ஈமு பறவை

ஈமியூ அல்லது ஈம்யூ (Emu) (தமிழக வழக்கு: ஈமு) ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய பறவையாகும். உயிர்வாழும் பறவையினங்களில் தீக்கோழிக்கு அடுத்ததாகப் பெரிய பறக்காத பறவை இதுவாகும். இது ஏறத்தாழ இரண்டு மீட்டர் உயரமும், சுமார் 45 கிலோகிராம் எடையும் கொண்ட பறவையாக வளரக் கூடியது. உடல் சாம்பல் நிறமானது. ஆஸ்திரேலியாவில் பரவலாகக் காணப்படுகிறது. வேகமாக செல்லக் கூடியது. மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் இதனால் ஓட முடியும். பல்வகையான தாவரங்களையும் பூச்சிகளையும் உண்ணும் ஈமியூ, உணவுக்காக நீண்ட தொலைவு செல்லக் கூடியது. இது டிரமையஸ் இனத்தில் இன்றும் நிலைத்திருக்கும் ஒரேயொரு உறுப்பினராகும். இது, உயரத்தில் பார்க்கும்போது உலகில் இரண்டாவது பெரிய இன்றளவும் நிலைத்திருக்கும் பறவையும் ஆகும். முதலாவது இடத்தில் பறக்க முடியாத தீக்கோழி உள்ளது. ஈமுவின் இன்றளவும் நிலைத்திருக்கும் மூன்று உப இனங்கள் ஆஸ்திரேலியாவில் உள்ளன. ஈமு பறவைகள் ஆஸ்திரேலியாவின் பெரு நிலப்பரப்பின் பெரும்பாலான பகுதிகளில் சாதாரணமாக உள்ளன, எனினும் அதிகளவில் மக்கள்தொகை நிறைந்த இடங்கள், அடர்ந்த காடுகள் மற்றும் வறண்ட பகுதிகளைத் தவிர்க்கின்றன.


மென்மையான-இறகுகளுள்ள, மண்ணிற, பறக்கமுடியாத பறவைகள் 2 மீட்டர்கள் (6.6 ft) வரையான உயரத்தை அடைகின்றன. இவை நீளமான மெல்லிய கழுத்துகளையும், கால்களையும் உடையவை. ஈமு பறவைகள் வேகமான, மிதமான வேகத்தில் மிகநீண்ட தூரங்களுக்குப் பயணிக்கக்கூடியவை. தேவை ஏற்படின், ஒரே நேரத்தில் 50 கி.மீ/ம (31 மை/ம) வேகத்தில் சில தொலலவுகளைக் கடக்கக்கூடியவை. ஈமு பறவைகள் நீண்ட கால்களைக் கொண்டிருப்பதால் 275 சென்டிமீட்டர்கள் (9.02 ft) வரையான நீண்ட அடிகளை வைத்து நடக்கின்றன அல்லது ஓடுகின்றன. இவை சந்தர்ப்பத்துக்கு ஏற்ற விதமாக நாடோடியாகத் திரிபவை. இவை உணவைக் கண்டுபிடிப்பதற்கு நீண்ட தூரங்களுக்குப் பயணிக்கலாம். பல வகையான தாவரங்களையும் பூச்சிகளையும் உண்ணுபவை. ஆனால் உணவின்றி பல வாரங்களுக்கு உயிர்வாழக்கூடியவை என்றும் அறியப்பட்டுள்ளது. அவை செரிமான மண்டலத்திலுள்ள உணவை நசுக்க உதவுகின்ற கற்கள், உடைந்த கண்ணாடித் துண்டுகள் மற்றும் உலோகத் துண்டுகளையும் கூட உட்கொள்கின்றன. அவை அடிக்கடி நீர் அருந்துவதில்லை, பெரும்பாலும் ஒரு நாளுக்கு அல்லது இரண்டு நாளுக்கு ஒருமுறையே நீரருந்துகின்றன. மேலும், வாய்ப்பு கிடைக்கும் போது அதிக அளவு திரவத்தை அருந்துகின்றன. ஈமுக்கள் தண்ணீரில் அமர்ந்திருக்கக்கூடிய திறன் உள்ளவை, அவை நீந்தவும் தெரிந்தவை. இவை புதுமையான மற்றும் பிற விஷயங்களை அறியவேண்டும் என்ற ஆவலுள்ள பிராணிகளாகும். இவை பிற விலங்குகள் மற்றும் மனிதர்களைப் பின்தொடர்ந்து, கண்காணிப்பதாகவும் அறியப்பட்டுள்ளது. ஈமுக்கள் இரவில் தொடர்ந்து தூங்கமாட்டா. ஆனால் உட்கார்ந்தபடியே பல குட்டித் தூக்கங்கள் போடும்.


ஈமுக்களின் கால்விரல்களில் ஒரு நகம் உள்ளது. கத்தியை ஒத்ததாக இருக்கும் இந்நகம் இதை வேட்டையாட வரும் மிருகங்களையும் எதிரி ஈமுக்களையும் துரத்தியடிப்பதற்குப் பயன்படும். எந்தவொரு விலங்குகளையும்விட இவற்றின் கால்கள் மிகவும் வலிமையானவை. எனவே அவை உலோகக் கம்பி வேலிகளைக் கிழித்தெறிய முடிகின்றது. அவற்றுக்கு அண்மையிலுள்ள வேட்டையாடும் மிருகங்களைக் கண்டறிய உதவும் வகையில் சிறந்த கண்பார்வையும், கேட்டல் உணர்வும் உள்ளன. ஒரு கண்ணின் மீதுள்ள இறகு, சுற்றியுள்ள சூழலுக்குப் பொருந்துகின்ற மற்றும் இதன் உருமறைப்பை மேம்படுத்துகின்ற விதமாக பிரதேசரீதியாக வேறுபடும் தன்மை கொண்டது. ஈமுவின் இறகுகள் உடலினுள் வெப்பம் பாய்வதைத் தடுக்க உதவுவதால், நண்பகல் வெப்பத்தின்போது இவை சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது. இவை பெரிய வரம்பிலான வேறுபடுகின்ற வெப்பநிலைகளைத் தாங்கக்கூடியவை மற்றும் திறம்பட வெப்பநிலையைச் சீராக்கக் கூடியவை. ஆண் மற்றும் பெண் பறவைகளைக் கண்ணால் கண்டு வேறுபடுத்தியறிவது கடினமாகும். ஆனால் பெருத்த கழுத்துப் பையைப் பயன்படுத்தி அவை வெளிவிடும் உரத்த சத்தங்களின் வகைகளைக் கொண்டு வேறுபடுத்தலாம். ஈமுக்கள் மே, ஜூன் மாதங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன, அத்துடன் அவை ஒரு புணர்ச்சியுடையவை அல்ல. ஒரு துணையை அடைவதற்காக பெண் பறவைகளுக்கிடையே சண்டை ஏற்படுவது சாதாரணமாகும். பெண் பறவைகள் பல தடவைகள் புணர்ச்சியில் ஈடுபட்டு ஒரு பருவத்தில் பல முறை பல முட்டைகளை இடலாம். இனப்பெருக்கப் பருவத்துக்கு முன்னதாக இவை எடை கூடுகின்றன. ஆண் பறவையே பெரும்பாலான நேரம் அடைகாக்கிறது. இந்தக் காலத்தில் ஆண் பறவை சாப்பிடுவதில்லை என்பதால் குறிப்பிடத்தக்க அளவு உடல் எடையை இழக்கிறது. சுமார் எட்டு வாரங்களுக்குப் பின்னர் முட்டைகள் குஞ்சு பொரிக்கின்றன. புதிய குஞ்சுகளை அவற்றின் தகப்பன் பறவைகளே பேணி வளர்க்கின்றன. சுமார் ஆறு மாதங்களுக்குப் பின்னர் அவை முழு அளவுக்கு வளர்கின்றன. ஆனால் அரையாண்டுக்குப் பின்னர் வரும் அடுத்த இனப்பெருக்கப் பருவம் வரையிலும் அவை தமது குடும்பத்துடன் தொடர்ந்து இருக்கின்றன. ஈமுக்கள் காடுகளில் 10 க்கும் 20 க்கும் இடைப்பட்ட ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. இவற்றை காட்டு நாய்கள் (டிங்கோ), கழுகுகள் மற்றும் பருந்துகள் வேட்டையாடுகின்றன. காட்டு நாய்களிடமிருந்து தப்பிக்க அவை குதிக்கின்றன மற்றும் உதைக்கின்றன. ஆனால் கழுகுகளுக்கும் பருந்துகளுக்கும் எதிராக, அவற்றால் ஓடித் தப்ப மட்டுமே முடியும்.


முன்னர் டாஸ்மேனியாவில் வாழ்ந்துவந்த டாஸ்மேனிய ஈமு உப இனங்கள், 1788 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஐரோப்பியக் குயேற்றம் ஏற்பட்ட பின்னர் அழியத் தொடங்கின. பின்னர் மனித செயற்பாடுகளின் மூலமே பெருநிலப்பரப்பில் உப இனங்கள் பரவின. ஒரு காலத்தில் கிழக்குக் கடற்கரையில் சாதாரணமாக இருந்த ஈமுக்கள் இப்போது அரிதாகிவிட்டன. இதற்கு மாறாக, கண்டத்தின் உள்நாட்டுப்பகுதியில் விவசாயத்தின் வளர்ச்சியும், இருப்புக்காக அதிக அளவில் நீர் வழங்கலும் நிகழ்ந்ததால் வறண்ட பிரதேசங்களில் ஈமுவின் பரவல் அதிகமானது. இதனால் இது அருகிவரும் இனமாகவோ அதற்கான வாய்ப்பிலுள்ள இனமாகவோ இப்போது இல்லை. பூர்வீக ஆஸ்திரேலியர்கள் மற்றும் முற்கால ஐரோப்பியக் குடியேற்றவாசிகளுக்கான உணவு மற்றும் எரிபொருள் மூலமாக ஈமுக்கள் இருந்தன. ஈமுக்கள் இறைச்சி, எண்ணெய் மற்றும் தோல் ஆகியவற்றுக்காக வளர்க்கப்படுகின்றன. ஈமு கொழுப்பு குறைவான இறைச்சியாகும். ஈமு எண்ணெயானது அழற்சிக்கு எதிரான மற்றும் ஒட்சியேற்றத்துக்கு எதிரான விளைவுகளைக் கொண்டுள்ளது என விற்பனையாளர்கள் கூறுகின்றனர். ஆனால் மனிதர்களில் இது இன்னமும் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. ஈமு ஆஸ்திரேலியாவின் ஒரு முக்கியமான பண்பாட்டுச் சின்னமாக விளங்குகிறது. இது மரபுச் சின்னங்களிலும் பல்வேறு நாணயங்களிலும் இடம்பெறுகின்றன, மேலும் பூர்வீக ஆஸ்திரேலிய புராணக்கதைகளில் பிரபலமான அம்சங்களான தோன்றுகின்றன. அதுமட்டுமின்றி நூற்றுக்கணக்கான இடங்களுக்கு இந்தப் பறவையின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.


