சிவப்புச் சில்லை

சிவப்புச் சில்லை ( Red Munia) என்பது ஒருவகைப் பறவையாகும். இது ஆசியா கண்டத்தின் சில பகுதிகளில் காணப்படுகிறது. இது சிட்டுக் குருவியின் இயல்புகளுடன் ஒத்திருக்கும். கூட்டம் கூட்டமாக இரை மேயக்கூடியது.


விளக்கம்


10 செ.மீ. உள்ள இப்பறவை அளவில் சிட்டுக்குருவியைவிட சிறியது. ஆண்பறவையும் பெண்பறவையும் ஒன்றுபோல காணப்படும். இதன் உடல் தவிட்டு நிறத்துடனும், அதில் சில வெள்ளைப் புள்ளிகளுடனும் காணப்படும். இப்பறவையின் அலகு, பிட்டம் ஆகியன இரத்தச் சிவப்பு நிறத்திலும் இருக்கும். கூடுகட்டும் காலத்தில் ஆண்பறவை படத்தில் உள்ளது போல சிவப்பு நிறத்திற்கு மாறிவிடும்.


காணப்படும் பகுதிகள்


தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரை சார்ந்த மாவட்டங்களில் காணப்படுவதில்லை. திருச்சி, மதுரை, கோவை மாவட்டங்களில் ஆங்காங்கே காணலாம். தென் மாவட்டங்களில் இதன் இருப்பு பற்றிய விவரம் தெளிவற்றதாக உள்ளது. கடை வீதிகளில் பறவைகளைக் கூண்டுகளில் அடைந்து விற்போர் இதனையும் இதனை அடுத்த சில்லைகளையும் விற்பனை செய்வது நகரங்களில் பரவலாகக் காணப்படுகிறது.


உணவு


இணையாகவோ 30 வரையான சிறு குழுவாகவோ பிற சில்லைகளுடன் சேர்ந்து புல் வெளிகளிலும், விளை நிலங்களிலும் இரைதேடும். கரும்பு வயல்களின் மேலமைந்த மின் கம்பிகளில் காணலாம். இது இரவில் நாணல் புதர்களிலும் கரும்புத் தோட்டங்களிலும் சென்று அடையும் புல் விதைகளும் சிறு தானியங்களையும் உணவாகக் கொள்ளும். இது பறக்கும்போது குரல் கொடுத்தவாறு இருக்கும்.


இனப்பெருக்கம்


ஆண்டு முழுதும் இதன் கூடுகளைக் காணலாம். புல்லைக் கொண்டு பந்து வடிவிலான கூட்டினைப் பக்கவாட்டில் அமைந்த நுழைவாயிலோடு அமைத்து 6 முதல் 10 முட்டைகள் இடும்.


வெளி இணைப்புகள்

சிவப்புச் சில்லை – விக்கிப்பீடியா

Red avadavat – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.