்பவாதமானது மற்றும் தன்னை மாற்றியமைத்துக் கொள்ளக்கூடியது, மற்றும் அந்நேரத்தில் எந்த உணவு கிடைக்கின்றதோ அதை உண்ணக்கூடியது. நகரங்களில் இது பெரும்பாலும் குப்பைக் கொள்கலன்களில் அடிக்கடி உணவு தேடுகிறது. உணவகங்கள் மற்றும் மற்ற உணவு நிறுவனங்களின் வெளியில் உள்ள எஞ்சிய உணவு மற்றும் ரொட்டித்துணுக்குகளை கூட்டமாக உண்ணும். உணவு பெற பல்பொருள் அங்காடிகளுக்குள் நுழைய தானியங்கி கதவுகளைத் திறத்தல், ஹோட்டல் சுவர்கள் மீது ஒட்டிக்கொண்டு தங்கள் மேல்மாடம் மீதுள்ள விடுமுறையாளர்களைக் கவனித்தல் மற்றும் கொவ்ஹை மலர்களில் தேன் கொள்ளையிடுதல் போன்ற சிக்கலான பணிகளை இதனால் செய்ய முடியும். பல பறவைகள் போலவே, சிட்டுக்குருவிக்கு உணவில் உள்ள கடினமான பொருட்களை ஜீரணிக்க வயிற்றுக் கற்கள் தேவைப்படுகிறது. கற்கள் என்பவை கல், கொத்தனார் வேலை செய்யும் போது சிதறும் தானியம் போன்ற சிறு கற்கள், அல்லது முட்டைகள் அல்லது நத்தையுடைய ஓடுகள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்; பொதுவாக நீள்வட்ட மற்றும் கடினமான தானியங்கள் இவற்றின் விருப்பமான தேர்வுகளாக உள்ளன.


  மிதமான விவசாயப் பகுதிகளில் சிட்டுக்குருவி பற்றிய பல ஆய்வுகள் இதன் உணவில் விதைகளின் விகிதம் 90% எனக் கண்டுபிடித்துள்ளன. இது கிட்டத்தட்ட எல்லா விதைகளையும் சாப்பிடும். ஆனால் பலவிதமான விதைகள் ஒரே இடத்தில் கிடைக்கும் போது இது ஓட்ஸ் மற்றும் கோதுமையை விரும்புகிறது. விதைகளை விரும்புகிற போதிலும், நகர்ப்புறங்களில், சிட்டுக்குருவி பெரும்பாலும் மனிதர்களால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அளிக்கப்படும் உணவை உண்கிறது. சிட்டுக்குருவி விதைகளைத் தவிர மொட்டுகள், பெர்ரிக்கள், திராட்சை மற்றும் செர்ரிக்கள் போன்ற பழங்கள் ஆகிய சில தாவர பாகங்களையும் உண்கிறது. மிதமான பகுதிகளில், சிட்டுக்குருவிகளுக்கு மலர்களைக் குறிப்பாக மஞ்சள் வண்ண மலர்களை வசந்தகாலத்தில் கிழித்தெறியும் ஒரு அசாதாரண பழக்கம் உள்ளது.


  விலங்குகள் சிட்டுக்குருவியின் மற்றொரு முக்கிய உணவுப் பகுதியை உருவாக்குகின்றன. முக்கியமாக பூச்சிகள், அவற்றில் வண்டுகள், கம்பளிப்பூச்சிகள், டிப்டெரன் ஈக்கள், மற்றும் அபிட்கள் ஆகியவை. பல பூச்சியல்லாத கணுக்காலிகளும் உண்ணப்படுகின்றன. கிடைக்கும் போது மெல்லுடலிகள் மற்றும் ஓட்டுமீன்களும் உண்ணப்படுகின்றன. மண்புழுக்கள், கரட்டாண்கள் மற்றும் தவளைகள் போன்ற முதுகெலும்பிகள் கூட உண்ணப்படுகின்றன. இளம் சிட்டுக்குருவிகளுக்கு பெரும்பாலும் பூச்சிகளே பிறந்து 15 நாட்கள் வரை ஊட்டப்படுகின்றது. அவைகளுக்கு சிறிய அளவில் விதைகள், சிலந்திகள், மற்றும் கற்கள் ஆகியவற்றையும் கொடுக்கின்றன. பெரும்பாலான இடங்களில், வெட்டுக்கிளிகள் மற்றும் விட்டிகள் முதலியவையே இளம் குருவிகளுக்குக் கிடைக்கும் மிகுதியான உணவுகள் ஆகும். ஹெமிப்டெரா (உண்மையான பக்குகள்), எறும்புகள், இரம்ப ஈக்கள், மற்றும் வண்டுகள் ஆகியவையும் முக்கியமான உணவுகள் ஆகும். ஆனால் சிட்டுக்குருவிகள் தங்கள் இளங்குருவிகளுக்கு உணவளிக்க கிடைக்கும் எந்த உணவையும் பயன்படுத்திக் கொள்கின்றன. சிட்டுக்குருவிகள் அமெரிக்க இராபின் உட்பட மற்ற பறவைகளிடம் இருந்து திருடுவது பார்க்கப்பட்டிருக்கிறது.