வகைபாட்டியிலும் பரவலும்


ஐரோப்பிய தேடலாய்வாளர்கள் மேற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரைக்கு குறுகிய பயணம் மேற்கொண்டபோது, அவர்கள் 1696 ஆம் ஆண்டில் முதன் முதலாக ஈமுவைக் கண்டார்கள் என்று அறிக்கைகள் கூறுகின்றன. 1788 ஆம் ஆண்டுக்கு முன்னர் முதலாவது ஐரோப்பிய குடியேற்றம் ஏற்பட்ட போது ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரையிலேயே இது காணப்பட்டதாகக் கருதப்பட்டது. இது முதலில் 1789 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஆர்தர் ஃபிலிப்பின் வாயேஜ் டு பாட்டனி பே (Voyage to Botany Bay) என்ற புத்தகத்தில் நியூ ஹாலண்ட் கசோவரி (New Holland Cassowary) என்ற பெயரில் விவரிக்கப்பட்டது. பறவையியல் ஆய்வாளர் ஜான் லாதம் என்பவர், ஆஸ்திரேலியாவில் அக்காலத்தில் நியூ ஹாலண்ட் எனக் குறிப்பிடப்பட்ட சிட்னியிலிருந்து பெறப்பட்ட ஒரு மாதிரியைக் கொண்டு இந்த இனத்திற்குப் பெயரிட்டார். அவர் பிலிப்பின் புத்தகத்தில் சேர்ந்து பங்களித்து, ஆஸ்திரேலிய பறவை இனங்கள் பலவற்றுக்கான முதலாவது விளக்கங்களையும் பெயர்களையும் வழங்கினார். “வேகமாக நடக்கும் நியூ ஹாலந்தர்” என்பதற்கான இலத்தீன் வாக்கியமே இதன் பெயர் ஆகும். ஈமு என்ற பொதுப்பெயரின் பெயர் வரலாறு நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனால், பெரிய பறவையைக் குறிக்கும் அரபுச் சொல்லிலிருந்து இப்பெயர் வந்துள்ளதாக நம்பப்படுகிறது. பின்னர் இந்த அரபுச் சொல்லை ஆஸ்திரேலியாவிலும் நியூ கினியிலும் இருந்த இதனுடன் தொடர்புடைய கசோவரியை விவரிக்க போர்ச்சுக்கீசு தேடலறிஞர்கள் பயன்படுத்தினர். மற்றொரு கோட்பாடு, இச்சொல்லானது “ஈமா” என்ற போர்த்துக்கீசிய சொல்லிலிருந்து உருவானதாகக் கூறுகிறது. போர்த்துக்கீசிய மொழியில் “ஈமா” என்ற சொல் தீக்கோழி அல்லது கொக்கை ஒத்த பெரிய பறவையைக் குறிக்க பயன்படுத்தப்படுவதாகும். விக்டோரியாவில் ஈமுவைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சில சொற்களாவன: டியா டியா வுருங் என்ற மொழியில் பாரிமால் , குனை மொழியில் மியோரே மற்றும் ஜார்ட்வாட்ஜலி மொழியில் கௌன் . சிட்னி படுகைப் பகுதியின் உள்ளூர் எயோரா மற்றும் டாருக் வாசிகள் இவற்றை முராவுங் அல்லது பிராபயின் என அழைத்தனர்.


வீல்லாட் என்பவர் 1816 ஆம் ஆண்டு ஈமுவைப் பற்றிய தனது முதல் விளக்கப் புத்தகத்தில், இரண்டு இனப் பெயர்களைப் பயன்படுத்தினார். முதலில் டிரொமீசியஸ் என்றும் பின்னர் சில பக்கங்களுக்குப் பிறகு டிரொமாயஸ் என்றும் பயன்படுத்தியுள்ளார். அன்று முதற்கொண்டு எது சரியானது என்பது வாதத்துக்குரியதாக இருந்து வருகிறது. பிந்தைய சொல்லானது சரியாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் பாகுபாட்டியலில் உள்ள விதி என்னவென்றால், இது தெளிவாக ஒரு அச்சிடும் முறையில் நேர்ந்த பிழை இல்லை என்றால், முதலில் குறிப்பிடப்பட்ட பெயரே நீடிக்க வேண்டும் என்பதாகும். ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் வெளியீடுகள் உள்ளடங்கலாக பெரும்பாலான தற்கால வெளியீடுகளில், டிரொமீசியஸ் (Dromaius) என்பதே பயன்படுத்தப்படுகிறது. அதற்கு மாற்று எழுத்துக்கூட்டாக டிரொமாயஸ் (Dromaius) என்பதும் குறிப்பிடப்படுகிறது.


வகைப்பாடு


ஈமுக்கள் அவற்றின் நெருங்கிய உறவுப்பறவைகளான கசோவரிகளுடன் சேர்த்து கசுவாரிடே (Casuariidae) குடும்பத்தில் பறக்க முடியாத பறவைகளின் வரிசையான ஸ்ட்ருத்தியொனிஃபார்ம்ஸ் (Struthioniformes) என்பதில் வகைப்படுத்தப்படுகின்றன. எனினும், அண்மையில் கசுவாரிடேயை அவற்றுக்கென்று ஒரு தனி வரிசையான கசுவாரிஃபார்ம்ஸ் (Casuariformes) என்பதாகப் பிரித்து ஒரு மாற்று வகைப்படுத்தலானது பின்பற்றப்பட்டது.


ஐரோப்பிய குடியேற்றத்துக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவில் மூன்று வேறுபட்ட டிரமையஸ் இனங்கள் பொதுவாக இருந்தன. ஒரு இனமானது புதைபடிவங்களிலிருந்து அறியப்பட்டுள்ளது. சிறிய ஈமுக்களான ட்ரமையசு பௌண்டினியானசு (Dromaius baudinianus) மற்றும் ட்ரமையசு அட்டர் (D. ater) ஆகிய இரண்டுமே பின்னர் மிகவிரைவில் அழிந்துவிட்டன. எனினும் ட்ரமையசு நாவோஹொல்லண்டியே (D. novaehollandiae) என்ற ஈமு இப்போதும் சாதாரணமாக உள்ளது. ஈமுக்களின் எண்ணிக்கையானது ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் வேறுபடுகிறது. எண்ணிக்கை பெரும்பாலும் மழைவீழ்ச்சியைச் சார்ந்துள்ளது. உலகிலுள்ள ஈமு பறவைகளின் மொத்த எண்ணிக்கை 625,000–725,000 என்றும், இதில் 100,000–200,000 ஈமுக்கள் மேற்கு ஆஸ்திரேலியாவிலும், மீதம் பெரும்பான்மையானவை நியூ சவுத் வேல்சுவிலும், குவீன்ஸ்லாந்திலும் இருப்பதாகவும் மதிப்பிடப்படுகிறது. டாஸ்மானியன் ஈமு எனப்படுகின்ற துணை இனமான டிரமையசு நாவோஹொல்லண்டியே டையெமெனென்சிசு (D. novaehollandiae diemenensis), சுமார் 1865 ஆம் ஆண்டளவில் அழிந்துவிட்டது. 20 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில், ஈமுக்கள் டாஸ்மானியாவுக்கு அப்பாலுள்ள மரியா தீவு மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவுக்கு அருகிலுள்ள கங்காரு தீவு ஆகிய பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. கங்காரு தீவுப் பறவைகள் அங்கு தமது சந்ததியை உருவாக்கக்கூடிய அளவுக்கு ஒரு எண்ணிக்கையை உருவாக்கியுள்ளன. 1990 களின் மத்தியப் பகுதியில் மரியா தீவு பறவைகள் அழிந்துபோயின.


ஆஸ்திரேலியாவில் இன்றளவும் நிலைத்திருக்கும் மூன்று உப இனங்கள் உள்ளன, அவை:


 • தென்கிழக்கில், டிரமையசு நாவோஹொல்லண்டியே நாவோஹொல்லண்டியே (D. novaehollandiae novaehollandiae), இவை இனப்பெருக்கத்தின் போது கழுத்தைச் சுற்றி வெண்ணிறமான இறகுகளைக் கொண்டிருக்கும்;

 • வடக்கில், ட்ரமையசு நாவோஹொல்லண்டியே வுட்வார்டி (D. novaehollandiae woodwardi) இனம். இவை மெல்லியவை மற்றும் மங்கலான வண்ணமுடையவை

 • தென்மேற்கில், டிரமையசு நாவோஹொல்லண்டியே ராத்ஸ்சில்டி (D. novaehollandiae rothschildi)இனம். இவை அடர்ந்த வண்ணமுடையவை, இனப்பெருக்கத்தின்போது கழுத்தைச் சுற்றிய இறகுகளைக் கொண்டிருக்க மாட்டா.

 • விளக்கம்


  ஈமுக்கள் பெரிய பறவைகளாகும். இவற்றில் மிகவும் பெரியவை 150 to 190 சென்டிமீட்டர்கள் (59–75 in) வரையிலான உயரத்தையும் 1 to 1.3 மீட்டர்கள் (3.3–4.3 ft) வரையிலான தோட்பட்டை உயரத்தையும் கொண்டிருக்கலாம். ஈமுக்கள் 18 மற்றும் 48 கிலோகிராம்கள் (40 மற்றும் 106 lb) க்கு இடைப்பட்ட எடையுடையவை. ஆண் பறவைகளை விட பெண் பறவைகள் வழக்கமாக சிறிதளவு பெரியவையாக இருக்கும். ஆனால் இவற்றின் பிட்டப்பகுதி கணிசமாக அகன்றிருக்கும்.


  இவற்றில் சிறிய பயனற்ற சிறகுகள் உள்ளன. இவை கிட்டத்தட்ட 20 சென்டிமீட்டர்கள் (7.9 in) நீளமானவை மற்றும் இந்தச் சிறகின் நுனியில் சிறிய கூரிய நகம் உள்ளது. ஈமு ஓடும் போது தனது சிறகுகளைப் பயன்படுத்தி சிறகடிக்கிறது. இது அசைகின்றபோது, அவை பறவையின் நிலைத்தன்மைக்கு உதவுவதாக நம்பப்படுகிறது. இதற்கு நீளமான கழுத்தும் கால்களும் உள்ளன. மிகவும் சிறப்பாக அமைந்துள்ள இவற்றின் இடுப்பு கால் தசைத்தொகுதி காரணமாக இவற்றால் 48 கி.மீ/ம (30 மை/ம), போன்ற உயர் வேகங்களில் ஓட முடிகிறது. இவற்றின் பாதங்களில் மூன்று விரல்கள் மட்டுமே உள்ளன. மேலும், இதேபோல குறைந்த எண்ணிக்கையிலானயா எலும்புகளும், இணைந்த பாத தசைகளும் உள்ளன. இவையே கீழ்ப்புற கால்களின் பின்பகுதியில் கெண்டைக்கால் பெருந்தசைகளைக் கொண்டுள்ள ஒரே பறவை இனமாகும். பறக்கின்ற பறவைகளின் பறப்பதற்கான தசைகள் பறவையின் மொத்த உடல் எடையில் கொடுக்கும் பங்களிப்புப் போலவே, ஈமுக்களின் இடுப்பு கால் தசைகளும் அதன் எடைக்கு முக்கியப் பங்களிக்கின்றன. ஈமு நடக்கின்றபோது, சுமார் 100 சென்டிமீட்டர்கள் (3.3 ft) க்கு அகன்ற அடிகளை எடுத்து வைக்கிறது. ஆனால் ஒரு முழுப் பாய்ச்சலில் இது 275 சென்டிமீட்டர்கள் (9.02 ft) வரையான நீள அடிகளை வைக்கக்கூடும். ஈமுக்களின் கால்களில் இறகுகள் இருப்பதில்லை. இதன் கால்களின் கீழ்ப்புறம் தடிமனாக, மெத்தென்ற உள்ளங்கால் திண்டுகள் உள்ளன. கசோவரி பறவைகளைப் போலவே, ஈமுவானது தனது கால்விரலில் கத்தியின் வெட்டும் பாகத்தை ஒத்த ஒரு நகத்தைக் கொண்டிருக்கும். இந்நகமே இதன் பிரதான தற்காப்பு அம்சமாகும். எதிரிகளை உதைத்து காயங்களை ஏற்படுத்துவதற்கு இது பயன்படுகிறது. கால்விரலும், கூரிய நகமும் சேர்ந்து மொத்தம் 15 சென்டிமீட்டர்கள் (5.9 in) நீளமிருக்கும். இவை இரை மேய்வதற்கென இசைவாக்கமடைந்த மென்மையான அலகைக் கொண்டுள்ளன.


