கருவளையத் தோல்குருவி (Glareola pratincola) சிவப்பு இறக்கை தோல்குருவி என அழைக்கப்படுகிறது. இது ஒரு கரையோரப் பறவையாகும்.
உடலமைப்பு
23 செ.மீ. – குறுகலான காலும், நீண்ட கூர்மையான இறகுகளும் பிளவுபட்ட நீண்டவாலும் கொண்ட இதன் தலையும் உடம்பும் மணல்பழுப்பாக இருக்கும். வெளிர் செம்பழுப்புத் தொண்டையும் கழுத்தைச் சுற்றிச் சங்கிலிபோல வளையக் கோடும் கொண்டது. மார்பு பழுப்பாகவும் வயிறு வெண்மையாகவும் இருக்கும்.
உணவு
குளிர்காலத்தில் வலசை வந்து ஆற்று மணல் படுகைகளில் பறந்தபடி உள்ளானைப் போல ஓடியாடி அலைந்து புழு பூச்சிகளைப் பிடித்துத் தின்னும்.
காணப்படும் பகுதிகள்
தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் காணப்பட்டதான குறிப்பு உள்ளது. கோடியக்கரை வழியாக இலங்கைக்கும் செல்லக் கூடும். பெரிய தோல் குருவியிலிருந்து பிரித்து இனம் காண்பது கடினம் ஆகையால் இது காணப்படும் இடங்கள் பற்றிய விரிவான குறிப்புகள் தொகுக்கப்படவில்லை. தோற்றத்தில் பெரிதும் இதனை ஒத்ததான பெரியதோல்குருவி குளிர்காலத்தில் வலசை வந்து நீர் வற்றிய ஆற்றுப் படுகைகளிலும் உழுதுபோடப்பட்ட புஞ்சைநிலங்களிலும், உழுது போடப்பட்ட புஞ்சைநிலங்களிலும் பெருங்கூட்டமாக கிர் ரிரி கிர் ரிரி எனக் குரல் கொடுத்தபடி பறந்து திரியக் காணலாம்.