பறவைகள் தொகுதியில் கொராசிபார்ம் வரிசையில் கிங்பிஷர் பெரும் குடும்பத்தில் வண்டு உண்ணிக் குடும்பத்தில் அடங்கும். உலகில் காணப்படும் பறவைகளில் மிகுதியான நிறங்களைக் கொண்டு காணப்படும் இனமாகும். 50 கி எடையும் 17 – 35 செ.மீ நீளமும் உடையது.
அமைப்பு
அலகு நீளமாகவும், கூர்மையாகவும், கீழ்ப்புறம் சிறிது வளைந்தும் காணப்படும். கால்கள் குட்டையாகவும், சிறியதாகவும், மீன்க்கொத்திப் பறவையை ஒத்தும் காணப்படும். இறகுகள் நீளமாகவும், கூர்மையாகவும் காணப்படும். நீலம் கலந்த பசுமை, பசுமை, சிவப்புப் போன்ற நிறங்களில் இறகுகள் காணப்படுகின்றன. தொண்டைப் பகுதி கண்கவரும் நிறத்தில் இருக்கும். சில குருவிகள் நீளமான வால்பகுதியையும் சில குருவிகள் பிளவுபட்ட வால்பகுதியையும் பெற்றுக் காணப்படும். இக்குருவிகளில் 7 பேரினங்களும் 24 வகைகளும் உள்ளன.
உணவு
மரங்களிலும் தந்திக் கம்பங்களில் மிகுந்து காணப்படும். கூடுகட்டி முட்டையிடும் தன்மையுடையது. கூடு மணலிலோ கூரைகளிலோ காணப்படும். பெண் பறவை உயர் அளவாக 5 முட்டைகள் இடும். புணர்தலுக்கு முன் இருபால் பறவைகளும் ஒன்றை ஒன்று கவருவதற்காகக் குரல் ஒலி எழுப்பும். இப்பறவை கரப்பான், வண்டு போன்றவற்றை இறகால் பிடித்து உண்ணும். பூச்சியைப் பிடித்தவுடன் கடினமான பகுதிகளில் அடித்து, அது செயலிழந்தவுடன் உண்கிறது.
வாழிடம்
பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் இப்பறவை காணப்பட்டாலும் நியூஸிலாந்தில் காணப்படுவதில்லை. மைதானம், காடு ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. இடம் பெயரும் தன்மையுடையது. குளிர் காலங்களில் வெப்ப மண்டலப் பகுதிகளுக்கு சென்று விடுகிறது.
வகைகள்
பச்சை நிற வால் பகுதியை உடைய பஞ்சுருட்டான் பறவை, சிறிய பஞ்சுருட்டான் பறவை எனப் பல வகையுண்டு. இவை சிறியனவாகவும் 7 செ.மீ நீளம் உடையனவாகவும் காணப்படும். மேல் பகுதி பச்சை நிறமாகவும், தொண்டைப் பகுதி மஞ்சளாகவும், வால் பகுதி சதுரமாகவும் இருக்கும். ஆப்பிரிக்கா, சஹாரா பகுதிகளில் இப்பறவைகளைக் காணலாம். சிவப்புப் பஞ்சுருட்டான் பறவை 26 செ.மீ நீளம் கொண்டிருக்கும். இப்பறவைகள் செனகல், உகாண்டா, கெமரூன் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. தொண்டைப் பகுதி சிவப்பு நிறத்தில் காணப்படும். கறுப்பு நிறப் பஞ்சுருட்டான் பறவை 20 செ.மீ நீளம் இருக்கும். இது உகாண்டாவில் மிகுந்து காணப்படுகிறது.