செஞ்செதில் தவிட்டுப்புறா [Oriental turtle dove (Streptopelia orientalis)] என்பது கொலம்பிடே என்ற குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும்; ஐரோப்பாவின் சில பகுதிகள் தொடங்கி மத்திய ஆசியா, இந்தியத் துணைக்கண்டம் வழியாக தென்கிழக்கு ஆசியா வரை காணப்படும் S. orientalis இனம், ஆறு உள்ளினங்களை உள்ளடக்கியது. இதில் ஒரு உள்ளினமான S. o. erythrocephala மத்திய இந்தியப் பகுதிகளிலும் தென்னிந்தியாவில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கிழக்குத் தொடர்ச்சி மலையின் வட பகுதியிலும் காணப்படுகிறது.
உடலமைப்பும் கள அடையாளங்களும்
மணிப்புறாவை விட சற்றுப் பெரிய புறா (நீளம் = 33 செமீ). செதில் போன்ற தோற்றமளிக்கும் மேற்பகுதியுடன் கழுத்தின் பக்கத்தில் நான்கைந்து கருப்புக் கீற்றுகள் கொண்டிருக்கும்; நல்ல செம்பழுப்பு நிறமும் குண்டான தோற்றமும் மணிப்புறாவிலிருந்து இதை வேறுபடுத்த உதவும்.
பரவல்
இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் நாடுகள். இந்தியா, இலங்கை, நேபாளம், பூட்டான், மியான்மர், தாய்லாந்து, வியட்நாம், வட கொரியா, தென் கொரியா, ஜப்பான்
மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பா. மங்கோலியா, கசகஸ்தான், ஆப்கானிஸ்தான், கிருகிஸ்தான், தஜிகிஸ்தான், வடக்கு பாகிஸ்தான், ரஷ்யா
வாழிடம்
ஊசியிலைக்காடுகளிலிருந்து வெப்பமண்டலக் காடுகள் வரை பலதரப்பட்ட பகுதிகள்; காடுகளின் எல்லைகளிலும் புதர், மரங்கள் நிறைந்த வயல்வெளிகளிலும் இவை காணப்படும். காஷ்மீரில் பர்ச்சு, நெட்டிலிங்க மரங்களுடன் கலந்த பைன் காட்டுப்பகுதியிலும் அதனையொட்டிய புல்வெளிப் பகுதிகளிலும் இனப்பெருக்கம் செய்கின்றன.