  ஈமுவுக்கு அருகிலுள்ள அபாயங்களைக் கண்டறிய உதவுகின்ற சிறந்த கண்பார்வையும் கேட்டல் உணர்வும் உள்ளன. எந்தவொரு விலங்கைவிடவும் இவற்றின் கால்கள் மிகவும் பலமானவை. இவை உலோகக் கம்பி வேலிகளைக் கிழிக்கக்கூடிய அளவுக்கு சக்தி வாய்ந்தவை.


  ஈமுவின் கழுத்து மங்கிய நீல நிறம் கொண்டது. இது அடர்த்தியற்ற இதன் இறகுகளூடாகத் தெரியும். இவை மண்ணிறத்திலிருந்து சாம்பல்நிற-மண்ணிறமான பறட்டையான சிறகுத் தொகுதிகள் கொண்டு காட்சியளிக்கின்றன. இறகுகளின் தண்டுகளும் நுனிகளும் கறுப்பானவை. சிறகுத் தொகுதியின் நுனிகள் சூரிய வெப்பத்தை அகத்துறிஞ்சிக்கொள்கின்றன. தளர்வாக அடக்கப்பட்டுள்ள உட்புற சிறகுத் தொகுதியானது தோலுக்கு வெப்பத்தைக் கடத்தாமல் பாதுகாக்கும். விளைவாக வருகின்ற வெப்பம் தோலுக்குச் செல்லாமல் மேற்போர்வையால் தடுக்கப்படும். இதனால் வெப்பமான நேரத்தின்போதும் இப்பறவை சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது. ஈமு சிறகின் ஒரு தனித்துவமான அம்சம் என்னவென்றால் ஒரு தனித்த தண்டிலிருந்து இரட்டை அச்சு உருவாவதாகும். இரண்டு அச்சுமே ஒரே நீளமுடையவை, ஆனால் இழைய அமைப்பு மாறுபடலாம். இப்பறவையின் பெரிய சிறகுக்கு அருகில் இது ஓரளவுக்கு மெல்லிய உரோமம் உடையது. ஆனால் வெளிப்புற முனைகள் புல்லை ஒத்தவை. ஆண் மற்றும் பெண் பறவைகள் தோற்றத்தில் ஒரே மாதிரியானவை எனினும், மலங்கழிக்கும் சமயத்தில் ஆண் பறவையின் ஆண்குறியைப் பார்க்க முடியும். சுற்றுச்சூழல் காரணிகளைப் பொறுத்து அதன் தோகையின் வண்ணம் மாறுபடுவதால் இப்பறவைக்கு இயற்கையான உருவ மறைப்பு சாத்தியமாகிறது. சிவப்பு மண்ணுடைய மிகவும் வறண்ட பகுதியிலுள்ள ஈமுக்களின் இறகுகள் அப்பகுதி போலவே இலேசாக வண்ணம் கொண்ட தோகையைக் கொண்டிருக்கும். ஆனால் ஈரமான காலநிலை உள்ள இடங்களில் வசிக்கும் பறவைகளின் இறகுகள் அடர்ந்த வண்ணமாக உள்ளன.


  ஈமுவின் கண்கள் இமைக்கின்ற மென்சவ்வுகளால் பாதுகாக்கப்படுகின்றன. இவை ஒளி கசியும் இயல்புடைய, இரண்டாம் நிலை கண்ணிமைகள் ஆகும். இவை அலகுக்கு மிகவும் அருகிலுள்ள கண் முனையிலிருந்து அடுத்த பக்கத்தை மூடும் விதமாக நகர்கின்றன. ஈமு பறவை இதை, கொந்தளிப்பான மற்றும் வறண்ட பாலைவனங்களில் மிகுதியாக உள்ள தூசியிலிருந்து கண்களைப் பாதுகாப்பதற்கான ஒரு பாதுகாப்பு முகமூடியாகப் பயன்படுத்துகிறது. ஈமுவில் மூச்சுக்குழாய் பையும் உள்ளது. கலப்பில் ஈடுபடும் பருவத்தின்போது இது மிகவும் தெளிவாகத் தெரியும். இது துணையைக் கவரும் போது பயன்படுத்தப்படும். மேலும் இது வழக்கமாக தகவல்தொடர்புக்காகப் பயன்படுத்தப்படுவதாக ஊகிக்கப்பட்டுள்ளது. பையானது 30 சென்டிமீட்டர்கள் (12 in) க்கும் அதிக குறுக்களவுடையது, தாராளமான இந்தப் பையின் சுவர் மிகவும் மெல்லியது. இதன் திறப்பின் அகலம் 8 சென்டிமீட்டர்கள் (3.1 in) மட்டுமே. இந்தப் பையினுள் செல்லும் காற்றின் அளவானது, ஈமு பையைத் திறப்பதன் மூலம் அல்லது மூடுவதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது, இதனூடாகச் செல்கின்ற இந்தக் காற்றின் அளவே ஈமுவின் அழைப்பின் சுருதியை நிர்ணயிக்கிறது. பொதுவாக பெண் பறவைகள் ஆண் பறவைகளைவிட உரக்கக் கத்துகின்றன.


  மிகவும் வெப்பமான நாட்களில் ஈமுக்கள் தமது உடல் வெப்பநிலையைப் பராமரிப்பதற்காக கடுமையாக மூச்சிரைக்கின்றன. அவற்றின் நுரையீரல்கள் நீரை ஆவியாக மாற்றும் குளிர்பதன சாதனங்களைப் போலச் செயற்படுகின்றன. பிற சில இனங்களைப் போல இவற்றின், இரத்தத்தில் ஏற்படுகின்ற காபனீரொட்சைட்டின் அளவு குறைவால் காரத்தன்மையான நிலையை (alkalosis) தோற்றுவிக்கப்படுவதாகத் தெரியவில்லை. குளிர்மையான வானிலையின்போது சாதாரணமாக சுவாசிப்பதற்காக இவை பல மடிப்புகளுள்ள மூக்குப் பாதைகளைக் கொண்டுள்ளன. குளிர்ந்த காற்றானது நுரையீரல்களுக்குச் செல்லும்போது மூக்குப் பகுதியிலிருந்து வெப்பத்தை எடுப்பதால் அக்காற்று சூடாகிறது. மூச்சை வெளிவிடுகையில், ஈமுவின் குளிர்ந்த மூக்குத் தடுப்பெலும்புகள் (turbinates) காற்றிலிருந்து ஈரப்பதனை திரும்பவும் ஒடுக்கி, மீண்டும் பயன்படுத்துவதற்காக அகத்துறிஞ்சிக் கொள்ளும். பிற பறக்காத விலங்குகளில் உள்ளதைப் போலவே, ஈமுவிற்கு மிகச்சிறந்த சீரான குருதி வெப்பநிலை உள்ளது. மேலும் இது இந்த நிலையை -5 முதல் 45 வரையான டிகிரி வெப்பநிலைகளுக்கு நீடிக்க வைக்கும் திறனுள்ளது. ஈமுவின் வெப்பநிலையைத் தாக்குப்பிடிக்கக்கூடிய திறன் (thermoneutral zone) 10–15 டிகிரிக்கும் 30 டிகிருக்கும் இடையில் அமைந்துள்ளது.


  பிற வகை பறவைகளுடன் ஒப்பிடும்போது பிற பறக்காத விலங்குகள் போலவே ஈமு ஒப்பீட்டளவில் குறைந்த வளர்சிதை மாற்ற வீதத்தை உடையது. ஆனால் இந்த வீதமானது செயல்பாடுகளைச் சார்ந்ததாகும், குறிப்பாக செயல்பாடுகளின் விளைவாக வெப்ப இயக்கவியலுக்கு ஏற்படும் மாற்றங்களைச் சார்ந்துள்ளது. -5 டிகிரி வெப்பநிலையில், உட்கார்ந்திருக்கும் ஈமுவின் வளர்சிதை மாற்றமானது நின்றுகொண்டிருக்கும் ஈமுவின் வளர்சிதை மாற்ற வீதத்தின் சுமார் 60 சதவீதமாக உள்ளது. ஈமுவின் வயிற்றின் கீழ்ப்புறத்தில் இறகுகள் இல்லாத காரணத்தால், அவை நின்றுகொண்டு கீழ்வயிறு மறைக்கப்படாமல் இருக்கும் போது வெப்ப இழப்பு வீதம் அதிகமாக இருப்பதே இதற்கு காரணமாகும்.


  அவற்றின் குரல்களை 2 கிலோமீட்டர்கள் (1.2 mi) வரையான தூரத்துக்குக் கேட்க முடியும், அவை உரத்த கதறல், முரசறைதல் போன்ற சீரான தாளத்தில் அமைந்த சத்தம் மற்றும் உறுமுதல் போன்ற வகையான சத்தங்களைக் கொண்டிருக்கும். கதறல் சத்தமானது வீங்கக்கூடிய கழுத்துத் திசுப்பையில் உருவாக்கப்படுகிறது. இப்பையானது 30 cm (12 in) நீளம் கொண்டதாகவும் மெல்லிய சுவருள்ளதாகவும் இருக்கும். உருவாக்கப்படும் வேறுபட்ட சத்தங்களைப் பயன்படுத்தி ஆண் பறவைகளையும் பெண் பறவைகளையும் வேறுபடுத்தி அறியலாம். கழுத்துப்பகுதி பையின் பெருத்த அமைப்பினால் உருவாக்கப்படும் உரத்த கதறலானது பெண் பறவைகளைக் குறிக்கும், உரத்த உறுமல்கள் ஆண் பறவைகளுக்கு மட்டுமே உருவாகக்கூடியதாக உள்ளது.


  சுற்றுச்சூழலும் நடத்தையும்


  ஈமுக்கள் ஆஸ்திரேலியா முழுவதும் பெரும்பாலான வாழ்விடங்களில் உள்ளன எனினும், ஸ்கிளிரோபில் (sclerophyll) காடு மற்றும் சவன்னா கானகம் ஆகிய பகுதிகளில் அதிகமாகவும் அதிக ஈரப்பதம் நிறைந்த காலங்கள் தவிர்த்து எஞ்சிய காலங்களில், சனத்தொகை நிறைந்த மற்றும் மிகவும் வறண்ட பகுதிகளில் இவை மிகக்குறைவாகவே உள்ளன. ஈமுக்கள் பெரும்பாலும் ஜோடிகளாகவே பயணம் செய்கின்றன. அவை பறக்கும் போது மிகப்பெரிய கூட்டங்களை உருவாக்கக்கூடியவையாக உள்ள அதேவேளை, உணவு மூலங்களை நோக்கிச் செல்லவேண்டிய பொதுவான ஒரு தேவை காரணத்தினாலேயே இந்த வழக்கமற்ற இன நடத்தை வெளிப்படுகிறது. ஈமுக்கள் உணவு அதிக அளவில் நிறைந்துள்ள பகுதிகளை அடைவதற்காக நீண்ட தூரங்களுக்குச் சென்றுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவில், ஈமுக்களின் நகர்வு பருவகாலத்தைச் சார்ந்த ஒரு தனித்துவமான வழக்கத்தைக் கொண்டுள்ளது, அதாவது அவை கோடைகாலத்தில் வடக்கு நோக்கியும் குளிர்காலத்தில் தெற்கு நோக்கியும் பறக்கின்றன. கிழக்குக் கடற்கரையில் அவை சுற்றித்திரிவதில் செயலில் எந்த விதமான வழக்கமும் தென்படவில்லை. ஈமுக்கள் நீந்தும் திறனும் கொண்டவை. அவை வாழும் இடத்தில் வெள்ளம் ஏற்பட்டாலோ அல்லது அவை ஆற்றைக் கடக்கவேண்டுமென்றாலோ நீந்துகின்ற இவை மற்றபடி நீந்துவதென்பது மிக அரிதாகும். மக்களை அணுகுகின்றபோது ஈமுக்கள் எச்சரிக்கையாக இருக்கும் என்றபோதிலும், அவை காடுகளில் சிறு குழுவான மனிதர்கள் உணவு வழங்குவது போல அழைக்கும் போது அவை அவர்களிடம் வருவதை பலரும் அறிவர். உண்மையில் அவற்றுக்கு உணவை வழங்காவிட்டாலும், அவை தொடர்ந்து உதவுகின்றன.


