ஓஊ பறவை

ஓஊ (ஆங்கிலத்தில் ʻōʻū ) (Psittirostra psittacea) என்பது ஹவாய் தீவுகளுக்கே உரிய தனிச் சிறப்பு மிக்க மிக அருகிவிட்ட பறவையினங்களில் ஒன்றாகும். இதனைப் பற்றி மிக அண்மைக் காலத்திய பதிவுகள் எதுவும் கிடைக்கப் பெறாமையால், இது ஒரு வேளை முற்றாக அற்றுப்போயிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.


இயல்பு


ஓஊ பறவை 18 செ.மீட்டர் (7.1 அங்குலம்) நீளமான, பெரிய, சதைப் பற்றுள்ள ஒரு பறவையாகும். இவற்றுள் ஆண் பறவைகள் வெளிர் மஞ்சள் நிறத் தலையையும் கடும் பச்சை நிற முதுகுப் பகுதியையும் இளம் பச்சை நிற வயிற்றுப் பகுதியையும் கொண்டிருக்கும். பெண் பறவைகள் ஆண் பறவைகளை விட பார்க்க சற்று நிறங் குறைந்தும் இளம் பச்சை நிறத் தலையும் கொண்டிருக்கும். ஓஊ பறவையின் கால்கள் ஊதா நிறத்திலும், இதன் சொண்டு (அலகு) சற்று நீண்டு முன் புறமாக வளைந்து காணப்படும்.


நடத்தை


இப்பறவைகளின் இனப்பெருக்க உயிரியல் சரியாக அறியப்படவில்லை. எனினும், இவற்றின் குஞ்சுகள் ஜூன் மாதத்தில் பொதுவாகத் தென்படுவதால் மார்ச்சு முதல் மே மாதம் வரையான காலப்பகுதியில் இவை இனப்பெருக்க நடத்தையில் ஈடுபடுவதாகக் கருதலாம். ஓஊ பறவையின் ஒலி தொடர்ச்சியாகக் கூடிக் குறைவதால் தனியான இசை கொண்ட இனிய பாடல் போன்று தோன்றும்.


ஓஊ பறவையின் தனித் தன்மையதான சொண்டு (அலகு), இப்பறவையினம் விரும்பி உட்கொள்ளும் ஈஈ (Freycinetia arborea) பழங்களை உண்பதற்குத் தகைவுள்ளதாக அமைந்துள்ளது. இப்பறவைகளின் இயலிடத்தில் இயல்பாகவே வாழ்வன மற்றும் பிற்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன என்ற வேறுபாடின்றி இவை ஈஈ பழங்களை விரும்பியுண்ணுகின்றன. அப்பழங்கள் காய்க்காத காலத்தில் மலைப்பாங்கான பகுதிகளில் வேறு உணவுகளைத் தேடிச் சென்றுவிடும். இவை பழங்களை மட்டிமன்றி பூச்சிகளையும் ஓகியாலெகுவா (Metrosideros polymorpha)என்ற தாவரத்தின் பூக்களையும் மொட்டுக்களையும் உணவாகக் கொள்ளும். இது பல்வேறு இடங்களிலும் காலத்துக்குக் காலம் கிடைக்கும் பழங்களைத் தேடி நெடுந் தொலைவு பறந்து செல்லும் நாடோடிப் பறவையினமாகும்.


