குருதியுண் குருவி

குருதியுண் குருவி (ஆங்கில மொழி: Vampire ground finch) கலாபகசுத் தீவுகளில் வாழும் ஒரு சிறிய குருவியினம். இவை ஓநாய்த் தீவு, தார்வின் தீவு ஆகிய தீவுகளில் மட்டுமே வாழும் அகவலயப் பறவையினம் , இப்பறவையின் தனித்தன்மையான உணவுப்பழக்கத்தால் இக்குருவிகள் இப்பெயரைப் பெற்றன. நீலக்கால் பூபி என்னும் கடற்பறவையின் குருதியை பருகுவதால் இக்குருவிகள் இப்பெயரைப் பெற்றன. இப்பறவையினத்தின் அறிவியற்பெயர் . சியோசிப்பீசா செப்புதென்திரியோனாலிசு (Geospiza septentrionalis). கலாபகசுத் தீவுகளில் மட்டுமே வாழும் சார்ப்பே அலகுக் குருவி ( இரிச்சர்து பவுதியர் சார்ப்பே (Richard Bowdler Sharpe) என்பார் கண்டுபிடித்த பறவை, Geospiza difficilis) இனத்தின் ஒரு சிற்றினம் இந்தக் குருதியுண் குருவியினம். மரபணு அடிப்படையிலும் உருவ அமைப்பிலும், குயிலுதல் (பாடுதல்) அடிப்படையிலும் இக்குருவியினம் வேறானது என்று அனைத்துலக பறவையியலாளர் ஒன்றியம் கருதுகின்றது..


உடலமைப்பு


குருதியுண் குருவிகள் உருவில் ஆண்பறவை (சேவல்) பெண்பறவை (பெட்டை) ஆகியவற்றுக்கிடையே பெரிய மாறுபாடு உள்ளவை. சேவல் பெருமாலும் கருப்பு நிறமும் பெட்டை சாம்பல் நிறத்தில் பழுப்பு நிறக் கோடுகளுடனும் காணப்படுகின்றன. ஓநாய்த் தீவில் உள்ள பறவைகள் ஏற்ற இறக்கத்துடனான பாடலும் தார்வின் தீவில் உள்ளவை அதிர்வொலி எழுப்புவனவாகவும் உள்ளன. இரண்டு தீவுகளிலும் சீழ்க்கை ஒலிபோன்றவையும் எழுப்புகின்றன.


சூழமைவியல்


மிகவும் வேறுபட்ட உணவுப்பழக்கம் கொண்டிருப்பதால் இப்பறவை புகழ்பெற்றது. பிறவகையான உணவு கிடைக்காதபொழுது இவை நாசுக்கா கடற்பறவை அல்லது நீலக்கால் பூபி என்னும் கடற்பறவையின் குருதியைக் குடிக்கின்றது. இந்த நீலக்கால் பூபியின் அருகே அமர்ந்து கூரிய அலகால் கொத்தி அரத்தம் வடியச்செய்து குடிக்கின்றது. வியப்பூட்டும்விதமாக இக்கடற்பறவைகள் எதிர்ப்பு நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை. கடற்பறவைகளைத் தூய்மைப்படுத்துவதாக இருந்து இப்படி மாறியதோ என்று கருதுகின்றார்கள். குருதியுண் குருவிகள் கடற்பறவைகளின் முட்டைகளையும் முட்டையிட்டவுடன் திருடுகின்றன. முட்டைகளை உருட்டி பாறைகளின் மீது விழச்செய்து உடையச்செய்து உண்ணுகின்றன. குவானோ மற்றும் பிற பறவைகள் விட்டுச்சென்ற மீன்களையும் உண்ணுகின்றன.


கலாப்பகசு முள் பேரிக்காய் மரத்தின் பூக்களில் உள்ள தேனை உறிஞ்சி உண்கின்றன, குறிப்பாக ஓநாய்த்தீவில். இப்படியான மிகவும் வேறுபட்ட உணவுப்பழக்கம் இருப்பதற்குக் காரணம், இந்தத் தீவுகளில் நன்னீர் கிடையாது. இப்பறவைகளின் அடிப்படை உணவு மீன்கள், விதைகள் கொட்டைகள் ஆகியவையாகும்.


காப்புநிலை


குருதியுண் குருவி குறுகிய நிலப்பரப்பில் மட்டுமே காணப்படுவதாலும் பிற உயிரினங்களின் வரவாலும் அழிதறுவாய் நிலையின் முதல்நிலையில் உள்ளதாகப் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் அறிவித்துள்ளது.


வெளி இணைப்புகள்

குருதியுண் குருவி – விக்கிப்பீடியா

Vampire ground finch – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.