  அவை ஆர்வம் மிக்க விலங்குகள் என்றும் கூறப்படுகின்றன. கை கால் அசைவு தெரிந்தாலோ அல்லது ஒரு துண்டு துணியின் அசைவை கண்டாலோ இவை மனிதர்களிடம் வருவதும் நன்கு அறியப்பட்ட ஒன்றாகும். இவை காட்டில் மனிதர்களைப் பின்தொடர்ந்து, அவதானிப்பதாகவும் கூறப்படுகிறது. சிலவேளைகளில் அவை பிற விலங்குகளைக் குத்திவிட்டு, அவை எதிர்வினை புரியும் போது ஓடிவந்து விடும். இது அவற்றுக்கு ஒரு விளையாட்டைப் போலாகும். தனது அலகால் தனது தோகையைக் கோதி சுத்தப்படுத்துவதிலேயே ஈமு பெரும்பகுதி நேரத்தைக் கழிக்கும்.


  ஈமுக்கள் இரவில் தூங்கும். சூரியன் மறைகையில் இவை அமைதியுறத் தொடங்கும், இருப்பினும் இவை இரவு முழுவதும் தொடர்ந்து தூங்குவதில்லை. அவை உணவு உட்கொள்ள அல்லது கழிவகற்றவென ஓர் இரவில் எட்டு முறை வரை கண்விழித்து எழலாம். ஆழ்ந்த தூக்கத்துக்கு முன்னர், ஈமு தனது கணுக்காலில் உட்கார்ந்து அரைத்தூக்க நிலைக்குச் செல்லத் தொடங்கும். எனினும், இது பார்வை சார்ந்த மற்றும் ஒலி சார்ந்த தூண்டல்களுக்கு எதிர் வினை புரியப் போதிய எச்சரிக்கையுடனே இருக்கும். தேவையான போது சட்டென விழித்துக்கொள்ளும். இந்த வேளையில் இவற்றின் கழுத்து உடலுக்கு நெருக்கமாக இறங்குவதோடு, கண்மடல்கள் தாழத் தொடங்கும். அங்கு ஒலி சார்ந்த மற்றும் பார்வை சார்ந்த தொந்தரவுகள் எதுவும் இல்லையென்றால், 20 நிமிடத்துக்குப் பின்னர் இவை ஆழ்ந்த தூக்கத்திற்குச் செல்லும். இந்த வேளையில், ஈமு உடலை நிலத்தைத் தொடும்வரையிலும் கீழிறக்கி கால்களை மடித்துக்கொள்ளும். இவற்றின் இறகுகள் மழையை சிறு குன்று போன்ற உடல் வழியாக கீழ்நோக்கி நிலத்துக்குள் வழிந்து செல்லச் செய்கின்றன். தூங்குகின்ற நிலையானது சிறிய மலையை ஒத்ததான உருமறைப்பின் ஒரு வகையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஈமு பறவை கழுத்தை மிகவும் தாழ்வாகக் கீழே கொண்டு வந்து அலகை கீழ்நோக்கி திருப்பி வைத்துக்கொள்வதால் முழுக் கழுத்தும் S-வடிவாக மாறி அப்படியே மடிகின்றது. ஈமு, பொதுவாக 90-120 நிமிடங்களுக்கு ஒருமுறை ஆழ்ந்த தூக்கத்திலிருந்து கண்விழித்து, உண்ணுவதற்கு அல்லது கழிவகற்றுவதற்கு கணுக்கால் நிலையில் நிற்கும். இது 10–20 நிமிடங்களுக்கு நீடிக்கும். இதே செயல் அநேகமான இரவு வேளைகளில் 4–6 முறைகள் திரும்பத் திரும்ப நடக்கும். ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு நாளும் ஒரு ஈமு கிட்டத்தட்ட ஏழு மணிநேரம் தூங்கும். இளம் ஈமுக்கள் தமது கழுத்தைத் தட்டையாகவும், நிலப்பரப்பில் முன்னோக்கி நீட்டிக்கொண்டும் தூங்குவதாக அறியப்படுகிறது.


  உணவுப் பழக்கம்


  ஈமுக்கள் பகல்வேளையில் இரை தேடும் பழக்கம் கொண்டுள்ளன. அவை பூர்வீக மற்றும் வேறு இடத்திலிருந்து அறிமுகமாகிய பலதரப்பட்ட தாவர இனங்களை உண்ணுகின்றன. அவை உண்ணும் தாவரங்களின் வகையானது பருவகாலம் சார்ந்து அவை கிடைக்கும்தன்மையைச் சார்ந்ததாகும். அவை வெட்டுக்கிளிகள் மற்றும் சிள் வண்டுகள், பொறி வண்டுகள் (lady birds), காவலாளி (soldier) மற்றும் சால்ட்புஷ் (saltbush) கம்பளிப்பூச்சிகள், போகாங் (Bogong) மற்றும் பருத்திப்பஞ்சுக் காய் அந்துப்பூச்சி புழுக்கள் மற்றும் எறும்புகள் உட்பட்ட பூச்சிகளையும் உண்கின்றன. இதனால் அவற்றின் புரதத் தேவையும் உட்கொள்ளலும் அதிகமாக இருக்கிறது. மேற்கு ஆஸ்திரேலியாவில், பயணிக்கின்ற ஈமுக்களிடையே உணவு விருப்பத்தேர்வுகள் உள்ளமை கவனிக்கப்பட்டுள்ளது: மழை பெய்யும்வரை அவை அக்கேசியா அனியூரா (Acacia aneura) விதைகளை உண்ணுகின்றன. அதன்பின்னர் புத்தம்புதிய புல் தளிர்கள் மற்றும் கம்பளிப்பூச்சிகளை உண்ணுகின்றன. குளிர்காலத்தில் அவை கேசியா[மெய்யறிதல் தேவை] (Cassia) இலைகள் மற்றும் விதைகளடங்கிய உறை ஆகியவற்றை உட்கொள்கின்றன. வசந்தகாலத்தில் வெட்டுக்கிளிகளையும், குவாண்டாங்கின் (quandong) ஒரு வகையான சந்தாலம் அக்குமினேட்டம் (Santalum acuminatum) என்பதன் பழத்தையும் உண்ணுகின்றன. அவை கோதுமைப் பயிர்களையும், அடையக்கூடியதாக உள்ள ஏதேனும் பழம் அல்லது பிற பயிர்களையும் உண்கின்றன, தேவைப்பட்டால் உயரமான வேலிகளை எளிதாகத் தாவிச் சென்றும் உண்கின்றன. ஈமுக்கள் பூக்களுக்குரிய உயிரியற் பல்வகைமைக்கு பங்களிக்கும் பெரிய முளைக்கக்கூடிய விதைகளைப் பரப்பும் முக்கியமான கருவியாகத் திகழ்கின்றன. குவீன்ஸ்லாந்தில் 1930களிலும் 1940களிலும் ஈமுக்கள் மிகத்தொலைவிலுள்ள மக்கள் நெருக்கம் இல்லாத பகுதிகளில் கற்றாழையை உண்டபோது விரும்பத்தகாத விளைவொன்று ஏற்பட்டது. அவை எல்லாப் பக்கங்களிலும் நகர்ந்தபோது பல்வேறு இடங்களிலும் விதைகளை கழிவுகளாக அகற்றிச் சென்றன. இதனால் தேவையற்ற செடிகள் பரவின. இதனால் கற்றாழை பரப்பப்படுவதை நிறுத்துவதற்கு அதைத் தொடர்ச்சியாகத் தேடிக்கண்டுபிடித்து அழிக்கும் நடவடிக்கை கட்டாயமானது.


  தாவரங்களின் செரிமானத்திற்கு உதவுவதற்கு ஈமுக்கள் கூழாங்கற்களையும் கற்களையும் உட்கொள்வது அவசியமாகிறது. ஓவொரு கல்லும் 45 g (1.6 oz) எடையைக் கொண்டிருக்கலாம். மேலும், அவை ஒரு நேரத்தில் தமது அரவைப்பையில் 745 g (1.642 lb) வரையிலான எடை கொண்ட கற்களை அடக்கிக்கொள்ளும் திறனுடையவை. அவை மரக்கரியையும் உண்ணும். எனினும், இது ஏன் என்பதை விஞ்ஞானிகள் இன்னமும் உறுதிப்படுத்த முடியவில்லை. காப்பகத்திலுள்ள ஈமுக்கள் கண்ணாடி, சலவைக்கற்கள், கார் சாவிகள், நகைகள் மற்றும் இறுக்கிகள் மற்றும் திருகாணிகள் (nuts and bolts) ஆகியவற்றின் உடைந்த துண்டுகளையும்கூட உண்ணுவதாக அறியப்படுகிறது.


  ஈமுக்கள் பெரும் இடைவெளி விட்டே நீர் அருந்துகின்றன. ஆனால் அவை ஒவ்வொரு முறையும் அதிக நீரை அருந்திக்கொள்கின்றன. அவை நீர் நிலைகளின் ஓரத்தில் இறங்கி மண்டியிட்டு நீரருந்தும் முன்பு, குழுக்களாக ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அந்த நீர் நிலைகளைக் கண்காணிக்கின்றன. அவை தண்ணீர் குடிக்கும்போது, பாறைகள் அல்லது மண் ஆகிய பகுதிகளைக் காட்டிலும் திடமான நிலத்திலேயே மண்டியிடுகின்றன என்பது கவனிக்கப்பட்டுள்ளது. இதற்கு நீரில் மூழ்கிவிடுவோம் என்ற பயம் காரணமாக இருக்கலாமென ஊகிக்கப்படுகிறது. ஏதேனும் அச்சுறுத்தலால் தொந்தரவு செய்யப்படாமல் இருக்கும்பட்சத்தில், அவை பெரும்பாலும் தொடர்ச்சியாக 10 நிமிடங்களுக்கு நீர் அருந்தும். ஆபத்தான சூழ்நிலையில் அந்த ஆபத்தைச் சமாளிப்பதற்காக தாமாகவே இடைநிறுத்தி, பின்னர் மீண்டும் தொடர்ந்து நீர் அருந்துகின்றன. வறட்சியான சுற்றுச்சூழல் காரணமாக, நீர் மூலங்களைக் கண்டுபிடிக்காமலும் நீர் அருந்தாமலும் பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு அவற்றால் இருக்க முடியும். பொதுவாக அவை பகலில் அல்லது இரவில் ஒரு முறை நீர் அருந்துகின்றன. ஆனால் நீர் வளம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு நாளும் பல முறை நீர் அருந்தும். இவை பெரும்பாலும் காட்டில், கங்காருக்கள், பறவைகள் மற்றும் காட்டு ஒட்டகங்கள் மற்றும் ஐரோப்பிய குடியேற்றவாசிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட கழுதைகள் ஆகியவற்றுடன் நீர் மூலங்களைப் பகிர்ந்து கொள்கின்றன. ஈமுக்கள் இந்த பிற இனங்கள் குறித்து சந்தேகம் கொண்டவை ஆகும். இவை புதர்களில் காத்திருந்து பிற வகையான விலங்குகள் சென்ற பின் தனியாக நீர் அருந்தும் பழக்கம் உடையன. ஈமுவானது வழமைக்கு மாறான அல்லது ஏதேனும் ஆபத்தை உணர்ந்தால், அது நின்ற நிலையிலேயே நீர் அருந்துகிறது.