  இடம்பெயருதல்


  சிட்டுக்குருவியின் பறத்தல் நேரானதாகவும் (அலைபோல் அல்லாமல்) மற்றும் சிறகடிக்கக் கூடியதாகவும் உள்ளது. இதன் சராசரி வேகம் 45.5 km/h (28.3 mph) மற்றும் நொடிக்கு சுமார் 15 சிறகடித்தல்கள் ஆகும். தரையில், இது பொதுவாக நடப்பதை விட தாவுகிறது. கொன்றுண்ணிகள் துரத்தி அழுத்தம் கொடுக்கும்போது இதனால் நீந்த முடியும். வளர்ப்புப் பறவைகள் குதித்து நீரின் கீழ் குறுகிய தூரத்திற்கு நீந்தியதற்கான பதிவுகளும் உள்ளன.


  சிதறல் மற்றும் இடம்பெயர்வு


  பெரும்பாலான குருவிகள் தங்கள் வாழ்நாளில் ஒரு சில கிலோமீட்டருக்கு மேல் நகர்வதில்லை. இருப்பினும், எல்லா இடங்களிலும் குறைந்த அளவு இடம்பெயர்வு ஏற்படுகிறது. சில இளம் பறவைகள் நீண்ட தூரம் குறிப்பாகக் கடற்கரையோரங்களில் இடம்பெயர்கின்றன. மலையில் வாழும் பறவைகள் குளிர்காலத்தில் உயரத்தில் இருந்து கீழே குறைந்த உயரத்திற்கு செல்கின்றன. பே. டொ. பாக்ட்ரியானஸ் மற்றும் பே. டொ. பர்கினி ஆகிய இரண்டு துணையினங்கள் முக்கியமாக வலசை போகக்கூடியவையாக உள்ளன. பெரும்பாலும் ஒரே இடத்தில் வாழ்ந்து எப்போதாவது வலசை போகும் மற்ற துணையினங்களைப் போல் அல்லாமல் இவை வலசை போவதற்கு முன் தம்மைத் தயார் செய்து கொள்ள தம் உடல் எடையைக் அதிகரித்துக் கொண்டு அதன் பின்னர் வலசை போகின்றன.


  பல்வேறு வகைக் கூடு கட்டும் தளங்களை இவை தேர்வுசெய்தாலும் பொதுவாகத் துவாரங்களே அதிகமாகத் தேர்வு செய்யப்படுகின்றன. கூடுகள் அதிகமாக அடிக்கடி தாழ்வாரங்களிலும் மற்றும் பிற வீட்டுப் பிளவுகளிலும் கட்டப்படுகின்றன. பாறைகள் மற்றும் கரையோரங்களில் உள்ள ஓட்டைகள் அல்லது மரத் துவாரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு குருவி சில நேரங்களில் மணல் கரைகள் அல்லது அழுகிய கிளைகளில் தனது சொந்த கூட்டை தோண்டும். ஆனால் தகைவிலான் குருவி போன்ற மற்ற பறவைகளின் கரைகள் மற்றும் பாறைகள், மற்றும் பழைய மர குழிக் கூடுகளையும் அடிக்கடி பயன்படுத்துகிறது. இது பொதுவாக கைவிடப்பட்ட கூடுகளைப் பயன்படுத்தும். சில நேரங்களில் இது செயலில் உள்ள கூடுகளையும் பற்றிக் கொள்கிறது. ஐரோப்பாவை விட வட அமெரிக்காவில் மரப் பொந்துகள் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன. இதனால் நீலப்பறவைகள் மற்றும் பிற வட அமெரிக்கக் குழிக்கூட்டுப் பறவைகளுடனான போட்டிக்குச் சிட்டுக்குருவிகள் தள்ளப்படுகின்றன. இது அவற்றின் எண்ணிக்கைக் குறைப்பில் பங்களிக்கிறது.


  குறிப்பாக வெப்பமான பகுதிகளில், சிட்டுக்குருவி திறந்த வெளிச்சத்தில், மரங்களின் கிளைகள் குறிப்பாக பசுமைமாறா மரங்கள் மற்றும் ஹாவ்தோர்ன் மரங்கள் அல்லது பெரிய நாரை அல்லது மேக்பை போன்ற பெரிய பறவைகளின் கூடுகளில் அதன் கூட்டைக் கட்டலாம். திறந்த வெளி கூடு தளங்களில், இளங்குருவிகளின் வெற்றி குறைவாக இருக்கும். ஏனெனில் அங்கு முட்டைகள் தாமதமாக இடப்படுகின்றன மற்றும் கூடு எளிதில் அழிக்கப்படும் அல்லது புயல்களால் பாதிக்கப்படும். குறைவான பொதுவான கூடு தளங்களுள் தெரு விளக்குகள் மற்றும் நியான் பலகைகள் அடங்கும். இவை அவற்றின் கதகதப்பிற்காகத் தேர்வு செய்யப்படுகின்றன. இவை பிற பாடும்பறவைகளின் பழைய மேலே திறந்தவாறு இருக்கும் குவிமாடம் போன்ற கூடுகளையும் தேர்ந்தெடுக்கின்றன.


