கறுப்பு வெள்ளை மைனா (pied myna) அல்லது ஆசிய கருப்பு வெள்ளை நாகணவாய் (Asian pied starling (கிராகுபிகா காண்ட்ரா = Gracupica contra)) என்பது ஒருவகை மைனாவாகும். இப்பறவை இந்தியத் துணைக்கண்டத்திலும் தென்கிழக்கு ஆசியாவிலும் காணப்படுகிறது. இது ஒரு பாடும் பறவையாகும். இதன் இருபாற் பறவைகளும் பாடும் இயல்பை உடையவை. சமவெளிகளிலும் தாழ்வான மலைச்சாரல்களிலும் சிறு குழுக்களாக இவை காணப்படுகின்றன. இவை பொரி மைனா அல்லது பொரி நாகணவாய் எனவும் அழைக்கப்படுகின்றன.
உடல் தோற்றம்
இப்பறவையின் நிறம் கறுப்பும் வெள்ளையும் கலந்ததாக இருக்கும். இதன் கண்ணைச் சுற்றி இறகற்ற ஆரஞ்சு நிறச் சதையுண்டு. 20 செ.மீ. லிருந்து 25 செ.மீ அளவுடைய இம்மைனாக்கள், 75-லிருந்து 100 கி. நிறையுடன் இருக்கும். செம்மஞ்சள் கலந்த சிவப்பு அடிப்பகுதியுடன் கூடிய மஞ்சள் நிற அலகு கொண்டவை. கண்ணைச் சுற்றிய தோல் செம்மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்தில் காணப்படும். மேலுடல், தொண்டைப்பகுதி, மார்புப்பகுதி ஆகியவை கருநிறத்தில் இருக்க அலகின் அடிப்பகுதி, கன்னம், உடலின் அடிப்பகுதி, இறக்கைகளின் மறைவுப்பகுதி ஆகியவை பழுப்பு கலந்த வெண்ணிறத்தில் இருக்கும். இது மற்ற மைனாக்களைப்போல மனிதருடன் தாராளமாகப் பழகுவதில்லை.
பரவல்
இந்தியா, மியான்மர், தாய்லாந்து மலேசியா உள்ளிட்ட நாடுகளில் பரவலாகக் காணப்படுகின்றது; இந்தியத் துணைக்கண்டத்தில் அதன் வடமேற்குப் பகுதி, குஜராத், தென் இந்தியா நீங்கலாக அனைத்துப் பகுதிகளிலும் பரவியுள்ளது. சமீப காலமாக, தென் இந்தியப் பகுதிகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. (குறிப்பாக சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில்)