குரோய்லர் (Kuroiler) என்பது இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஒரு உயர் கலப்பினக் கோழி இனமாகும். குரோய்லர் கோழிகள் வண்ண இறைச்சிச் சேவல் மற்றும்ரோட் தீவு சிகப்புக் கோழி ஆகியவற்றை கலப்பினம் செய்து, அல்லது வெள்ளை லிகோர்ன் சேவல் மற்றும் ரோட் தீவு சிவப்புக் கோழி ஆகியவற்றை கலப்பினம் செய்து உருவாக்கப்பட்ட கோழி இனமாகும்..
பண்புகள்
குரோய்லர் கோழிகள் முட்டை மற்றும் இறைச்சி ஆகிய இரட்டை நோக்கங்களுக்காக வளர்க்கப்படுகின்றன. இவை சமையலறை மற்றும் விவசாய கழிவுகளை உணவாக கொண்டு வாழக் கூடியன, இந்திய மரபார்ந்த நாட்டுக் கோழிகள் வருடத்திற்கு 40 முட்டைகளை இடும் நிலையில் இக்கோழிகள் வருடத்திற்கு ஏறக்குறைய 150 முட்டைகள்வரை இடுகின்றன. அதேபோல இந்த கோழி இறைச்சி அளவு மிகுந்து காணப்படுகிறது; இந்த வகை சேவல்களின் எடை தோராயமாக 3.5 கிலோ (7.7 பவுண்ட்) கொண்டவையாகவும், கோழிகள் 2.5 கிலோ (5.5 பவுண்ட்) எடைவரை இருக்கின்றன. இதே சமயம் இந்திய உள்நாட்டுப் பாரம்பரிய சேவல்கள் தோராயாக 1 கிலோ (2.2 பவுண்ட்) மற்றும் கோழிகள் 0.9 கிலோ (2.0 பவுண்ட்) என்றே இருக்கின்றன. குரோய்லர் கோழிகள் சில தனிப்பட்ட மரபணு அம்சங்கள் கொண்டவையாக உள்ளவையாகவும், நோய் எதிர்ப்பு தன்மை கொண்டவையாகவும் உள்ளன. இக்கோழிகள் மனிதனுக்குத் தேவையான புரத உணவாக மற்றும் கிராமப்புற குடும்பங்களுக்கு கணிசமான வருமானத்தை அளிக்கக்கூடியதாக உள்ளது இதன் குஞ்சுகளை வளர்க்க கிராமப்புறங்களில் விவசாயிகள் பெரியதாக எந்த செலவு செய்யவேண்டிய தேவையின்றி இயற்கைக் கழிவுகளை உண்டு வளரக்கூடியனவாக உள்ளன.
வரலாறு
இந்தக் கோழி இனம் 1990 களின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இனம் வினோத் கபூர் என்பவரின் கீக் பாம் பிரவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பெயர் கீக் மற்றும் பிராய்லர் ஆகியவற்றின் பெயர்களை இணைத்து உருவாக்கப்பட்டது. ஒரு மத்திய குஞ்சு பொரிப்பம் எழுப்பப்பட்டு, குரோய்லர் முட்டைகள் நாடு முழுவதும் உள்ள ஆயிரம் “தாய் அலகுகளில்” இட்டு குஞ்சுகளைப், பெற்ற பின்னர், தேவைப்படும் கிராமங்களுக்கு ஒரு நாள் வயதுக் குஞ்சுகளாக வழங்கப்படுகிறன.
குரோய்லர் கோழிகள் இந்தியாவின் கிராமப்புறங்களில் புகழ்வாய்ததாக உள்ளது. குறிப்பாக உத்திரப் பிரதேசம், ஜார்கண்ட், மேற்கு வங்கம், மிசோராம், சத்தீஸ்கர், மேகாலயா , உத்திரகண்டம் ஆகிய மாநிலங்களிலில் நிலமற்ற குறு விவசாயிகளால்- பெண்களால் பகுதி நேரமாகவோ அல்லது முழுநேரமாகவோ இக்கோழி வளர்ப்புத் தொழிலில் ஈடுபடுகின்றனர். குரோய்லர் கோழிகள் உள்நாட்டில் அடைந்த வெற்றியைத் தொடர்ந்து உகாண்டா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.