  கூடு பொதுவாக குவிமாடம் போன்றுள்ளது. இது மூடப்பட்ட தளங்களில் கூரையிடாமல் இருக்கலாம். இதில் தண்டுகள் மற்றும் வேர்களால் ஆன ஒரு வெளிப்புற அடுக்கு உள்ளது. காய்ந்த புல் மற்றும் இலைகள், மற்றும் ஒரு வரிசையான இறகுகள், அதே போல் காகிதம் மற்றும் பிற மென்மையான பொருட்களான ஒரு நடு அடுக்கு உள்ளது. கூடுகள் பொதுவாக 20 × 30 செமீ (8 × 12 அங்குலம்) என்ற வெளிப்புற பரிமாணங்களைக் கொண்டுள்ளது. ஆனாலும் அவற்றின் அளவு மிகவும் மாறுபடுகிறது. பெண் கூடு கட்ட உதவுகிறது. ஆனால் ஆணை விட குறைவாக செயலில் ஈடுபடுகிறது. சில கூடு கட்டும் நிகழ்வு ஆண்டு முழுவதும் நடக்கிறது. குறிப்பாக இலையுதிர்காலத்தில் இறகுகளை உதிர்த்த பிறகு. குளிர்ச்சியுள்ள பகுதிகளில், சிட்டுக்குருவிகள் சிறப்பாக உருவாக்கப்பட்ட அடையும் கூடுகளை உருவாக்குகின்றன அல்லது குளிர்காலத்தில் வெப்பத்தை இழக்காதிருக்க தெரு விளக்குகளில் அடைகின்றன. சிட்டுக்குருவிகள் தங்களுக்கென பிரதேசங்களை பிரித்துக்கொண்டு சண்டையிடுவதில்லை ஆனால் அவை ஒரே பாலினத்தைச் சேர்ந்த ஊடுருவல் பறவைகளுக்கு எதிராக தீவிரமாக தங்கள் கூடுகள் பாதுகாக்கின்றன.


  சிட்டுக்குருவிகளின் கூடுகள் ஒரு பரந்த அளவிலான துடைத்தழிக்கும் பூச்சிகளை ஆதரிக்கின்றன. கூட்டுப் பூச்சிகளான நியோட்டியோபைலம் ப்ரவேஸ்டும், ப்ரோடோகல்லிபோரா அடி ஈக்கள், மற்றும் 1,400க்கும் மேற்பட்ட வண்டுகள் ஆகியவற்றை ஆதரிக்கின்றன.


  இவை பொதுவாக நான்கு அல்லது ஐந்து முட்டைகளை (ஒரு பிடியில்) இடுகின்றன. எனினும் 1 முதல் 10 முட்டைகள் வரையிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறைந்த பட்சம் இரண்டு பிடிகள் வழக்கமாக இடப்படுகின்றன மற்றும் ஏழு வருடங்கள் வரை வெப்ப மண்டலங்களில் முட்டைகள் இடப்படலாம் அல்லது நான்கு வருடங்கள் வரை மித வெப்ப மண்டல அட்சரேகைகளில் முட்டைகள் இடப்படலாம். குறைவான பிடிகளில் ஒரு வருடத்தில் முட்டைகள் இடப்படும் போது, குறிப்பாக உயர் அட்சரேகைகளில், பிடி ஒன்றுக்கு முட்டைகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஒரு வருடத்திற்கு ஒரே ஒரு பிடி முட்டைகள் மட்டும் இடும் மற்றும் வலசை செல்லும் மத்திய ஆசிய சிட்டுக்குருவிகள் ஒரு பிடியில் சராசரியாக 6.5 முட்டைகளை இடுகின்றன. பிடி அளவு சுற்றுச்சூழல் மற்றும் பருவ நிலைகளாலும் பாதிக்கப்படுகிறது.


  சில குறிப்பிடத்தகுந்த அடைகாக்கும் ஒட்டுண்ணி நிகழ்வுகளும் நடக்கின்றன மற்றும் ஒரு கூடுதலான அசாதாரணமான பெரிய எண்ணிக்கையிலான முட்டைகள் ஒரு கூட்டில் காணப்படும் நிகழ்வுகள், தங்கள் அண்டை கூடுகளில் பெண் குருவிகள் முட்டைகளை இடுவதால் நடக்கலாம். அத்தகைய வேற்று குருவி முட்டைகள் சில நேரங்களில் கண்டுபிடிக்கப்பட்டு, பெண்களால் அழிக்கப்படும். சிட்டுக்குருவி ஒட்டுண்ணிகளால் பாதிக்கப்படுகிறது, ஆனால் அரிதாக மட்டுமே. இது பொதுவாக ஒட்டுண்ணிகள் நுழைய முடியாத மிகவும் சிறிய அளவிலான ஓட்டைகளிலேயே கூடு கட்டுகிறது மற்றும் இளம் ஒட்டுண்ணிகளுக்கு இது தன் இளம் குருவிகளுக்குக் கொடுக்கும் உணவுகள் பொருத்தமற்றதாக உள்ளது. மாறாக, சிட்டுக்குருவி ஒருமுறை அமெரிக்க பாறை தகைவிலான் குருவியின் வளர்ப்பு ஓட்டுண்ணியாக இருந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