  இனப்பெருக்கம்


  ஈமுக்கள் கோடைகால மாதங்களான டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இனப்பெருக்க ஜோடிகளாகின்றன, கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு இந்த ஜோடிகள் சேர்ந்தே இருக்கக்கூடும். இந்தக் காலத்தில் சில மைல்கள் குறுக்களவுள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியில் அவை சுற்றி அலைகின்றன. இந்த சமயத்தில் அவை அந்தக் குறிப்பிட்ட நிலப் பகுதியைப் பாதுகாக்கின்றன அல்லது கண்டுபிடிக்கின்றன என்று நம்பப்படுகிறது. ஆண் மற்றும் பெண் பறவைகள் இரண்டுமே இந்தக் காலகட்டத்தில் எடை அதிகரிக்கின்றன. பெண் பறவையானது 45 – 58 கி.கி வரையிலான எடையுடன் சற்று எடை அதிகமாக உள்ளது. அடைகாத்தல் காலத்தின்போது இந்த எடை குறைகிறது. ஆண் பறவைகள் கிட்டத்தட்ட 9 கி.கி எடை குறைகின்றன. இவை மே மற்றும் ஜூன் ஆகிய குளிரான மாதங்களில் புணர்ச்சியில் ஈடுபடுகின்றன. ஆண்டின் மிகவும் குளிரான காலத்திலேயே பறவைகள் கூடுகட்டுவதால், புணர்ச்சிக்கான சரியான நேரம் காலநிலையாலேயே முடிவாகிறது. இனப்பெருக்கப் பருவத்தின்போது, ஆண் பறவைகளில் லூட்டினைசிங் ஹார்மோன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் மட்டங்களில் அதிகரிப்பு ஏற்படுவது உள்ளடங்கலான ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவற்றின் விதைகள் அளவில் இருமடங்காகும்.


  பெண் பறவைகளே ஆண் பறவைகளை காதல்புரிய அழைக்கின்றன. புணர்ச்சிப் பருவத்தின்போது பெண் பறவைகள் உடற்தோற்றத்தில் மேலும் கவர்ச்சிகரமாகின்றன. பெண் பறவைகளின் தோகை சிறிதளவு அடர்ந்த வண்ணமாகும். கண்களுக்கு நேர் கீழாகவும், அலகுகளுக்கு அருகாகவும் உள்ள மூடப்படாத, முடிகளற்ற தோலின் சிறிய பகுதிகள் நீலாம்பரி நீலமாக மாறுகின்றன, இருப்பினும் இதுவொரு நுட்பமான மாற்றமாகும். பெண் பறவையானது நம்பிக்கையுடன் பெரும்பாலும் ஆண் பறவையைச் சுற்றி நடக்கும். மேலும், தனது இறகுகளை விரிவடையச் செய்து, மெல்லிய, ஓரசையுள்ள சத்தத்தில் கூவும்போது தனது கழுத்தை பின்னோக்கி இழுக்கும். இச்சத்தமானது மனிதரின் முரசுடன் ஒப்பிடப்படுகிறது. ஆண் பறவைகள் கண்ணில் படாத போதும், அவை 50 மீட்டர்கள் (160 ft) ஐவிடத் தூரமாக இருக்கும் போதும் அவை இவ்வாறு அழைப்புச் சத்தத்தை ஏற்படுத்தலாம். ஆண் பறவைகள் பெண் பறவைகளைக் கவனிக்கும்போது, பெண் பறவையானது 10–40 மீ ஆரத்தில் வட்டமிடும். பெண் பறவையானது தனது எதிர்கால ஜோடியை வட்டமிடுகையில், தனது பிட்டத்தை ஆண்பறவையை நோக்கி வைத்துக்கொண்டு, தனது கழுத்தைத் திருப்பி ஆண் பறவையை நோக்கியபடியே சுற்றி வரும். இந்த வேளையில், பெண் பறவையின் கழுத்துக் காற்றுப் பை, சத்தமிடுவதால் தொடர்ந்தும் பெருத்த நிலையில் இருக்கக்கூடும். அமைதியாக நிறுகும் ஆண் பறவையின் முடிகள் வண்ணம் மாறாமல் இருக்கும். எனினும் அதன் தோலின் திறந்த பகுதிகள் வெளிர் நீல வண்ணமாக மாறும். பெண் பறவைகளின் தலையில் அதிக அளவிலான கறுப்பு முடிகள் உள்ளன. ஆனால், மனிதர்கள் ஆண் பெண் பறவைகளை வேறுபடுத்துவது கடினமாக இருக்கலாம். ஆண் பறவையானது சுற்றி வரும் பெண் பறவையை விரும்பினால், அது பெண்பறவையை நெருங்கி வரும். உரசிக்கொண்டு தூர விலகிச் சென்று முன்னர் செய்தது போல ஆண் பறவையைத் தொடர்ந்து வட்டமிட்டு தொடர்ந்து குறும்பு செய்யும்.


  காதல் நாடி ஊடாடும் சமயத்தில் ஆண் பறவைகளைவிட பெண் பறவைகள் முரட்டுத்தனமாக இருக்கும். ஆண் பறவைகளை அணுகுவதற்காக ஒன்றுடன் ஒன்று பெரும்பாலும் சண்டையிடுகின்றன. ஒரு புணர்ச்சிப் பருவம் பற்றிய ஆய்வின் போது, இப்பறவைகளுக்கிடையே நடந்த வன்முறைச் சம்பவங்களில், அரைவாசிக்கும் மேலானவை பெண் பறவைகளுக்கு இடையிலான சண்டைகளாக இருந்தன. ஒரு பெண் பறவை ஏற்கனவே ஜோடியைக் கொண்டுள்ள ஒரு ஆண் பறவையை அழைக்க முயற்சித்தால், அதனுடன் முன்பே இணைந்துள்ள பெண் பறவையானது தனக்குப் போட்டியாக வந்த பறவையை நோக்கி நடந்து, கண்டிக்கும் விதத்தில் முறைத்துப் பார்ப்பதன் மூலம் தடுத்துத் துரத்த முயற்சிக்கும். ஆண் பறவையானது தனது இறகுகளை உயர்த்தியும், இப்படியும் அப்படியுமாக அசைத்தும் இரண்டாவது பெண் பறவை மீதான தனது விருப்பத்தைக் காண்பித்தால், முன்பே இணைந்துள்ள பெண் பறவையானது தனக்குப் போட்டியான பறவையைத் தாக்கும். வழக்கமாக புதிய பெண் பறவை பின்வாங்கிச் செல்ல நேரிடுகிறது. சில சமயம் இரு பெண் பறவைகளுக்கு இடையேயான போட்டிகள் ஐந்து மணிநேரங்கள் வரை நீடிக்கலாம். குறிப்பாக, பெண் பறவை கவர்ந்திழுக்க முயற்சிக்கும் ஆண் பறவையானது தனியாகவும், இரு பெண் பறவைகளுக்குமே அத்துடன் இணையும் வாய்ப்பு இல்லை எனும்போதும் இவ்வாறு நிகழலாம். இந்த சந்தர்ப்பங்களில், அவற்றின் புணர்ச்சி அழைப்புகளும் கவர்ந்திழுக்க செய்யும் முயற்சிகளும் வரம்பு மீறிய அளவில் அதிகரித்து தீவிரமாகின்றன இது போன்ற சம்பவங்களில் பெரும்பாலும் போட்டியிடுகின்ற பெண் பறவை தனது போட்டிப் பறவையைத் துரத்துவதும் உதைப்பதும் சாதாரணமாக நிகழ்கிறது.


  ஆண் பறவைகள் தமது புணர்ச்சிப் பசியை இழந்து, நிலத்தின் மீது ஒரு பாதி மறைக்கும் வகையிலான ஒரு மரப்பொந்தில் அடிமரப்பட்டை, புல், குச்சிகள் மற்றும் இலைகளைக் கொண்டு கரடு முரடான ஒரு கூட்டைக் கட்டும். இந்தக் கூடானது கோள வடிவமாகவோ அல்லது கோளத்தின் ஒரு பகுதி போன்ற வடிவமாகவோ இல்லாமல் கிட்டத்தட்ட தட்டையான ஒரு மேற்பரப்பாகவே அமையும். இருப்பினும் குளிரான காலநிலைகளில், கூடுதல் வெப்பத் தடுப்பை வழங்குவதற்காக, கூடானது 7 செ.மீ வரையான உயரத்திலும் கூடுதல் கோளவடிவமாகவும் அமையும். பிற பொருட்கள் இல்லாதபோது, முட்கள் நிறைந்ததாக இருப்பினும், ஒரு மீட்டர் குறுக்களவுக்கும் அதிகமாக ஸ்பினிஃபெக்ஸ் (spinifex) புதரைப் பயன்படுத்துகின்றன. ஈமுக்கள் இந்தக் கூட்டை திறந்த தரையில் அல்லது புதர்க்காடுகள் மற்றும் பாறைகளுக்கு அருகில் அமைக்கலாம். திறந்த தரையில் கட்டுவதென ஈமுக்கள் முடிவு செய்தால் பொதுவாக தடிமனான புற்களைப் பயன்படுத்துகிறது. ஈமுக்கள் பொதுவாக, சுற்றுப்புறத்தைத் தெளிவாகப் பார்த்து, வேட்டையாடும் விலங்குகளைக் கண்டறியக்கூடிய விதமான ஒரு இடத்திலேயே கூடுகளை அமைக்கின்றன.


  ஆண் பறவை விரும்பினால், அது தனது கழுத்தை நீட்டி, தனது இறகுகளை உயர்த்தி, தரையில் குனிந்து, மூக்கினால் கொத்தும். பின்னர் அது, பெண் பறவையை வசீகரிக்கும் வண்ணம், தனது உடலையும் கழுத்தையும் இப்படியும் அப்படியுமாக அசைத்து, தனது மார்பை தனது துணையின் பிட்டப்பகுதியில் உராயச் செய்கிறது. இதன்போது இவை ஒலியெழுப்புவதில்லை. பெண் பறவையானது கீழே அமர்ந்து தனது பிட்டப்பகுதியை உயர்த்தி இதை ஏற்றுக்கொள்ளும்.


  இந்த ஜோடி தினமும் அல்லது இரு நாட்களுக்கு ஒருமுறை கலவியில் ஈடுபடும். பெண் பறவையானது ஒவ்வொரு இரண்டாவது அல்லது மூன்றாவது நாள், சராசரியாக 11 (மற்றும் அதிகபட்சமாக 20) மிகப்பெரிய, தடித்த ஓடுள்ள, அடர்ந்த-பச்சை வண்ண முட்டைகளில் ஒன்றை இடும். முட்டை ஓடானது கிட்டத்தட்ட 1 மி.மீ தடிப்பானது. உள்ளூர் ஆஸ்திரேலியர்கள், வடபகுதி முட்டைகள் மெல்லியவை என்றும் கூறுகிறார்கள். மழைவீழ்ச்சியைப் பொறுத்து முட்டைகளின் எண்ணிக்கை மாறுபடும். முட்டைகள் சராசரியாக 134 by 89 மில்லிமீட்டர்கள் (5.3 in × 3.5 in) என்ற அளவிலும் 700 மற்றும் 900 கிராம்கள் (1.5 மற்றும் 2.0 lb) எடையும் கொண்டிருக்கும். இது கன அளவிலும் எடையிலும் கிட்டத்தட்ட 10–12 கோழி முட்டைகளுக்கு நிகரானது. பறவையினங்களில் மரபியல் ரீதியாக ஒரேமாதிரியான இரட்டைப் பிறவிகளில் முதலாவது சரிபார்க்கப்பட்ட நிகழ்வானது ஈமு இனத்தில் நிரூபிக்கப்பட்டது. முட்டையின் மேற்பரப்பு சொரசொரப்பாகவும் வெளிர் பச்சை வண்ணத்திலும் உள்ளது. அடைகாக்கும் காலத்தின்போது, முட்டைகள் அடர்ந்த பச்சையாக மாறும். இருப்பினும் குஞ்சு பொரிக்காத முட்டைகள் சூரியனின் வெளிறச் செய்யும் விளைவு காரணமாக வெள்ளையாக மாறிவிடுகின்றன.


