வர்ணக் காடை (Painted Bush Quail) என்பது சிறிய பறவைக்கூட்டத்தைச் சார்ந்ததும், இந்தியக் காட்டுப்பகுதிகளில் புதருக்கடியில் ஒளிந்து வாழும் பறவையுமாகும். மற்ற காடையிலிருந்து இதன் கால்பகுதியில் காணப்படும் சிகப்பு நிறத்தைக்கொண்டு வேறுபடுத்தலாம். இவை மறைந்து வாழ்ந்தாலும் காலை மாலை இரண்டு வேளையிலும் ஒலி எழுப்புகிறது. சற்றும் எதிர்பார்க்காத வேளையில் விமானம்போல் தரையிலிருந்து மேல் எழும்பிப் பறக்கும் திறன் படைத்தது.
வாழ்விடம்
இந்தியாவில் கிழக்கு மற்றும் மேற்கு மலைத்தொடர்ப் பகுதியில் அதிகமாகக் காணப்படுகிறது. பொதுவாக மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்ப் பகுதியில் காணப்படும் காடையை விட சிறியதாகவும், வெளிர் நிறத்துடனும் காணப்படுகிறது. இந்தியாவின் தென் பகுதியான நீலகிரி, சேர்வராயன் மலைப் பகுதி, மற்றும் கர்னாடகா மாநிலத்தில் அமைந்துள்ள பிலிகிரி மலைப் பகுதியிலும் இப்பறவை காணப்படுகிறது.
குணம்
இவற்றின் வாழ்விடத்தில் 8 முதல் 10 வரை சிறிய கூட்டமாகத் திரியும். ஏதாவது சத்தம் கேட்டால் இவை அனைத்தும் வெவ்வேறு திசைகளில் பறந்து சென்று மீண்டும் அதே இடத்தில் வந்து அமரும் குணம் கொண்டது. . ஆண் பறவை ஒரே தார முறையைக் கொண்டுள்ளது. ஒரு பெண் பறவையைக் கவர இரண்டு ஆண் பறவைகள் சண்டையிடும் குணம் கொண்டுள்ளது. இவற்றின் இனப்பெருக்க காலம் டிசம்பர் துவங்கி மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. தனது கூட்டை தரைப்பகுதியில் புற்களால் கட்டிக்கொள்கிறது. முட்டைகள் 4 முதல் 7 வரை இடுகிறது. குஞ்சு பொரிக்க 16 முதல் 18 நாட்கள் பெண் பறவை அடைகாக்க வேண்டியுள்ளது. பெண் பறவை அதன் முட்டையை மனிதர்கள், நாய்கள் போன்றவற்றிடமிருந்து பாதுகாக பெரிய போராட்டம் நடத்த வேண்டியதுள்ளது. இதன் குஞ்சுகள் சிறியதாக இருக்கும் போதே பறக்க துவங்கிவிடுகின்றன.