கூப்பரின் புறாவடி பருந்து

கூப்பரின் புறாவடி வட அமெரிக்காவில் காணப்படும் ஓர் நடுத்தர அளவு பருந்து வகைக் கொன்றுண்ணிப் பறவையாகும். இதன் பரம்பல் தென்கனடாவிலிருந்து வட மெக்சிகோ வரை. கொன்றுண்ணிப் பறவைகளில் பொதுவாகக் காணப்படுவது போல இப்பருந்து வகையிலும் ஆணை விட பெண் உருவத்தில் பெரியதாய் இருக்கிறது. மிசிசிப்பி ஆற்றுக்குக் கிழக்கே காணப்படும் புறாவடி மேற்கே காணப்படும் பறவைகளை விட அளவில் பெரியவை. சில சமயங்களில் அவை இரண்டையும் தனித்தனி உள்ளினமாக சிலர் கருதினாலும் அவற்றின் உருவ அளவைத் தவிர வேறு எந்த வேறுபாடும் இல்லாததால் இப்பறவைக்கு உள்ளினங்கள் எதுவும் இல்லை. இதனை கோழிப் பருந்து, பெரிய புறாப் பருந்து போன்று பல்வேறு பெயர்களால் மக்கள் அழைக்கிறார்கள்.


பெயர்விளக்கம்


சார்லசு லுசியான் போனார்பாட்டே, வில்லியம் கூப்பரின் நினைவாக இதற்கு ஆங்கிலத்தில் (Cooper’s hawk, Accipiter cooperii) எனப் பெயரிட்டார். இதன் முக்கிய இரை புறாக்கள் என்பதாலும், வட அமெரிக்காவின் தென்னகத்தில் வாழும் மக்கள் அதனை (Great Pigeon Hawk) என்றழைப்பதாலும், இதனைத் தமிழ்மரபின் படி கூப்பரின் புறாவடி என்றழைக்கலாம்.


தோற்றமும் உடலமைப்பும்


கூப்பரின் புறாவடி காக்கையின் அளவை ஒத்த ஓர் பருந்து. நீண்ட குறுகிய வாலையும், தன் உடலுக்கு சற்றே பெரிய தலையையும் உடையது. ஆண் புறாவடி 35 முதல் 46 செமீ நீளமும் 220 முதல் 440 கிராம் எடையுமுடையது. ஆணைவிட சற்றே பெரியதான பெண் புறாவடி 42 முதல் 50 செமீ நீளமும், 330 முதல் 700 கிராம் எடையுமுடையது. கிழக்கில் காணப்படும் புறாவடிகள் மேற்கில் காணப்படும் பறவைகளைவிட சற்றே உருவத்தில் பெரியவை. அதன் இறக்கைகளின் நீளம் 42 முதல் 50 செமீ இருக்கும். இரு பாலும் ஒரே தோற்றமுடையது.


பரம்பல்


இது தென்கனடாவிலிருந்து வட மெக்சிகோ வரை வட அமெரிக்கா முழுவதும் காணப்படுகிறது. மெக்சிகோ வளைகுடாவை ஒட்டிய இடங்களிலும், தென் புளோரிடாவிலும் தென் டெக்சசிலும் தென்மேற்கு அரிசோனாவிலும் மட்டும் காணப்படுவதில்லை. தென் கனடாவிலும் புது இங்கிலாந்திலும் இனப்பெருக்கம் செய்யும் புறாவடிகள் குளிர்காலங்களில் வட அமெரிக்காவிற்கும், நடு அமெரிக்காவிற்கு தெற்கே உள்ள மெக்சிகோவிற்கும் வலசை போகின்றன. மற்ற இடங்களில் இருக்கும் பறவைகள் வலசை போவதில்லை.


வெளி இணைப்புகள்

கூப்பரின் புறாவடி – விக்கிப்பீடியா

Cooper’s hawk – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.