  தனது ஜோடி முட்டையிடத் தொடங்கிய பின்னர் ஆண் பறவையானது அடைகாக்கும் விருப்பமுடையதாகிறது. மேலும், முட்டையிடும் காலம் முடிவதற்கு முன்னதாகவே இது முட்டைகளை அடைகாக்கத் தொடங்குகிறது. இந்த நேரம் முதல், ஆண் பறவை சாப்பிடுவதோ, நீர் அருந்துவதோ அல்லது கழிவகற்றுவதோ இல்லை. முட்டைகளைத் திருப்புவதற்காக மட்டுமே எழுந்து நிற்கும். இவ்வாறு ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 10 முறைகள் திருப்பும். சில வேளைகளில், இரவில் அது வெளியில் நடந்து செல்லும். ஈமுவின் முட்டைகளை உண்ணும் விலங்குகளில் பெரும்பாலானவை இரவில் நடமாடுவதில்லை என்பதால் இந்த நேரத்தில் ஆண் பறவை எழுந்து நடமாடுகிறது. எட்டு வாரகால அடைகாத்தலின் போது, ஆண் பறவையின் மூன்றில் ஒரு பங்கு எடை குறைந்துவிடும். இக்காலத்தில் உடலில் சேமிக்கப்பட்டுள்ள கொழுப்பை வைத்தும் கிடைக்கக்கூடிய காலைநேரப் பனித்துளியை உட்கொண்டும் மட்டுமே இது உயிர்வாழுகிறது. சூப்பர்ப் ஃபேரி-ரென் (Superb Fairy-wren) போன்ற பிற ஆஸ்திரேலிய பறவைகள் பெரும்பாலானவற்றில் உள்ளது போல, ஆரம்ப ஜோடிப் பிணைப்பு இருப்பினும் நம்பிக்கையின்மை என்பதே ஈமுக்களுக்கான சராசரி குணமாகும்: ஆண் பறவை அடைகாக்கத் தொடங்கியதும், பெண் பறவையானது பிற ஆண் பறவைகளுடன் புணர்ந்து, பல முட்டைத் தொகுதிகளை இடக்கூடும். ஆகவே, ஒரு குஞ்சுத்தொகுதியில் உள்ள குஞ்சுகளில் அதிகபட்சமாக அரைவாசிக் குஞ்சுகளுக்கு பிற ஆண் பறவைகளே தந்தையாக இருக்கக்கூடும் அல்லது ஈமுக்களிடையேயும் குஞ்சு ஒட்டுண்ணி வாழ்க்கை அம்சம் இருப்பதால் குஞ்சுகளைப் பெற்ற இரண்டு பறவையுமே அதைப் பெற்ற பறவையாக இல்லாமலும் இருக்கலாம். குஞ்சுகள் பொரிக்கத் தொடங்கும்வரை, சில பெண் பறவைகளும் தங்கியிருந்து கூட்டைக் காக்கும். ஆனால், பெரும்பாலானவை மீண்டும் கூடுகட்டுவதற்காக கூடுகட்டும் பகுதியைவிட்டு முற்றிலுமாக நீங்கிச் செல்லும். நல்லதொரு பருவத்தில் பெண் ஈமுவானது மூன்று தடவைகள் கூடு கட்டக்கூடும். அடைகாக்கும் காலத்தின்போது பெற்றோர் பறவைகள் ஒன்றாகத் தங்கியிருந்தால், கூப்பிடும் தூரத்தில் ஒன்று தண்ணீர் குடிக்கும்போதும் உணவு உட்கொள்ளும் போதும் மற்றொன்று முட்டைகளைப் பாதுகாக்கும். இந்த நேரத்தில், ஏதேனும் அச்சுறுத்தல் வருவதாக இது உணர்ந்தால், கூட்டின் உச்சிமீது படுத்து, தன் தோற்றத்தை ஒத்த சுற்றுச்சூழலில் கலந்து மறைந்து கொள்ள முயற்சி செய்யும். பிற விலங்கு அருகில் வரும்போது, திடீரென்று எழுந்துநின்று, அதை எதிர்த்து பயமுறுத்தும்.


  அடைகாக்கும் காலம் 56 நாட்கள் ஆகும். குஞ்சுகள் பொரிப்பதற்கு சற்று முன்னர் முட்டைகளை அடைகாப்பதை ஆண் பறவைகள் நிறுத்துகின்றன. எட்டு வார காலத்தின்போது, ஆண் பறவைகள் கூட்டின் வெப்பநிலையையும் அதிகரிக்கின்றன. ஓரிரு நாட்கள் இடைவெளியில் அவ்வப்போது தொடர்ச்சியாக முட்டைகள் இடப்படுகின்றன எனினும், சமீபத்தில் இடப்பட்ட முட்டைகள் உயர் வெப்பநிலைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, மிக விரைவாக வளர்ச்சியடைவதால், ஓரிரு நாட்களுக்குள் அவை குஞ்சு பொரிக்கின்றன. இந்தச் செயற்பாட்டின்போது, சில நாட்களில் முட்டையைவிட்டு வெளிவரத் தயாராக உள்ள ஈமு குஞ்சுகள் வெப்பநிலை சீராக்கத்துக்கான திறனை விருத்தி செய்ய வேண்டியுள்ளது. அடைகாத்தலின்போது, கருக்கள் புறவெப்பச் சீரியல்பு உடையவையாக இருக்கும். ஆனால் இவை பொரிக்கின்ற சமயத்தில் அகவெப்பச் சீரியல்பு அம்சத்தை விருத்தி செய்துகொள்ள வேண்டும்.


  புதிதாக வெளிவந்த குஞ்சுகள் சுறுசுறுப்பானவை மேலும் அவை சில நாட்களிலேயே கூட்டைவிட்டு வெளியேறக் கூடியன. அவை கிட்டத்தட்ட 12 சென்டிமீட்டர்கள் (5 in) உயரமும், .5 kg (18 oz) எடையும் உடையவை. மேலும், உருமறைப்புக்காக சிறப்பான மண்ணிறம் மற்றும் கிரீம் நிற பட்டைத் தோற்றங்களை உடையவை. இந்தப் பட்டைத் தோற்றங்கள் மூன்று மாதம் அல்லது கூடிய காலத்தின் பின்னர் மங்கிவிடுகின்றன. ஆண் பறவையானது வளரும் குஞ்சுகளுடன் 7 மாதங்கள் வரையில் உடனிருந்து அவற்றைக் காத்து, உணவை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை அவற்றுக்குக் கற்றுக்கொடுக்கிறது. குஞ்சுகள் மிகவும் விரைவாக வளர்ந்து, 5-6 மாதங்களில் முழுதாக வளர்ந்து விடுகின்றன. அவை இன்னுமொரு ஆறு மாதங்களுக்கு அல்லது தமது இரண்டாவது பருவத்தில் இனப்பெருக்கத்திற்காக பிரியும் வரை தமது குடும்பத்துடன் தொடர்ந்து தங்கிருக்கக்கூடும். இளம் ஈமுக்கள் இளம்பருவத்தின் போது அவற்றின் தந்தைப் பறவையால் காக்கப்படுகின்றன. தந்தைப் பறவையானது, தாய்ப் பறவையையும் உள்ளிட்ட பிற ஈமுக்கள் குஞ்சுகளை நெருங்கவிடாமல் முரட்டுத் தனமாக சண்டையிடுகின்ற பகைமையான குணாம்சத்தைப் பெற்றுக்கொள்கின்றன. தந்தைப் பறவையானது பிற விலங்குகளை விரட்டியடிப்பதற்காக தனது இறகுகளைச் சிலிர்க்கச் செய்தல், கீச்சிடுகின்ற உறுமல்களை வெளிப்படுத்துதல் மற்றும் தனது கால்களால் உதைத்தல் ஆகிய நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. தனது சிறிய குஞ்சுகளுக்குப் பாதுகாப்பளிப்பதற்காக தனது முழங்காலையும் அது மடக்குகிறது. இரவில், தனது இறகுகளால் குஞ்சுகளை மூடுகிறது. இளம் ஈமுக்கள் நீண்ட தொலைவுக்குப் பயணம் செய்ய முடியாது என்பதால், பெற்றோர் பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்காக அதிக உணவு கிடைக்ககூடிய ஓர் இடத்தைத் தேர்வு செய்வது அவசியமாகிறது. காட்டிலுள்ள ஈமுக்கள் 10 முதல் 20 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. கூண்டில் வளர்க்கப்படும் பறவைகள் காட்டிலுள்ளவற்றை விட நீண்ட காலம் வாழ்கின்றன.


  காட்டு நாய்கள் (டிங்கோக்கள்), கழுகுகள் மற்றும் பருந்துகள் உள்ளடங்கலான சில விலங்குகள் ஈமுக்களை வேட்டையாடி இரையாக உட்கொள்கின்றன. மேற்படி மூன்றும் பெரிய பறவைகளையும் தாக்குகின்றன, நரிகளோ அடைகாக்கும் முட்டைகளைத் திருடுகின்றன. வேட்டையாடும் பறவைகளும் காட்டுநாயும் ஈமுவின் தலையில் தாக்குவதன் மூலம் அதைக் கொல்ல முயற்சிக்கும். அப்போது ஈமு வானில் பாய்ந்தும் காட்டு நாயை கீழே உதைத்து அல்லது நசுக்கியும் தடுக்க முயற்சி செய்யும். காட்டு நாயானது ஈமுவின் கழுத்தைப் பிடிக்கும் அளவு உயரத்திற்குப் பாய்வது அரிது என்பதாலேயே ஈமு எம்பிக் குதிக்கிறது. ஆகவே, காட்டு நாயின் அசைவுக்கு ஏற்ப தக்க சமயத்தில் ஈமு எம்பிக் குதித்தால் தான் ஈமுவின் தலையையும் கழுத்தையும் ஆபத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும். ஆப்பு போன்ற வாலுள்ள கழுகுகளும் பருந்துகளும் கீழ்நோக்கி மிக வேகமாகப் பாய்ந்து, உயர் வேகத்தில், தலையையும் கழுத்தையும் குறி வைத்து ஈமுக்களைத் தாக்குகின்றன. இது போன்ற சந்தர்ப்பத்தில், காட்டு நாயிடம் இருந்து தப்பிப்பதற்கு ஈமு எம்பிக் குதிப்பது போல் குதிப்பது அதைக் காப்பாற்றப் பயன்படாது. பறவைகள், ஈமுக்கள் திறந்த வெளிகளில் இருக்கும் போதே குறிவைக்கின்றன. அப்போது தான் அவை எதன் பின்னாலும் மறைந்து கொள்ள முடியாது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், தன்னைக் கொல்ல வரும் பறவையிடமிருந்து தப்பிச்செல்ல ஈமுக்கள் தாறுமாறான வகையில் ஓடி அடிக்கடி திசைகளை மாற்றிச் செல்ல மட்டுமே முடியும்.


