தூக்கான்

தூக்கான் அல்லது பேரலகுப் பறவை (இலத்தீன் பெயர்:Ramphastidae) என்பது வெப்ப மண்டல அமெரிக்காவில் வசிக்கும் பறவைகளைக் கொண்ட ஒரு குடும்பமாகும். இப்பறவைக் குடும்பத்தின் பறவைகள் கண்ணைக் கவரும் அழகிய நிறங்களைக் கொண்ட மிகப்பெரிய அலகுடன் இருக்கின்றன. இக்குடும்பம் 5 பேரினங்களும் 40 இனங்களையும் கொண்டது. டுப்பி மொழியிலிருந்து இப்பெயர் மருவி வருகின்றது.


நடு அமெரிக்கா, தென் அமெரிக்காவின் வடபுறம் வெப்ப மண்டல அமெரிக்கா எனப்படுகின்றது. இப்பறவை நிலத்தில் வாழும் குயிலும் பறவை இனத்தைச் சேர்ந்தது. உயிரினவியலில் இப்பறவை ராம்ஃபாசிட்டிடே (Ramphastidae) என்னும் பறவையின உட்பிரிவைச் சேர்ந்தது. ஏறத்தாழ 41 உள் இனங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 21 இனம் கொலம்பியா நாட்டிலும், சுமார் 17 இனங்கள் பிரேசில், வெனிசூலா, ஈக்வெடார் போன்ற நாடுகளில் வாழ்கின்றன.


இப் பேரலகுப் பறவையின் உடல் 18 முதல் 63 செ.மீ நீளம் கொண்டிருக்கும். இப்பறவையின் மிகப்பெரிய அலகு கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, மஞ்சள், பழுப்பு ஆகிய நிறங்களில் இருக்கலாம். அலகு பார்ப்பதற்குப் மிகப்பெரிதாக இருந்தாலும், அதிகக் கனம் கொண்டதன்று. ஏனெனில், அதில் நிறைய காற்றறைகள் உள்ளன. இப்பறவையின் கழுத்து சிறியதாகவும், மிகப்பெரிய அலகுக்கு ஏற்றாற்போல தலையின் அலுகுப்புறம் பெரியதாகவும் இருக்கிறது. இதன் கால்கள் குட்டையாகவும் வலிமை உடையதாகவும் இருக்கின்றன. இப்பறவையின் நாக்கு குறுகிய அகலம் உடையதாகவும் நீளமாகவும் இருக்கிறது. ஆண்பறவையும் பெண் பறவையும் ஒரே நிறம் கொண்டதாக இருக்கின்றன.


தூக்கான் பறவைகள் பழந்தின்னிப் பறவைகள் எனினும் சிறு பூச்சிகளையும், சிறு பல்லி போன்ற ஊர்வன விலங்குகளையும் உண்ணும். மரக்கிளைகளிலும், மரப்பொந்துகளிலும் கூடுகட்டி வாழ்கின்றன. இப்பறவைகள் அதிகம் இறைச்சல் எழுப்புகின்றன. உறங்கும்போது தம் தலையை முதுகுப்புறம் திருப்பி, தன் பெரிய அலகை தன் முதுகின் நடுவில் வைத்து உறங்குகின்றன. ஆண்டுக்கு ஒருமுறைதான் ஆணும் பெண்ணும் சேர்கின்றன. முட்டையிடும்போது பெரும்பாலும் 2-4 முட்டைகள்தான் இடுகின்றன. முட்டையில் இருந்து சுமார் 15 நாட்களில் குஞ்சு பொரித்தவுடன் அக்குஞ்சுகள் உடலில் தூவி ஏதும் இல்லாமல் இருக்கின்றன. பேரலகுப் பறவையின் குஞ்சுகள் சுமார் 8 கிழமைகள் (வாரங்கள்) கூட்டில் இருக்கின்றன. ஆண்பறவையும் பெண்பறவையும் குஞ்சு வளர்ப்பில் பங்குகொள்கின்றன. பேரலகுப் பறவைகள் பிறந்த நிலப்பகுதியிலேயே தம் வாழ்நாளைக் கழிக்கின்றன. சிறு கூட்டமாக (தொகுதியாக) வாழ்கின்றன. நெடுந்தொலைவு வலசையாகப் போவதில்லை.


தூக்கான் பறவைக்கு ஏன் இவ்வளவு பெரிய அலகு?


ஏன் இப் பறவைக்கு இவ்வளவு பெரிய அலகு உள்ளது என்று பல நூற்றாண்டுகளாக அறிவியலாளர்கள் வியந்து வந்தனர். ஆனால் அண்மையில் இதற்கான விடை கிடைத்துள்ளது. தூக்கான் பறவைகளிலேயே மிகப்பெரிய அலகு கொண்ட ராம்ஃபசுட்டோசு தோக்கோ (Ramphastos toco) என்னும் பறவையை சில ஆய்வாளர்கள் அகச்சிவப்புக் கதிர்படம் எடுத்து எப்படித் தன் உடல் வெப்பத்தை அலகின் வழியாக வெளியேற்றுகின்றது என்று கண்டுபிடித்தனர். இப்பறவைகளுக்கு வியர்வை வழியாக வெப்பத்தை வெளியேற்றும் இயக்கம் இல்லாதாதால், வெப்பம் அதிகரிக்கும்போது அலகுப்பகுதிக்கு குருதி ஓட்டத்தை அதிகரிப்பதால் வெப்பத்தை திறம்பட வெளியேற்றுகின்றது. சூழ் வெப்பநிலையைப் பொருத்தும், பறவையின் நடவடிக்கையைப் பொருத்தும் இப்பறவை தன் அலகு வழியாக 5% முதல் 100% நெருக்கமாக வெப்பத்தை வெளியேற்ற வல்லது. தூக்கான் அலகுகளில் உள்ள குருதிக்குழாய்கள் அதன் வெப்பத்தைத் திறம்பட வெளியேற்ற அமைந்துள்ளது போல இதுவரை ஆய்வுக்குள்ளான வேறு எந்தப் பறவைவைக்கும் இல்லை.


வெளி இணைப்புகள்

தூக்கான் – விக்கிப்பீடியா

Toucan – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.