ஜெர்டன் கல்குருவி

ஜெர்டன் கோர்சர் (Jerdon’s courser) என்பது உலகில் காணப்படும் அரிய பறவைகளில் ஒன்று ஆகும். 1900 ஆண்டு முதல் எவர்கண்ணுக்கும் தென்படாததால் இப்பறவை முற்றிலும் அழிந்துவிட்டதாக கருதப்பட்டுவந்தது. ஆயினும் 1986 ஆம் ஆண்டு ஆந்திராவில் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது ஆந்திராவில் எஞ்சி இருக்கும் இந்தப் பறவைக்கு தெலுங்கில் “கலிவிக்கோடி” என்ற பெயர் இருந்தாலும், பறவையியளாளர் தாமஸ் சி. ஜெர்டன் நினைவாக இப்பறவைக்கு வைக்கப்பட்ட ஜெர்டன் கோசர் என்ற பெயரே பறவையியளாளர் மத்தியில் நிலவுகிறது. இந்தியாவில் ஆந்திரப்பிரதேசத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலையில் சில இடங்களில் மட்டுமே இருப்பது அறியப்படுகிறது.


விளக்கம்


இப்பறவை இளஞ்சிவப்பான பழுப்புவண்ண இறகுகளும், அகன்ற வெள்ளி மாலை சூட்டியது போன்ற கழுத்தும் கொண்டிருக்கும். இதன் முகவாய் கட்டையும், தொண்டையும் வெண்மையாகக் காணப்படும். வயிற்றுப்பகுதி சாம்பல் வெண்மையிலும், வால் இறகுகள் கருமைபடிந்த வெண்ணிறத்தில் இருக்கும்.


தற்போதைய நிலை


இப்பறவை சில வரலாற்றுப் பதிவுகள் மூலம் மட்டுமே அறியப்பட்டு வந்தது. 1986ஆம் ஆண்டு இது மீண்டும் கண்டுபிடிக்கப்படும் வரை இது அற்றுவிட்ட இனம் என்று கருதப்பட்டது. பம்பாய் இயற்கை வரலாற்று சங்கத்தில் பறவையியலாளராகப் பணியாற்றிய பாரத் பூசன் என்பவர் இப்பறவையை மீண்டும் கண்டுபிடித்தார். உள்ளூரில் வலையைக் கொண்டு பறவைகளைப் பிடிப்பவர்களின் உதவியோடு அவர் ஒரு பறவையை பிடித்தார். கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர் இது ஒரு பகலாடிப் பறவை என்றே கருதப்பட்டது. வாழ்விட அழிவு காரணமாக இப்பறவை இன்னும் மிக அருகிய இனமாகவே தொடர்கிறது. இது ஒரு இரவாடிப் பறவையாகும். பூச்சியுண்ணி என்று கருதப்படுகிறது. அரிதான பறவையாக இருப்பதால் இதன் வாழ்வியல் மற்றும் கூடுகள் அமைக்கும் முறைகள் பற்றி இன்னும் யாருக்கும் தெரியவில்லை.


மதிப்பீட்டின்படி 50 முதல் 249 பறவைகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. புகைப்படக் கருவிகளை அமைத்தல் மற்றும் மிருதுவான மணலைக் கொட்டி இவற்றின் கால் தடப் பதிவுகளை எடுத்தல் ஆகிய தொழில்நுட்பங்களின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வுகளின்படி இவற்றின் எண்ணிக்கை அடர்த்தியானது கணக்கிடப்பட்டுள்ளது. உலகில் இப்பறவைகளின் எண்ணிக்கையானது ஒரு சிறிய பகுதியில் மட்டுமே உள்ளது. இவை தற்போது வாழும் வாழிடத்தின் ஒத்த சூழ்நிலைகளை கொண்ட அண்டை பகுதிகளில் உள்ள மக்களுக்கு, இப்பறவைகளின் படங்களை விநியோகித்தல் மற்றும் இப்பறவைகளின் சத்தத்தை எழுப்பும் சிறிய மின்னணுக் கருவிகளை அளித்தல் ஆகியவற்றின் மூலம் இவை வாழும் புதிய பகுதிகளை கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2008 ஆம் ஆண்டின் போது, இவை முன்னர் வாழ்ந்த கிழக்கு மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தின் சிரோஞ்சா பகுதிக்கு அருகில் இவற்றைத் தேடியபோது இவற்றைக் கண்டறிய முடியவில்லை.


1988ஆம் ஆண்டு இந்திய அஞ்சல் துறை இப்பறவை மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதை நினைவுகூறும் விதமாக ஒரு அஞ்சல் தலையை வெளியிட்டது.


வெளி இணைப்புகள்

ஜெர்டன் கல்குருவி – விக்கிப்பீடியா

Jerdon’s courser – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.