  மனிதர்களுடனான உறவு


  பாதுகாப்பு நிலை


  பூர்வீக ஆஸ்திரேலியர்கள் மற்றும் முற்கால ஐரோப்பிய குடியேற்றவாசிகள் ஈமுக்களை உணவுக்கான ஆதாரமாகப் பயன்படுத்தினர். பூர்வீக வாசிகள் இப்பறவையைப் பிடிப்பதற்கு, நீர் நிலைகளில் அவை நீர் அருந்திக் கொண்டிருக்கும்போது அவற்றின் மீது ஈட்டி எறிதல், நீர் நிலைகளில் நஞ்சைக் கலத்தல், வலை வீசிப் பிடித்தல், அவற்றின் குரலில் ஒலியெழுப்பி அவற்றை வரவழைத்தல் அல்லது ஒரு மரத்திலிருந்து ஆட்டப்படும் இறகுகள் மற்றும் சிறிய காகித அல்லது துணித்துண்டுகளைக் கொண்டு அவற்றைக் கவருதல் போன்றவை உள்ளடங்கலான பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தினர். பூர்வீக ஆஸ்திரேலியர்கள் நீர் நிலைகளை மாசுபடுத்த பித்தூரி (pituri) அல்லது நச்சுத் தன்மையான பிற தாவரங்களைப் பயன்படுத்தினார்கள். மேலும் அந்த நீரை அருந்திய ஈமுக்கள் மதிமயங்கி தள்ளாடிச் செல்கையில் அவற்றை எளிதாகப் பிடித்தனர். சிலவேளைகளில் அவர்கள் தாம் முன்னர் கொன்ற ஈமுக்களின் தோல்களைப் பயன்படுத்தி ஈமுக்களைப் போன்று மாறுவேடமும் போட்டனர். காகித அல்லது துணித் துண்டுகளைப் பயன்படுத்தி அல்லது அவற்றைப் போன்ற குரலெழுப்பி மறைக்கத்துவைத்துள்ள குழிகளில் வரச்செய்து விழச் செய்தும் பிடிக்கப்பட்டன. ஆதிவாசிகள் சாப்பிடுவதற்கு அன்றி இவற்றை வேறு காரணங்களுக்காக கொலை செய்ததில்லை. மேலும் ஈமுக்களைக் கொன்று அதன் இறைச்சியைப் பயன்படுத்தாமல் விட்ட பிரபுக்களைப் பார்த்து அவர்கள் சினமுற்று முகஞ்சுழித்தார்கள். கிட்டத்தட்ட ஈமுவின் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் பயன்படுத்தினார்கள். ஈமுக்களின் இறைச்சியை உண்பதற்குப் பயன்படுத்திய அவர்கள், அவற்றின் கொழுப்பை ஆயுதங்களை மெருகேற்றுவதற்கான எண்ணெய்க்காக எடுத்து வைத்துக்கொண்டனர். மேலும், எலும்புகளை கத்திகளாகவும் கருவிகளாகவும் தசைநாணை கட்டுவதற்கும் பயன்படுத்தினர்.


  ஐரோப்பியர்கள் உணவுக்காக ஈமுக்களைக் கொன்றதுடன் அவை விவசாய நிலங்களுக்குள் வந்து தொந்தரவு செய்தால் அல்லது வறட்சியான காலங்களில் நீரைத் தேடி குடியிருப்புப் பகுதிகளுள் நுழைந்தாலும் அவற்றைக் கொன்றனர். இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு 1932 ஆம் ஆண்டில் மேற்கு ஆஸ்திரேலியாவில் நடந்த ஈமு போர் ஆகும். வெப்பமான கோடை காலம் ஒன்றில் கம்பியனுக்கு (Campion) கூட்டமாகச் சென்ற ஈமுக்களைக் கண்டு பயந்த நகரவாசிகள் அவற்றைத் துரத்துவதற்கு எடுத்த முயற்சிகளில் தோல்வியடைந்ததால், அவற்றைக் கொல்ல இராணுவத்தை அழைத்தனர். இது ஈமு போர் என அழைக்கப்பட்டது. ஈமுக்கள் மனிதர்களைத் தாக்கியதாக இரு நிகழ்வுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.


  முற்கால வெள்ளையர் குடியேற்ற்றவாசிகளும் விளக்குகளுக்கான எரிபொருளுக்காக ஈமு கொழுப்பைப் பயன்படுத்தினார்கள். 1930களில், மேற்கு ஆஸ்திரேலியாவில் ஆண்டொன்றுக்கு 57,000 கொல்லப்பட்டன. இதுவே ஈமுக்கள் அதிகமாக கொல்லப்பட்ட காலமாகும். மேலும், கடுமையான பயிர்ச் சேதம் காரணமாக, குவீன்ஸ்லாந்தில் அந்த நேரத்தில் அவற்றைத் தடுப்பதற்காகவும் அவை கொல்லப்பட்டன. 1960களிலும், மேற்கு ஆஸ்திரேலியாவில் ஈமுக்களைக் கொலை செய்வதற்காக சன்மானங்கள் வழங்கப்பட்டன. 1865 ஆம் ஆண்டில் முதலில் வெளியிடப்பட்ட ஜோன் கூல்டுவின் (John Gould) ஹேண்ட்புக் டு த பேர்ட்ஸ் ஆஃப் ஆஸ்திரேலியா (Handbook to the Birds of Australia) என்ற புத்தகத்தில், அவர் டாஸ்மானியா பகுதி ஈமுக்களை இழந்துவிட்டது குறித்து மிகவும் வருந்துகிறார். அங்கு ஈமுக்கள் அரிதாகிவிட்டன அதனால் இப்போது அவை அழிந்துவிட்ட இனமாகிவிட்டன. சிட்னியின் பகுதிகளில் ஈமுக்களை இப்போது காண முடிவதில்லை என்று அவர் குறிப்பிடுகிறார். மேலும், இந்தப் பறவை இனத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் முன்மொழிகிறார். ஆஸ்திரேலியாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உயிரியல் பல்வகைத்தன்மை பாதுகாப்புச் சட்டம் 1999 என்ற சட்டத்தின் மூலம் காட்டு ஈமுக்கள் முறையாகப் பாதுகாக்கப்படுகின்றன. ஐ.யு.சி.என் அவற்றின் நிலையை குறைந்த அக்கறைக்குரிய (Least Concern) என்ற வகையில் சேர்க்கிறது. அவற்றின் நிகழ்வு வரம்பானது 1,000,000 to 10,000,000 km2 (390,000–3,860,000 sq mi) க்கு இடைப்பட்டதாக உள்ளது. மேலும் 1992 ஆம் ஆண்டு எண்ணிக்கை மதிப்பீடானது 630,000 மற்றும் 730,000 ஆகியவற்றுக்கு இடையில் இருந்தது.


  ஆஸ்திரேலிய பெருநிலப்பரப்பிலுள்ள ஈமுக்களின் எண்ணிக்கையானது ஐரோப்பியர்களின் குடியேற்றத்துக்கு முன்னரை விட இப்பொழுது அதிகமாக இருக்கும் எனக் கருதப்பட்டாலும், குறைந்த எண்ணிக்கை காரணமாக சில காட்டு ஈமு தொகுதிகள் உள்ளூரில் அருகிவரும் ஆபத்தில் உள்ளன. இந்த குறைந்த எண்ணிக்கையிலான ஈமுக்களுக்கான அச்சுறுத்தல்கள் பல உள்ளன. அவற்றில் அவை வாழும் இடங்களை அகற்றுதல் மற்றும் கூறுபோடுதல்; வேண்டுமென்றே கொலைசெய்தல்; அவை வாகனங்களில் மோதிக்கொள்ளுதல்; இளம் ஈமுக்கள் மற்றும் முட்டைகளை நரிகள், காட்டு நாய்கள், வீட்டு நாய்கள் மற்றும் காட்டுப் பன்றிகள் ஆகியவை வேட்டையாடி உண்ணுதல் போன்றவை அடங்கும். நியூ சௌத் வேல்ஸ் நார்த் கோஸ்ட் பயோரீஜன் மற்றும் போர்ட் ஸ்டீபன்சு ஆகிய பகுதிகளில் வாழும் தனிப்படுத்தப்பட்ட ஈமு எண்ணிக்கை ஆபத்திலுள்ளவை என நியூ சௌத் வேல்ஸ் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.


  பொருளாதார மதிப்பு


  ஈமு வழக்கமாகக் காணப்படும் பகுதிகளிலுள்ள பூர்வீக குடியினருக்கு ஈமு இறைச்சிக்கான முக்கியமான மூலமாக விளங்கியது. ஈமு கொழுப்பு பாரம்பரிய மருத்துவமாகப் பயன்படுத்தப்பட்டது. அதை மக்கள் தோலில் தேய்த்தார்கள். மதிப்பு மிக்க ஓர் உராய்வு நீக்கியாகவும் இது பயன்பட்டது. காவி மண்ணுடன் இதைக் கலந்து, விழாக் காலங்களில் உடலை அலங்கரித்து வண்ணம் தீட்டிக் கொள்ளவும், அணிகலன்களுக்கான பாரம்பரிய சாயத்தை உருவாக்குவதற்கும், கூலாமன் (coolamon) போன்ற மரத்தாலான கருவிகள் மற்றும் பாத்திரங்களுக்கு எண்ணெயிடவும் பயன்படுத்தினர்.


  ஈமுவை கேரே அங்கேர்ரே (Kere ankerre) என அழைத்த மத்திய ஆஸ்திரேலிய அர்ரண்ட (Arrernte) மக்கள் ஈமுவை எப்படிச் சமைத்தார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டு:


  “Emus are around all the time, in green times and dry times. You pluck the feathers out first, then pull out the crop from the stomach, and put in the feathers you’ve pulled out, and then singe it on the fire. You wrap the milk guts that you’ve pulled out into something [such as] gum leaves and cook them. When you’ve got the fat off, you cut the meat up and cook it on fire made from river red gum wood.”


  வர்த்தக நோக்கிலான ஈமு வளர்ப்பதென்பது 1987 ஆம் ஆண்டில் மேற்கு ஆஸ்திரேலியாவில் தொடங்கியது. 1990 ஆம் ஆண்டில் ஈமுக்கள் முதன்முதலில் உணவுக்காகக் கொல்லப்பட்டன. ஆஸ்திரேலியாவில் ஈமு வளர்க்கும் வர்த்தகத் தொழிற்துறையானது காப்பகப்படுத்தி தேர்ந்தெடுப்பு முறையில் இனப்பெருக்கம் செய்ய வைத்தலை அடிப்படையாகக் கொண்டது. மேலும், டாஸ்மானியாவைத் தவிர அனைத்து மாகாணங்களிலும் காட்டு ஈமுக்களைப் பாதுகாப்பதற்கு உரிமம் பெற வேண்டிய நிபந்தனைகள் உள்ளன. ஆஸ்திரேலியாவுக்கு வெளியே, வட அமெரிக்காவில் அதிக ஈமு பறவைகள் வளர்க்கப்படுகின்றன. அமெரிக்க ஒன்றியத்தில் சுமார் 1 மில்லியன் பறவைகளும், பெரு மற்றும் சீனா ஆகிய நாடுகளிலும், வேறு சில நாடுகளில் சிறிய அளவுகளிலும் ஈமுக்கள் வளர்க்கப்படுகின்றன. ஈமுக்கள் காப்பகத்தில் நன்கு இனப்பெருக்கமடைகின்றன. அதிகம் அசையாமல் இருப்பதால் கால் மற்றும் செரிமானச் சிக்கல்கள் அதிகரிக்குமென்பதால், இவற்றைத் தவிர்ப்பதற்காக ஈமுக்கள் பெரிய திறந்த கூடுகளில் வளர்க்கப்படுகின்றன. அவற்றுக்கு தானியங்கள் வழங்கப்படுகின்றன, மேலும் கூடுதலாக அவை மேய்ச்சல் மூலமும் தீவனம் வழங்கப்படுகின்றன. அவற்றின் வயது 50-70 வாரங்களாக இருக்கையில் உணவுக்காகக் கொல்லப்படுகின்றன. அவை ஒரு நாளில் இரு முறை உணவு உண்கின்றன. ஒவ்வொரு முறையும் 2.25 கிலோகிராம்கள் (5 lb) எடையுள்ள இலைகளை உண்கின்றன.