  முட்டை வெள்ளை, நீல வெள்ளை அல்லது பச்சை வெள்ளை வண்ணத்துடனும், பழுப்பு அல்லது சாம்பல் புள்ளிகளுடனும் காணப்படும். Subelliptical in shape, அவை 20 முதல் 22 mm (0.79 முதல் 0.87 in) நீளத்துடனும் மற்றும் 14 முதல் 16 mm (0.55 முதல் 0.63 in) அகலத்துடனும், 2.9 g (0.10 oz) சராசரி எடையுடனும், மற்றும் 9.18 cm2 (1.423 in2) சராசரி மேற்பரப்பு பகுதியுடனும் காணப்படும். வெப்பமண்டல துணையினக் குருவிகளின் முட்டை தனித்துவமாகச் சிறியதாக இருக்கும்.


  பெண் குருவி முட்டைகளை அடைகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண் உதவுகிறது, ஆனால் உண்மையில் முட்டைகளை மறைக்கிறதே தவிர அடைகாப்பதில்லை. இந்த காலத்தில் பெண் குருவி முட்டையை அடைகாப்பதில் இரவைக் கழிக்கிறது, அதேநேரத்தில் ஆண் கூடு அருகே நின்றுகொண்டிருக்கும். ஒரு குறுகிய 11-14 நாட்கள் நீடிக்கும் அடை காலத்திற்குப் பிறகு முட்டைகள் ஒரே நேரத்தில் பொறிக்கின்றன. விதிவிலக்காக 9 நாட்களிலும் அல்லது 17 நாட்களிலும் கூட முட்டைகள் பொறிக்கின்றன.


  இளம் சிட்டுக்குருவிகள் 11 முதல் 23 நாட்களுக்கு கூட்டில் இருக்கும். இயல்பாக 14 முதல் 16 நாட்களுக்கு கூட்டில் இருக்கும். இந்த நேரத்தில், அவை இரு பெற்றோர்களாலும் ஊட்டி வளர்க்கப்படுகின்றன. புதிதாக பொரிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள் போதுமான காப்பு இல்லாத காரணத்தால் மேலும் சில நாட்களுக்கு அல்லது குளிர்ந்த சூழ்நிலைகளில் நீண்ட நாட்களுக்கு அடைகாக்கப்படுகின்றன.


  இளங்குருவிகளுக்கு 4 நாட்களுக்குப் பிறகு கண்கள் திறந்திருக்கும் மற்றும் 8 நாட்களுக்குப் பிறகு இளங்குருவிகள் தங்கள் முதல் கீழ் இறகுகளைப் பெறுகின்றன. இரண்டு பெற்றோர்களும் இறந்து விட்டால் இளங்குருவிகள் சத்தம் எழுப்புகின்றன. இச்சத்தம் பெரும்பாலும் பதிலீட்டு பெற்றோர்களை ஈர்க்கும். அப்பெற்றோர்கள் இளங்குருவிகள் பெரியதாக வளரும் வரை அவற்றிற்கு உணவளிக்கும். கூட்டிலுள்ள அனைத்து இளங்குருவிகளும் ஒரு சில மணிநேரத்திற்குள் கூட்டைவிட்டு வெளிவருகின்றன. இந்த கட்டத்தில், அவைகள் பொதுவாகப் பறக்கக் கூடியவையாக உள்ளன. 1 அல்லது 2 நாட்களுக்கு பிறகு அவை தாங்களே தங்களுக்கு பகுதியளவிற்கு உணவளித்துக் கொள்கின்றன. 7 முதல் 10 நாட்களுக்குப் பிறகு அல்லது குறைந்தது 14 நாட்களிலாவது முற்றிலும் தாங்களே உணவு தேடிக் கொள்கின்றன.


  உயிர்வாழ்தல்


  வயது வந்த சிட்டுக்குருவிகளில் ஓர் ஆண்டு பிழைத்தல் விகிதம் 45-65% ஆகும். பெற்றோரின் கவனிப்பில் இருந்து விடுபட்ட பிறகு இளம் குருவிகளின் இறப்பு சதவிகிதம் அதிகமாக உள்ளது. அவை வளர வளர இது குறைகிறது. பிறப்பதில் 20–25% பறவைகளே பெற்றோர் ஆகும் வயதுவரை உயிரோடிருக்கின்றன. அதிக காலத்திற்கு உயிர் வாழ்ந்ததாக அறியப்பட்ட ஒரு காட்டு சிட்டுக்குருவி கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக வாழ்ந்தது; அதற்கு டென்மார்க்கில் வளையமிடப்பட்டது. அது 19 வருடங்கள் மற்றும் 9 மாதங்களில் இறந்தது. அதிக காலத்திற்கு உயிர் வாழ்ந்ததாக அறியப்பட்ட ஒரு கூண்டில் வளர்க்கப்பட்ட சிட்டுக்குருவி 23 ஆண்டுகளுக்கு உயிர் வாழ்ந்தது. இவற்றின் எண்ணிக்கையில் ஆண் பெண் விகிதாச்சாரத்தைக் கண்டறிவது நிச்சயமாற்றதாக உள்ளது. ஏனெனில் தரவு சேகரிப்பதில் சிக்கல்கள் இருக்கிறது. ஆனால் எல்லா வயதுப் பறவைகளிலும் ஆண்களே சிறிது அதிகமாகக் காணப்படுவது ஒரு வழக்கமானது தான்.


