தோக்கோ தூக்கான்

தோக்கோ தூக்கான் என்பது தூக்கான் குடும்பப் பறவைகளிலேயே பெரியதும் நன்கு அறியப்பட்டதுமான ஒரு தூக்கான் இனமாகும். பொதுவாக இப்பறவை தூக்கான் அல்லது பெரும் தூக்கான் என்று அழைக்கப்படுகிறது. இவை தென் அமெரிக்காவின் நடு மற்றும் கிழக்குப் பகுதிகளில் திறந்த வெளியாக உள்ள இடங்களில் காணப்படுகின்றன.


தோற்றக் குறிப்பு


தோக்கோ தூக்கான்கள் எடுப்பான இறகமைப்பைக் கொண்டுள்ளன. உடல் கருப்பு நிறத்திலும் தொண்டையும் வாலின் ஒரு பகுதியும் வெண்ணிறத்திலும் காணப்படுகிறது. கண்ணைச் சுற்றியிருக்கும் நீலநிறத் தோலானது கருவிழி நீல நிறத்தில் இருப்பது போன்ற தோற்றத்தைத் தருகிறது. இதனைச் சுற்றி இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளது. இப்பறவையின் அலகு 15.8 முதல் 23 செ.மீ நீளம் வரை இருக்கும். அலகு மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு நிறம் கொண்டது. இதன் அலகு அளவின் காரணமாக பார்ப்பதற்குக் கனமானது போலத் தோன்றினாலும் உள்ளீடற்று இருப்பதால் அளவுடன் ஒப்பிடுகையில் எடை குறைந்ததே. நாக்கு ஏறத்தாழ அலகின் நீளம் இருக்கும். பிசிபார்மசு என்னும் வரிசையின் பெரிய பறவையும் தூக்கான்களில் பெரியதும் இப்பறவையே ஆகும். இப்பறவையின் மொத்த நீளம் 55 – 65 செ.மீ. எடை 500 – 876 கிராம். சராசரியாக ஆண் 723 பறவைகள் கிராம் எடையும் பெண் பறவைகள் 576 கிராம் எடையும் கொண்டன.


தூக்கான்களின் அலகுகள் இவற்றின் உடலில் இருந்து வெப்பத்தை வெளியேற்றி உடலை வெப்பச்சமநிலையில் வைத்திருக்க உதவுகின்றன. இவற்றின் பணி யானைகள் தங்கள் காதுகள் மூலம் வெப்பத்தை வெளியேற்றுவதற்கு ஒப்பானது. தூக்கான்கள் தங்கள் அலகுகளில் உள்ள குருதிக்குழாய்களில் ஓடும் குருதியின் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உடல் வெப்பநிலையைப் பராமரிக்கின்றன. இத்தூக்கானின் உடலில் இருந்து வெளியேறும் வெப்பத்தில் கிட்டத்தட்ட 30 முதல் 60 சதவீதம் வரை அலகுகளின் மூலமே வெளியேறுகிறது.


வாழ்நாள், வாழிடம்


இவற்றின் வாழ்நாள் சராசரியாக 20 ஆண்டுகள். அதிகபட்ச வாழ்நாள் 26 ஆண்டுகள் ஆகும். இப்பறவைகள் தென்னமெரிக்காவின் பல நாடுகளிலும் காணப்படுகின்றன. பொதுவாக இப்பறவைகள் மழைக்காடுகளில் மரங்களின் உச்சியில் வாழ்கின்றன.


வெளி இணைப்புகள்

தோக்கோ தூக்கான் – விக்கிப்பீடியா

Toco toucan – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.