  ஈமுக்கள் முக்கியமாக அவற்றின் இறைச்சி, தோல் மற்றும் எண்ணெய் ஆகியவற்றுக்காக வளர்க்கப்படுகின்றன. ஈமு இறைச்சி குறைந்த கொழுப்புள்ள இறைச்சி (1.5% ஐ விடக் குறைவான கொழுப்பைக் கொண்டது) ஆகும். அதில் 85 மி.கி/100 கி என்ற அளவில் கொலஸ்ட்ரோலைக் கொண்டுள்ள இது, பிற கொழுப்பில்லாத இறைச்சிகளுடன் ஒப்பிடக்கூடியதே. பிற வளர்ப்புப் பறவைகள் போலவே ஈமுக்களிலும் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய பாகம் (மிகச்சிறந்த இறைச்சிகள் தொடை மற்றும் டிரம் அல்லது கீழ்க்காலின் பெரிய தசைகளிலிருந்து கிடைக்கின்றன) கால் தசை இறைச்சியே ஆகும். அமெரிக்க ஒன்றிய வேளாண்மைத் துறையானது (யு.எஸ்.டி.ஏ) ஈமு இறைச்சியை சமையல் தேவைகளுக்கு உகந்த சிவப்பு சிவப்பு இறைச்சியாகக் கருதுகிறது. ஏனென்றால் இதன் சிவப்பு வண்ணம் மற்றும் pH மதிப்பு ஆகியன மாட்டிறைச்சியுடன் ஒத்தவை. ஆனால் ஆய்வு நோக்கங்களில் இது வளர்ப்புப் பறவையாகக் கருதப்படுகிறது. ஈமு கொழுப்பானது அழகுசாதனப் பொருட்கள், உணவு குறைநிரப்பிகள் மற்றும் சிகிச்சை மருந்துத் தயாரிப்புகள் ஆகியவற்றுக்குத் தேவையான எண்ணெயை உற்பத்தி செய்வதற்குப் பயன்படுகிறது. அடிபோஸ் திசுவை மென்மையாக்குவதற்காக திரவத்தில் ஊறவைத்து திரவக் கொழுப்பை வடிகட்டுவதன் மூலம், தோலுக்கு அடியிலுள்ள (subcutaneous) மற்றும் வயிற்றறை உறைக்கு அடியிலுள்ள (retroperitoneal) கொழுப்பிலிருந்து இந்த எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெயை பூர்வீக ஆஸ்திரேலியர்கள் மற்றும் வெள்ளை குடியேற்றவாசிகள் குணப்படுத்தும் செயல்களுக்காகப் பயன்படுத்தினர். இந்த எண்ணெயில் பிரதானமாக கொழுப்பமிலங்கள் உள்ளன. மேலும் ஒலீயிக் அமிலம் (42%), லினோலீயிக் மற்றும் பாமிட்டிக் அமிலங்கள் (21% each) ஆகியவை மிகவும் முக்கியமான கூறுகளாக உள்ளன. இது பல்வேறு ஒட்சியேற்ற எதிர்ப்பொருள்களையும் கொண்டுள்ளது, குறிப்பாக கரோட்டின்வகைகள் மற்றும் ஃபிளவோன்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.


  இந்த எண்ணெயில் அழற்சிக்கு எதிரான பண்புகள் உள்ளன என்பதற்கு சில ஆதாரங்கள் உள்ளன. எனினும், அவை இன்னமும் பெரியளவில் சோதனை செய்யப்படவில்லை. அமெரிக்க ஒன்றிய உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஈமு எண்ணெய் தயாரிப்பை ஒரு அங்கீகரிக்காத மருந்தாகக் கருதுகிறது. இருப்பினும், இந்த எண்ணெயானது இரையக குடலிய அழற்சியைக் குணப்படுத்தும் செயலில் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. மேலும் எலிகளைக் கொண்டு செய்த சோதனைகளிலிருந்து, ஆலிவ் எண்ணெய் அல்லது மீன் எண்ணெயைவிட ஈமு எண்ணெயானது மூட்டழற்சி மற்றும் மூட்டு வலி ஆகியவற்றுக்கு குறிப்பிடத்தக்களவுக்கு அதிகமான சிகிச்சை விளைவைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இது காயத்தை குணப்படுத்தும் வீதத்தை அதிகரிப்பதாக விஞ்ஞானரீதியாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுபோன்ற முற்கூறிய விளைவுகளுக்குக் காரணமான அடிப்படை அம்சங்கள் எப்படி செயல்படுகின்றன என்பது இன்னும் புரிந்துகொள்ளப்படவில்லை. ஈமு எண்ணெயில், ஏனைய பறவையின அல்லது பறக்காத பறவை இனங்களில் இருந்து கிடைக்கும் எண்ணெய்களில் இருக்கும் ஒட்சியேற்ற எதிர் ஆற்றல் மற்றும் அழற்சிக்கு எதிரான ஆற்றலைவிடச் சிறந்த ஆற்றல் உள்ளதாக 2008 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஒரு ஆய்வு கூறியுள்ளது. மேலும், ஈமு எண்ணெயில் நிரம்பிய கொழுப்பமிலங்களின் அளவுடன் ஒப்பிடுகையில் நிரம்பாத கொழுப்பமிலங்கள் உயர் விகிதத்தில் காணப்படுவதுதான் இந்த அதிக ஆற்றலுக்குக் காரணம் என தொடர்புபடுத்தியுள்ளது. மனிதர்களில் ஈமு எண்ணெய் செயலூக்கம் உடையது என்பதைக் காண்பிக்கின்ற விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் இல்லை எனினும், இவை பரந்துபட்ட வகையான ஆரோக்கிய அனுகூலங்களைக் கொண்டுள்ளது எனக் கூறி உணவு குறைநிரப்பியாக சந்தைப்படுத்தப்பட்டு விளம்பரப்படுத்தப்படுகிறது. வர்த்தகரீதியாக சந்தைப்படுத்தப்படும் ஈமு எண்ணெய் குறைநிரப்பிகள் சரியான தரநிலை கொண்டவையாக இல்லை. சிலவேளைகளில் இதுபோன்ற தயாரிப்புகள் ஏமாற்றும் நோக்குடன் சந்தைப்படுத்தப்படுகின்றன. “ஹௌ டு ஸ்பாட் ஹெல்த் ஃபிராட்” (“How to Spot Health Fraud”) என்ற 2009 ஆம் ஆண்டில் வெளியான ஒரு கட்டுரையில் ஈமு எண்ணெயை யு.எஸ்.எஃப்.டி.ஏ (USFDA) பிரதானப்படுத்தியுள்ளது.


  ஈமு தோலானது அதன் தோலிலுள்ள இறகுப் பைகளைச் சுற்றியுள்ள உயர்ந்த பகுதி காரணமாக சிறப்புத்தன்மை கொண்ட மேற்பரப்பைக் கொண்டுள்ளாது. இதன் தோலானது சிறு பணப்பைகள் மற்றும் காலணிகள் போன்ற சிறிய பொருள்களில், பெரும்பாலும் பிற தோல்களுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது. இறகுகளும் முட்டைகளும் அலங்காரக் கலைப்பொருளாக்கம் மற்றும் கைவினைப்பொருளாக்கத்தில் பயன்படுத்தப்படுகிறது.


  கலாச்சார ரீதியான குறிப்புகள்


  நியூ சௌத்வேல்ஸ் பகுதியிலுள்ள யுவாலராய் (Yuwaalaraay) மற்றும் பிற இன மக்களின் படைப்புக் கதை உள்ளடங்கலான ஆஸ்திரேலியன் அப்பொரிஜின புராணக் கதைகளில் ஈமுவுக்கு சிறப்புமிக்க ஓர் இடம் உள்ளது. இவர்கள் ஈமுவின் முட்டையொன்றை வானத்தில் எறிந்ததால்தான் சூரியன் உருவாக்கப்பட்டது என்று கூறுகின்றனர். பெரும் எண்ணிக்கையிலான பூர்வீகக்குடிக் குழுக்களிடையே ஏராளமான காரண காரிய விளக்கக் கதைகளில் ஈமு பறவை இடம்பெற்றுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவின் ஒரு கதையில், ஒரு மனிதன் சிறு பறவை ஒன்றை தொந்தரவு செய்ததால் சினங்கொண்ட அந்தப் பறவை ஒரு பூமாராங்கை அவன் மீது வீசி அவனது கைகளை வெட்டியெறிந்து அவனை பறக்க முடியாத ஈமுவாக மாற்றியதாகக் கூறப்படுகிறது. மத்திய ஆஸ்திரேலிய இனங்களில் உள்ள குர்டைட்சா (Kurdaitcha) மனிதன் தனது காற்தடங்களை மறைப்பதற்காக ஈமுவின் இறகுகளால் செய்யப்பட்ட காலணிகளை அணிவதாகக் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியா முழுவதுமுள்ள பல பூர்வீக மொழிக் குழுக்களிடையே, பால் வெளியிலுள்ள அடர்ந்த தூசிச் சந்துகள் இராட்சத ஈமுவைச் சுட்டுவதாக ஓர் ஐதீகமுள்ளது. பல்வேறு சிட்னி பாறைச் சிற்பங்களில் ஈமு பறவை சித்திரிக்கப்பட்டுள்ளது.[சான்று தேவை] இந்த விலங்குகள் பூர்வீக நடனங்களிலும் சித்திரிக்கப்படுகின்றன.


  ஈமுவானது ஆஸ்திரேலியாவின் விலங்கினச் சின்னமாக அதாவது தேசியப் பறவையாக பிரபலமாக கருதப்படுகிறது. ஆனால் அதிகாரபூர்வமாக அது தேசியச் சின்னமாக அறிவிக்கப்படவில்லை. இது ஆஸ்திரேலியாவின் மரபுச் சின்னங்களில் ஒரு சிவப்பு கங்காருவுடன் சேர்ந்து கேடயம் வைத்திருக்கும் வீரனின் தோற்றத்தில் இடம்பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய 50 சென்ட் நாணயத்தில் சின்னத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது. பெரும் எண்ணிக்கையிலான ஆஸ்திரேலிய அஞ்சல் தலைகளிலும் இது இடம்பெற்றுள்ளது. இவற்றில் கூட்டமைப்புக்கு முந்தைய நியூ சௌத் வேல்சு 100 ஆவது ஆண்டுநிறைவு வெளியீடாக 1888 ஆம் ஆண்டிலிருந்து வெளியிடப்பட்ட, 2 பென்ஸ் மதிப்புள்ள நீலவண்ண ஈமு முத்திரையைக் கொண்டுள்ள ஒரு அஞ்சல் தலையும் 1986 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட 36 சென்ட் அஞ்சல் தலையும் 1994 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட 1.35 டாலர் அஞ்சல் தலையும் அடங்கும். ஈமு இறகுத் தோகையைக் கொண்டு மிகச்சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருக்கும் ஆஸ்திரேலிய லைட் ஹார்ஸ் (Australian Light Horse) படையின் தொப்பிகள் பிரபலமானவையாகும்.


  ஆஸ்திரேலியாவில் மலைகள், ஏரிகள், சிற்றோடைகள் மற்றும் நகரங்கள் உள்ளடங்கலாக ஈமுவின் பெயர் சூட்டப்பட்டுள்ள அரசுப் பதிவுபெற்ற சுமார் 600 இடங்கள் உள்ளன. 19 ஆம் மற்றும் 20 ஆம் நூற்றாண்டு காலத்தில், பல ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கும் வீட்டுக்குரிய தயாரிப்புகளுக்கும் இந்தப் பறவையின் பெயர் வைக்கப்பட்டிருந்தது. எடுத்துக்காட்டாக, மேற்கு ஆஸ்திரேலியாவில் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலிருந்து ஈமுவை வர்த்தகக் குறியீடாகக் கொண்டிருந்த பியர் பானம் தயாரிக்கப்பட்டு வந்தது. சுவான் பியர் நிறுவனம் (Swan Brewery) ஈமு வர்த்தகக் குறியுள்ள பியர் பானங்களின் பல்வேறு வகைகளைத் தொடர்ந்து தயாரித்து வருகிறது. ஈமு – ஆஸ்ட்ரல் ஆர்னிதோலாஜி (Emu – Austral Ornithology) என்பது ராயல் ஆஸ்ட்ரலேசியன் ஆர்னிதோலாஜிஸ்ட் யூனியன் (Royal Australasian Ornithologists Union) அமைப்பினால் வெளியிடப்படும், தொழில்முறை ரீதியாக மறுஆய்வு செய்யப்படும் ஒரு காலாண்டு வெளியீடாகும். இது பேர்ட்ஸ் ஆஸ்திரேலியா எனவும் அழைக்கப்படுகின்றது.


  வெளி இணைப்புகள்

  ஈமியூ – விக்கிப்பீடியா

  Emu – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published.