  கொல்லப்படுதல்


  சிட்டுக்குருவியின் பிரதான கொன்றுண்ணிகள் பூனைகள் மற்றும் கொன்றுண்ணிப் பறவைகள் ஆகும். ஆனால் காக்கைகள் மற்றும் அணில்கள் உட்பட இன்னும் பல விலங்குகள் இவற்றை உண்கின்றன. மனிதர்கள் கூட இவற்றை உண்கின்றனர். இது முற்காலத்தில் உலகின் பல பகுதிகளில் மக்களால் உண்ணப்பட்டது. இன்றும்கூட மத்தியத்தரைக் கடல் பகுதிகளில் உண்ணப்படுகிறது. இவற்றை பல கொன்றுண்ணிப் பறவைகள் உண்பது பதிவுகள் அதிகம் செய்யப்படும் இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பூனைகள் சிட்டுக்குருவி எண்ணிக்கையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருந்தாலும் அசிபிடர் இனப்பறவைகள் மற்றும் முக்கியமாக மெர்லின் பறவை இவற்றின் முக்கியமான கொன்றுண்ணிகள் ஆகும். சிட்டுக்குருவி கூட சாலையில் கொல்லப்படும் பொதுவான பலியாகும்; ஐரோப்பிய சாலைகள் மீது, இந்தப் பறவை அடிக்கடி இறந்து காணப்படுகிறது.


  ஒட்டுண்ணிகள் மற்றும் நோய்


  சிட்டுக்குருவி பெருமளவிலான ஒட்டுண்ணிகள் மற்றும் நோய்களுக்கு வாழ்விடம் தருகிறது. இதன் பெரும்பாலான விளைவுகள் தெரியவில்லை. பறவையியலாளர் டெட் ஆர். ஆண்டர்சன் ஆயிரக்கணக்கான விளைவுகளை பட்டியலிட்டுள்ளார். அவர் அந்தப் பட்டியல் முழுமையற்றது என்றும் குறிப்பிடுகிறார். சிட்டுக்குருவியில் சாதாரணமாகப் பதிவு செய்யப்பட்ட பாக்டீரியா நோய்க்கிருமிகள் பெரும்பாலும் மனிதர்களிடமும் பொதுவானவையாக உள்ளன. அவற்றுள் சால்மோனெல்லா மற்றும் எசரிசியா கோலி ஆகியவையும் அடங்கும். சால்மோனெல்லா சிட்டுக்குருவியில் பொதுவாகக் காணப்படுகிறது. சிட்டுக்குருவி நோயைப் பற்றிய ஒரு விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. இதில் ஆய்வு செய்யப்பட்ட சிட்டுக்குருவிகளில் 13% சிட்டுக்குருவிகள் இந்நோயைக் கொண்டிருந்தன. வசந்த மற்றும் குளிர்காலத்தில் ஏற்படும் ‘’சால்மோனெல்லா’’ தொற்றுநோய்கள் அதிக எண்ணிக்கையிலான சிட்டுக்குருவிகளைக் கொல்லக்கூடும். சிட்டுக்குருவி பறவை அம்மை மற்றும் பறவை மலேரியாவின் வாழ்விடமாக உள்ளது. இதில் பறவை மலேரியாவை இக்குருவிகள் ஹவாயைப் பூர்வீகமாகக் கொண்ட காட்டுப் பறவைகளுக்கும் பரப்பின. சிட்டுக்குருவியில் காணப்படும் பல நோய்கள் மனிதர்கள் மற்றும் வீட்டு விலங்குகளிடமும் காணப்படுகின்றன. இந்நோய்களுக்கு சிட்டுக்குருவி ஒரு தேக்க வாழ்விடமாகச் செயல்படுகிறது. பொதுவாக பூச்சிகள் மற்றும் பாலூட்டிகளை பாதிக்கின்ற, மேற்கு நைல் வைரஸ் போன்ற அர்போவைரஸ்கள், சிட்டுக்குருவி போன்ற பறவைகளில் செயலற்று செல்வதன் மூலம் மிதமான பகுதிகளில் குளிர்காலத்தில் உயிர்வாழ்கின்றன. ஒரு சில பதிவுகள் நோயானது சிட்டுக்குருவி கூட்டங்களை பூண்டோடு அழிப்பதாகக் குறிக்கிறது, குறிப்பாக ஸ்காட்லாந்துத் தீவுகளில், ஆனால் இது அரிதாகத் தோன்றுகிறது.