நிலை


ஹவாய்த் தீவுகளின் ஆறு பெருந் தீவுகளில் முன்னர் பரவி வாழ்ந்த இப்பறவையினம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே எண்ணிக்கையில் குறைவடையத் தொடங்கியது. இப்பறவை 1989 ஆம் ஆண்டு கடைசியாக ஹவாய் பகுதியில் காணப்பட்டமை பதியப்பட்டுள்ளது. இப்பறவையினம் முற்றாகவே அற்றுப்போயிருக்கலாம் எனக் கருதப்பட்ட போதிலும் ஹவாயின் எரிமலைத் தீவான கீலோவெயா பகுதியில் இந்த இனம் காணப்பட்ட செய்தி அவ்வப்போது கிடைத்துக்கொண்டிருக்கிறது. அதன் காரணமாகவே, இப்பறவை முற்றாக அற்றுப்போனமை ஐயத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தப்படும் வரையில், மிக அருகிவிட்ட இனம் என வரையறுக்கப்பட்டுள்ளது. 1984 இல் மௌனாலோவா எரிமலை வெடித்ததன் காரணமாக வெளிப்பட்ட எரிகுழம்பு வையாக்கெயா பகுதியில் இப்பறவைகள் பெரும்பான்மையாகவும் தொல்லையின்றியும் வாழ்ந்த இடங்கள் அழிந்தன. அதன் காரணமாக ஓஊ பறவைகள் ஹவாய் அயனமண்டல மழைக்காடுகளைச் சேரந்த கௌஇ தீவின் அலக்கை காட்டு ஒதுக்கீட்டுக்குஇடம் பெயர்ந்தன. மிக அண்மைக் காலத்தில் ஓகியாலெகுவா தாவரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியில் இவற்றின் பரம்பல் காணப்படுகிறது.


ஹவாயின் தேன் பறவைகளில் ஓஊ வெகுவாக அலையும் பறவையொன்றாகும். இப்பறவை மிகச் சுறுசுறுப்பானதாக இல்லாமல் மெதுவாகவே செயற்படுவதாக இருப்பினும் நெடுந் தொலைவுகளை விடாமற் பறந்து கடக்கும் வல்லமையுடையதாகும். ஹவாயின் முக்கிய தீவுகள் எல்லாவற்றிலும் காணப்பட்ட இப்பறவையினம் ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவுக்கு இடைவிடாமல் பறந்து திரிந்து கொண்டிருந்தமையால் இதன் துணையினம் எதுவும் இருப்பதாக வகைப்படுத்தப்படவில்லை. ஹவாயின் தேன் பறவைகள் அனைத்தும், பறவை மலேரியா நோய்த் தாக்குதலுக்கு உட்பட்டுப் பெருங் கேடடையும் இயல்புடையன. இந்த ஓஊ பறவையினமும் எளிதில் நோய்த் தாக்குதலுக்கு உட்படும் தன்மை உடையது. அதனால் இப்பறவை நோயுறின் பெரும்பாலும் இறந்துவிடும். இவ்வினத்துக்கு வரும் ஏனைய அச்சுறுத்தல்களில் வாழிட இழப்பும், கொன்றுண்ணிகளின் அறிமுகப்படுத்தலும் குறிப்பிடத் தக்கன. இவற்றின் மிகக் குறைவான எண்ணிக்கையும் மிகக் குறுகிய புவியியற் பரம்பலும் இவ்வினத்தை மேலும் வலிமையற்றதாக்குகின்றன.


காப்பு


ஓஊ பறவை மிக அருகிவிட்ட இனமாக 1967 ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்டது. இவற்றைப் பாதுகாப்பது பற்றி, 1983 மற்றும் 1984 -இல் ஹவாய் காட்டுப் பறவைகள் மீட்புத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இத்திட்டங்களின் படி


 • சரியான நில முகாமைத்துவம்

 • அறிமுகப்படுத்தப்பட்ட தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பரவலைக் கட்டுப்படுத்தல்

 • காட்டுப் பறவைகளின் வாழிடங்களை அழிக்கத் தக்கதான, நில வளப்படுத்தல் திட்டங்களை நெருங்கிக் கண்காணித்தல்

 • விந்து வங்கித் திட்டம் என்பன பரிந்துரைக்கப்படுகின்றன.

 • ஓஊ பறவை கடைசியாகக் காணப்பட்ட ஹவாயின் பெரிய தீவில் உள்ள ஓலா பகுதி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பலவற்றால் வெகுவாகக் கண்காணிக்கப்படுகிறது.


  வெளி இணைப்புகள்

  ஓஊ – விக்கிப்பீடியா

  ʻŌʻū – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published.