  சிட்டுக்குருவி வழக்கமாக வயது வந்த பறவைகளுக்கு சிறிய தீங்கு விளைவிக்கும் பல வெளிப்புற ஒட்டுண்ணிகள் மூலம் பாதிக்கப்படுகிறது. ஐரோப்பாவில், சிட்டுக்குருவிகளில் காணப்படும் மிகவும் பொதுவான சிலந்தி ப்ரோக்டோபைல்லோடெஸ், மிகவும் பொதுவான உண்ணிகள் அர்கஸ் ரெஃப்லெக்ஸஸ் மற்றும் இக்ஸோடெஸ் அர்போரிகோலா, மற்றும் மிகவும் பொதுவான ஈ செரடோபைல்லஸ் கல்லினே. டெர்மனைஸ்ஸஸ் போன்ற இரத்தம் குடிக்கும் சிலந்திகளும் சிட்டுக்குருவியில் காணப்படும் பொதுவான எக்டோ ஒட்டுண்ணி ஆகும். இந்த சிலந்திகளால் மனித குடியிருப்புகளுக்குள் புகுந்து மனிதர்களைக் கடிக்க முடியும். கமசோயிடோசிஸ் எனப்படும் ஒரு நிலைமையை ஏற்படுத்த முடியும். சிட்டுக்குருவியின் உடலில் பல பாகங்களைப் பற்றிக்கொண்டு பல மெல்லும் பேன்கள் வாழ்கின்றன. மெனகாந்தஸ் பேன் இதன் உடல் முழுவதும் காணப்படுகிறது. அவை இரத்தம் மற்றும் இறகுகளை உண்கின்றன. அதேநேரத்தில் ப்ருயீலியா பேன் இறகுகளை உண்கின்றது. பிலோப்டெரஸ் ஃப்ரிங்கில்லா பேன் தலையில் காணப்படுகிறது.


  உடலியல்


  இவை ஆய்வகத்தில் வலுவான சிர்காடிய தாள செயல்பாடுகளை (24 மணி நேர சுழற்சி) வெளிப்படுத்துகின்றன. இவை சிர்காடிய செயல்பாடு மற்றும் ஒளிக்கதிர் காலக்கோட்பாட்டின் (ஒரு நாள் நீளத்தில் பருவகால மாற்றங்களுக்கு ஒரு உயிரினத்தின் பதில். உதாரணமாக இதுவே உயிரினங்கள் தங்கள் இறகு வண்ணத்தை மாற்றத் தூண்டுகிறது.)அடிப்படையில் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்ட முதல் பறவை வகைகளில் ஒன்றாகும். இவற்றின் எளிதாகக் கிடைக்கும் தன்மை மற்றும் கூண்டுகளில் வாழக் கற்றுக்கொள்ளும் தன்மை ஆகியவையும் இதற்கு ஒரு பகுதி காரணம் ஆகும். ஆனால் “தங்கள் வழியைக் கண்டுபிடிக்கும்” தன்மை மற்றும் நிலையான இருளில் தாளத்துடன் இருக்கும் தன்மை ஆகியவையும் இதற்கு மற்றொரு பகுதி காரணம் ஆகும். இத்தகைய ஆய்வுகள் கூம்புச் சுரப்பி இதன் சிர்காடிய அமைப்பின் மைய பகுதியாக இருப்பதைக் கண்டறிந்துள்ளன: கூம்புச் சுரப்பியின் நீக்கம் சிர்காடிய தாள செயல்பாடுகளை நீக்குகிறது. கூம்புச் சுரப்பியை மற்றொரு குருவிக்கு மாற்றுவதால், அதைப் பெற்ற குருவிக்கு நன்கொடை பறவைகளின் தாள கட்டம் அளிக்கப்படுகிறது. ஹைபோதலாமஸின் சுப்ராசிஸ்மாடிக் கருக்களும் இவற்றின் சிர்காடிய அமைப்பின் ஒரு முக்கிய அங்கமாகக் காட்டப்பட்டுள்ளன. வெளிப்புற ஒளி-இருள் சுழற்சிக்கான சிர்காடிய கடிகாரத்தை ஒருங்கிணைப்பதில் ஈடுபடும் ஒளி வாங்கிகள் மூளையில் அமைந்துள்ளன. மண்டை ஓடு வழியே ஒளி நேரடியாக அவற்றை அடைவதன் மூலம் இதனைத் தூண்டலாம். கண்பார்வையற்ற குருவிகளும் சாதாரணமாக ஒளி-இருள் சுழற்சிக்கு ஒத்திசைக்க முடியும். ஆனால் இந்தியா மை குருவிகளின் மண்டை ஓட்டின் மேலுள்ள தோலின் கீழ் ஒரு திரையாக உட்செலுத்தப்பட்ட பின் அவற்றால் இந்த ஒத்திசைவைச் செய்ய முடிவதில்லை. இதன்மூலம் மண்டை ஓடு வழியே ஒளி நேரடியாக அவற்றை அடைவதன் மூலம் ஒளி வாங்கிகளைத் தூண்டலாம் என்பது இந்த ஆய்வுகள் மூலம் புலப்படுகிறது.


  இதேபோல், காண்பார்வையற்று இருக்கும்போது கூட, சிட்டுக்குருவிகள் ஒளிக்கதிர் காலத்திற்கு ஏற்ப செயல்படுகின்றன. உதாரணமாக காலங்களுக்கேற்ப இறகு வண்ணத்தை மாற்றிக் கொள்ளுதல் மற்றும் வலசை செல்லத் தயாராகுதல் ஆகியவை. தலையின் மேல் உள்ள இறகுகள் பிய்க்கப்பட்டவுடன் இது ஒளிக்கதிர் காலத்திற்கு ஏற்ப இன்னும் வலுவாக செயல்படுகின்றன. இந்தியா மை, தலையின் மேற்புறத்தில் உள்ள தோலின் கீழ் உட்செலுத்தப்படும் போது இச்செயல்பாடு இல்லாமல் போகிறது. இது நாளுக்கு ஏற்றவாறு ஒளிக்கதிர் காலப்பதிலில் ஈடுபடும் ஒளி வாங்கிகள் மூளையின் உள்ளே இருப்பதைக் காட்டுகிறது.


  சிட்டுக்குருவிகள் ஒளிசம்பந்தமற்ற மாற்றங்கள் (உதாரணமாக ஒளி மற்றும் இருள் தவிர மற்ற ஒரு வெளிப்புற சுழற்சிக்கு ஒத்திசைத்தல்) பற்றிய ஆய்வுகளுக்குக் கூட பயன்படுத்தப்பட்டுள்ளன: உதாரணமாக, நிலையான இருள் நிலைமையில் பறவைகள் சாதாரணமாக உள்ளார்ந்த, 24 மணிநேர, “சுதந்திரமாக இயங்கும்” செயல்பாடு தாளங்களை வெளிப்படுத்தும், இவை ஒவ்வொரு 24 மணி நேரத்திலும் இரண்டு மணிநேர ‘’சிர்ப்’’ பின்னணிகளுக்கு உட்பட்டிருந்தால் இவை பதிலாக 24 மணிநேர கால இடைவெளியைக் காட்டுகின்றன, அன்றாட இயக்க தொடக்கங்களை தினசரி பின்னணி தொடக்கங்களுடன் பொருத்துகிறது. நிலையான மங்கலான ஒளியில் இருக்கும் சிட்டுக்குருவிகள் கூட உணவு கிடப்பதன் அடிப்படையிலான தினசரி சுழற்சிக்கு மாற்றப்படலாம். இறுதியாக, நிலையான இருளில் இருக்கும் சிட்டுக்குருவிகள் ஒரு உயர்ந்த மற்றும் குறைந்த வெப்பநிலை சுழற்சிக்கு மாற்றப்படலாம். ஆனால் இரண்டு வெப்பநிலைகளுக்கு இடையிலான வேறுபாடு பெரியதாக இருந்தால் மட்டுமே (38 மற்றும் 6°C); சோதனையிடப்பட்ட சில குருவிகள், அவர்களின் செயல்பாட்டைச் சூடான கட்டத்திற்கும், மற்றவை குளிர் கட்டத்திற்கும் பொறுத்துகின்றன.


  மனிதர்களுடன் உறவுகள்


  சிட்டுக்குருவி மனிதர்களுடன் நெருக்கமாகத் தொடர்புடையது ஆகும். இவை சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன் இருந்து மனிதர்களுடன் தொடர்புடையதாக இருப்பதாக நம்பப்படுகிறது. துணையினம் ‘’பே. டொ. பாக்ட்ரியானஸ்’’ மனிதர்களுடன் குறைந்த தொடர்புடையது ஆகும். அது தற்காலச் சிட்டுக்குருவிகளின் மூதாதையர் அல்லாத குருவிகளுக்கு பரிணாமரீதியாக நெருக்கமாகக் கருதப்படுகிறது. பூச்சிகளை உண்டு சிட்டுக்குருவி மனிதர்களுக்கு நன்மை பயக்கிறது.


  தமிழ் இலக்கியங்களில்


  தொல்காப்பியத்தில் சிட்டுக்குருவியின் பெருமைகள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. பாரதியாரும் தன் கவிதைகளில் சிட்டுக்குருவியின் பெருமைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். புறநானூற்றுப் பாடலில் இவை ‘குரீஇ’ என்று குறிப்பிடப்பட்டுள்ளன. இச்சொல்லே பின்னர் மருவிக் குருவியானது. சங்க இலக்கியங்கள் ‘மனையுறைக் குருவி’ என்று சிட்டுக்குருவியயைக் குறிப்பிடுகின்றன. மனிதர்கள் வசிக்கும் வீடுகளில் பயமின்றி வாழ்ந்த காரணத்தால் இவை அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளன.


  தற்போதைய நிலை


  உலகின் பல பகுதிகளிலும் இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த வீழ்ச்சிகள் முதலில் வட அமெரிக்காவில் காணப்பட்டன. இதற்கு ஆரம்பத்தில் வீட்டு ஃபிஞ்ச் பறவைகளின் பரவல் காரணம் எனச் சொல்லப்பட்டது. ஆனால் மேற்கு ஐரோப்பாவில் இவற்றின் வீழ்ச்சி மிகவும் கடுமையானதாக இருந்தது. ஆஸ்திரேலியாவில் கூட இவற்றின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு இவை தற்போதுதான் அறிமுகப்படுத்தபட்டன.


  கிரேட் பிரிட்டனில், 1970 களின் பிற்பகுதியில் இவற்றின் எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டது. ஆனால் 68% பறவைகள் ஒட்டுமொத்தமாக அழிந்துவிட்டன. சில பகுதிகளில் 90% பறவைகள் அழிந்துவிட்டன. லண்டனில், சிட்டுக்குருவி மத்திய நகரத்திலிருந்து கிட்டத்தட்ட மறைந்துவிட்டது. நெதர்லாந்தில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை 1980 களில் இருந்து பாதியாகக் குறைந்துவிட்டது. இதனால் சிட்டுக்குருவி ஒரு ஆபத்தின் விளிம்பில் இருக்கும் இனமாகக் கூடக் கருதப்படுகிறது. உலகளாவிய சாதனையை அமைக்கும் முயற்சியில் ஒரு பகுதியாக ஒழுங்குபடுத்தப்பட்ட டோமினோகளைத் தட்டியபோது “டோமினோமஸ்” என்ற ஒரு பெண் சிட்டுக்குருவி கொல்லப்பட்டது. அதன்பின்னர் இந்த நிலை பலரது கவனத்திற்கு வந்தது.


  கைபேசிகளில் இருந்து வெளிவரும் மின்காந்தக் கதிர்வீச்சு உட்பட இவற்றின் வியத்தகு குறைவுக்கான பல்வேறு காரணங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. நகர்ப்புற கட்டட வடிவமைப்புகளில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படுகின்ற கூடு கட்டும் இடங்களின் பற்றாக்குறை ஒருவேளை ஒரு காரணியாக இருக்கலாம். சிட்டுக்குருவிகளுக்கு என சிறப்பு கூடு பெட்டிகளை பயன்படுத்துவதை பாதுகாப்பு நிறுவனங்கள் ஊக்கப்படுத்தியுள்ளன.


  சிட்டுக்குருவிக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் பற்றிய விழிப்புணர்வுக்காக ‘’உலக சிட்டுக்குருவி தினம்’’ உலகெங்கும் மார்ச் மாதம் 20ம் தேதி 2010 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில், பல ஆசிய நாடுகளில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்திருக்கிறது. இந்த சரிவு இந்தியாவில் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. இந்த பறவைகள் பாதுகாக்கப்படுவதற்கு, 2012 இல், சிட்டுக்குருவி தில்லியின் மாநில பறவை என அறிவிக்கப்பட்டது.


  கலாச்சாரப் பிணைப்புகள்


  உலகம் முழுவதும் பலருக்கு சிட்டுக்குருவி மிகவும் பிரபலமான காட்டு உயிரினம் ஆகும். சிட்டுக்குருவிகளை அறிமுகப்படுத்தியதன் காரணங்களில் ஒன்று, பல குடியேறிகளின் பூர்வீகமான ஐரோப்பிய நாட்டுப் பகுதியுடன் இவற்றின் தொடர்பு. பிற்காலங்களில் பொதுவாக சிட்டுக்குருவிகளாக விவரிக்கப்படுகின்ற பறவைகள் ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவில் உள்ள பண்டைய இலக்கியம் மற்றும் சமய நூல்களின் பல படைப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் குறிப்புகள் எப்போதுமே சிட்டுக்குருவிகளைக் குறிப்பிட்டுச் சொல்வதாகக் கூற முடியாது. இக்குறிப்புகள் சிறிய, விதை உண்ணும் பறவைகளைப் பற்றியதாகக்கூட இருந்திருக்கலாம். ஆனால் பின்னர் இந்த நூல்களால் ஈர்க்கப்பட்ட எழுத்தாளர்கள் பெரும்பாலும் சிட்டுக்குருவியை மனதில் வைத்து எழுதியிருக்கலாம். மத்தேயு நற்செய்தியில் கடவுளின் அக்கறைக்கு உதாரணமாக இயேசு “சிட்டுக் குருவிகளை” உவமானமாகப் பயன்படுத்துகிறார். அது ஷேக்ஸ்பியரின் பிற்காலக் குறிப்புகளான ஹேம்லட்டிலும் நற்செய்திப் பாடலான அவரது கண் சிட்டுக்குருவியின் மீது என்பதிலும் பிரதிபலித்தது.


  சிட்டுக்குருவி பண்டைய எகிப்தியக் கலைகளில் மிகவும் அரிதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஒரு எகிப்திய சித்திர எழுத்து இதனை அடிப்படையாகக் கொண்டுள்ளது. சிட்டுக்குருவி சித்திர எழுத்திற்கு ந்த ஒலிப்பு மதிப்பும் இல்லை. சிறிய, குறுகிய ஆகிய வார்த்தைகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மற்றொரு பார்வையின்படி சித்திர எழுத்தின் பொருள் “ஒரு நிறைவான மனிதர்” அல்லது “ஒரு வருடத்தின் புரட்சி”.


  வெளி இணைப்புகள்

  சிட்டுக்குருவி – விக்கிப்பீடியா

  House sparrow – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published.